JUL 17 MORNING

1 தெசலோனிக்கேயர் 1:4

எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.

1 தெசலோனிக்கேயர் 1:4

எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட சகோதரரே, உங்களைக்குறித்து நாங்கள் அறிந்திருக்கிறது என்னவென்றால்" (). அநேகர் கிறிஸ்துவை நோக்குவதற்கு முன்பே தங்களின் தெரிந்துகொள்ளுதலை அறிய விரும்புகிறார்கள், ஆனால் அந்த வழியில் அதை அறிய முடியாது, அது "இயேசுவை நோக்கிப் பார்ப்பதினால்" மாத்திரமே கண்டறியப்படக் கூடியது. உன்னுடைய சொந்த தெரிந்துகொள்ளுதலை நீ நிச்சயிக்க விரும்பினால்;—பின்வரும் முறைமையினாலே தேவனுக்கு முன்பாக உன்னுடைய இருதயத்தை உறுதிப்படுத்திக் கொள். நீ உன்னை இழந்த, குற்றவாளியான பாவி என்று உணருகிறாயா? உடனே கிறிஸ்துவின் சிலுவையண்டை சென்று, இயேசுவிடம் அதை அறிக்கை செய், "என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை" என்று வேதத்தில் வாசித்ததாக அவரிடம் கூறு (). "பாவிகளை இரட்சிக்கக் கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார் என்கிற வார்த்தை உண்மையும் எல்லா அங்கீகரிப்புக்கும் பாத்திரமுமானது" () என்று அவர் சொல்லியிருப்பதை அவரிடம் சொல். இயேசுவை நோக்கிப் பார்த்து அவர்மேல் விசுவாசம் வை, அப்போது உன்னுடைய தெரிந்துகொள்ளுதலின் அத்தாட்சியை நீ உடனே பெற்றுக்கொள்வாய், ஏனெனில் நீ விசுவாசிப்பது எவ்வளவு நிச்சயமோ, நீ தெரிந்துகொள்ளப்பட்டவன் என்பதும் அவ்வளவு நிச்சயம். உன்னை நீயே முற்றிலும் கிறிஸ்துவுக்கு ஒப்புக்கொடுத்து அவரை நம்பினால், நீ தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களில் ஒருவன்; ஆனால் நீ நின்று, "நான் தெரிந்துகொள்ளப்பட்டவனா என்று முதலில் அறிய வேண்டும்" என்று சொன்னால், நீ எதைக்கேட்கிறாய் என்று அறியாமல் கேட்கிறாய். நீ எவ்வளவு குற்றவாளியாய் இருந்தாலும், எப்படி இருக்கிறாயோ அப்படியே இயேசுவிடம் வா. தெரிந்துகொள்ளுதலைப் பற்றிய எல்லாக் குழப்பமான கேள்விகளையும் ஒழித்துவிடு. நேராகக் கிறிஸ்துவிடம் சென்று அவருடைய காயங்களுக்குள் ஒளிந்துகொள், அப்போது உன்னுடைய தெரிந்துகொள்ளுதலை நீ அறிவாய். பரிசுத்த ஆவியானவரின் நிச்சயம் உனக்கு அருளப்படும், அதினாலே உன்னால், "நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன், நான் அவரிடத்தில் ஒப்புவித்ததை அவர் அந்நாள்வரைக்கும் காத்துக்கொள்ள வல்லவராயிருக்கிறாரென்று நிச்சயித்துமிருக்கிறேன்" () என்று சொல்ல முடியும். கிறிஸ்து நித்திய ஆலோசனை சபையில் இருந்தார்; நீ தெரிந்துகொள்ளப்பட்டவனா இல்லையா என்று அவராலே உனக்குச் சொல்ல முடியும்; ஆனால் வேறு எந்த வழியிலும் உன்னால் அதைக் கண்டறிய முடியாது. நீ போய் அவர்மேல் உன்னுடைய நம்பிக்கையை வை, அப்போது அவருடைய பதில்—"அநாதி சிநேகத்தால் உன்னைச் சிநேகித்தேன்; ஆதலால் காருணியத்தால் உன்னை இழுத்துக்கொள்ளுகிறேன்" () என்பதாக இருக்கும். நீ அவரைத் தெரிந்துகொள்ளும்போது, அவர் உன்னைத் தெரிந்துகொண்டதில் உனக்கு எந்தச் சந்தேகமும் இருக்காது.

"இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கும் நாம், தேவனுடைய தெரிந்துகொள்ளுதலின்படி குமாரராயிருக்கிறோம்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.