"வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசத்தை அவருக்குக் குடிக்கக் கொடுத்தார்கள்; அவரோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை" (). இரட்சகர் வெள்ளைப்போளம் கலந்த திராட்சரசக் கிண்ணத்தைத் தன் உதடுகளிலிருந்து தள்ளிவிட்டார் என்ற உண்மையினுள்ளே ஒரு பொன்னான சத்தியம் மறைந்திருக்கிறது. பூர்வகாலத்தில் தேவகுமாரன் பரலோகத்தின் உயரங்களில் நின்று, கீழே நம்முடைய உலகத்தை நோக்கிய போது, மனிதத் துக்கத்தின் மகா ஆழங்கள் வரையிலான நீண்ட இறங்குதலை அளவிட்டார்; பாவநிவிர்த்திக்குத் தேவைப்படும் சகல வேதனைகளின் கூட்டுத்தொகையையும் கணக்கிட்டார், ஒரு துளியையும் குறைக்கவில்லை. தகுதியான ஒரு பாவநிவிர்த்திப் பலியைச் சமர்ப்பிக்க, உன்னதமான மகிமையின் சிங்காசனத்திலிருந்து மகா ஆழமான துக்கத்தின் சிலுவை வரை, உன்னதத்திலிருந்து தாழ்ந்தது வரை முழு வழியிலும் தான் சென்றாக வேண்டும் என்று அவர் உன்னதமாய் தீர்மானித்தார். தூக்கத்தை வரவழைக்கும் தன்மையைக் கொண்ட இந்த வெள்ளைப்போளக் கிண்ணம், துக்கத்தின் கடைசி எல்லைக்குச் சற்று முன்பாகவே அவரைத் தடுத்து நிறுத்தியிருக்கும், ஆகவேதான் அவர் அதை மறுத்துவிட்டார். தன் ஜனங்களுக்காகச் சகிக்கத் தான் ஏற்றுக்கொண்ட எதையும் செய்யாமல் அவர் பாதியில் நிறுத்த விரும்பவில்லை. ஆ! நமக்குக் கேடு விளைவிக்கக் கூடிய ஆறுதல்களுக்காக நம்மில் எத்தனை பேர் ஏங்கியிருக்கிறோம்! வாசகரே, பாரமான ஊழியத்திலிருந்தோ அல்லது பாடுகளிலிருந்தோ விடுபட வேண்டும் என்று எப்போதாகிலும் கோபத்தோடும் சுயசித்தத்தோடும் நீங்கள் ஜெபித்திருக்கிறீர்களா? பராமரிப்பு ஒரே அடியில் உங்களுடைய கண்களின் வாஞ்சையை உங்களிடமிருந்து பறித்துவிட்டது. கிறிஸ்தவனே சொல், "நீ விரும்பினால் உனக்குப் பிரியமானவர் பிழைப்பார், ஆனால் தேவனுக்கு அவமானம் உண்டாகும்" என்று சொல்லப்பட்டிருந்தால், நீ அந்தச் சோதனையைத் தள்ளிவிட்டு, "உமது சித்தம் செய்யப்படுவதாக" என்று சொல்லியிருக்க முடியுமா? "என் ஆண்டவரே, வேறு காரணங்களுக்காக நான் பாடுபடத் தேவையில்லை என்றாலும், பாடுபடுவதினாலே உம்மை அதிகமாய் கனப்படுத்த முடியுமானால், என் பூமிக்குரிய எல்லாவற்றின் இழப்பும் உமக்கு மகிமையைக் கொண்டுவருமானால், அப்படியே ஆகட்டும். உமது கனத்தின் பாதையில் குறுக்கிடுமானால் நான் அந்த ஆறுதலை மறுக்கிறேன்" என்று சொல்ல முடிவது எப்பேர்ப்பட்ட இனிமையானது. நாம் இவ்விதமாய் நம் ஆண்டவரின் அடிச்சுவடுகளில் அதிகமாய் நடந்து, அவருடைய நாமத்தினாலே சோதனைகளைச் சந்தோஷமாய்ச் சகித்து, அவர் நமக்குத் தந்த கிரியையை நாம் முடிப்பதற்குத் தடையாய் இருக்கும் போது, சுயத்தையும் ஆறுதலையும் பற்றிய சிந்தனையை உடனே மனப்பூர்வமாய் ஒழித்துவிடுவோமாக. மகா பெரிய கிருபை தேவைப்படுகிறது, ஆனால் மகா பெரிய கிருபை அளிக்கப்பட்டும் இருக்கிறது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.