"ஒருநாள் சாயங்காலத்தில், தாவீது தன் படுக்கையிலிருந்து எழுந்து, ராஜஅரமனை உப்பரிகையின்மேல் உலாவிக்கொண்டிருந்தார்" (). அந்த நேரத்தில் தாவீது பெத்சேபாளைக் கண்டார். நாம் ஒருபோதும் பாவ சோதனைக்கு எட்டாத தூரத்தில் இருப்பதில்லை. வீட்டிலும் சரி, வெளியிலும் சரி, தீமைக்கு நேராக இழுக்கும் கவர்ச்சிகளைச் சந்திக்க வேண்டிய ஆபத்து நமக்கு இருக்கிறது; காலை வேளை ஆபத்தோடு தொடங்குகிறது, மாலை வேளையின் நிழல்கள் இன்னும் நம்மை அச்சுறுத்திக் கொண்டே இருக்கின்றன. தேவன் காக்கிறவர்களே நன்றாய்க் காக்கப்படுகிறார்கள், ஆனால் ஆயுதமில்லாமல் உலகிற்குள் புறப்பட்டுச் செல்பவர்களுக்கோ, அல்லது தன் சொந்த வீட்டில் உலாவத் துணிபவர்களுக்கோ ஐயோ! தங்களைப் பாதுகாப்பாய் இருப்பதாக நினைப்பவர்களே மற்றவர்களை விட அதிக ஆபத்திற்கு ஆளாகிறார்கள். பாவத்தின் கவசத்தைத் தரிப்பவன் சுய-நம்பிக்கை உள்ளவனாய் இருக்கிறான்.
தாவீது கர்த்தருடைய யுத்தங்களை நடத்துவதில் ஈடுபட்டிருக்க வேண்டும், அதற்குப் பதிலாக அவர் எருசலேமில் தங்கி, சுகபோக இளைப்பாறுதலுக்குத் தம்மை ஒப்புக்கொடுத்தார், ஏனெனில் அவர் சாயங்கால வேளையில்தான் தன் படுக்கையிலிருந்து எழுந்தார். சோம்பலும் சுகபோகமும் பிசாசின் வேட்டை நாய்களாக இருந்து அவனுக்கு ஏராளமான இரையைத் தேடித்தருகின்றன. தேங்கி நிற்கும் தண்ணீரில் நச்சுப் பூச்சிகள் பெருகுகின்றன, பராக்காய் விடப்பட்ட நிலம் சீக்கிரத்தில் முட்களும் முட்புதர்களும் நிறைந்த காடாய் மாறுகிறது. நாம் சுறுசுறுப்பாகவும் பிரயோஜனமுள்ளவர்களாகவும் இருக்க இயேசுவின் நெருங்கி ஏவுகிற அன்பு நமக்குத் தேவை! இஸ்ரவேலின் ராஜா நாளின் இறுதியில் சோம்பலோடு தன் படுக்கையை விட்டு எழுந்து, உடனே பாவ சோதனையில் விழுவதைக் காணும்போது, நான் எச்சரிக்கையடைந்து, என் வாசலைக் காக்கப் பரிசுத்த விழிப்புணர்வை ஏற்படுத்துவேனாக.
ராஜா தனிமைக்காகவும் ஜெபத்திற்காகவும் தன் அரமனை உப்பரிகையின் மேல் ஏறியிருக்கக் கூடுமா? அப்படி இருந்தால், எந்த இடத்தையும், அது எவ்வளவு மறைவான இடமாய் இருந்தாலும், பாவத்திலிருந்து தப்பிக்கும் புகலிடமாய் எண்ணக் கூடாது என்பதற்கு இது எப்பேர்ப்பட்ட எச்சரிக்கை! நம்முடைய இருதயங்கள் நெருப்புப் பெட்டியைப் போலவும், பொறிகள் ஏராளமாகவும் இருக்கும்போது, தீப்பற்றாதபடி எல்லா இடங்களிலும் நாம் மிகுந்த ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும். சாத்தானால் உப்பரிகையின் மேலும் ஏற முடியும், அந்தரங்க அறைக்குள்ளும் நுழைய முடியும்; அந்த அசுத்த ஆவியை நாம் வெளியே பூட்டிவிட்டாலும், கிருபை நம்மைத் தடுக்காவிட்டால் நம்முடைய சொந்த அசுத்தங்களே நம்மை அழிக்கப் போதுமானவை. வாசகரே, மாலை நேரத்துச் சோதனைகளைக் குறித்து எச்சரிக்கையாயிரு. பாதுகாப்பாய் இருப்பதாக எண்ணாதே. சூரியன் மறைந்துவிட்டது, ஆனால் பாவம் விழித்துக் கொண்டிருக்கிறது. பகலில் காப்பவர் நமக்குத் தேவைப் படுவது போல, இரவிலும் ஒரு காவலாளி நமக்குத் தேவை. ஓ ஆசீர்வதிக்கப்பட்ட ஆவியானவரே, இன்று இரவு எல்லாத் தீமைக்கும் எங்களைக் விலக்கிக் காத்தருளும். ஆமென்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.