"மோசே முதற்கொண்டு சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விரித்துக்காண்பித்தார்" (). எம்மாவு பாதையில் சென்ற அந்த இரண்டு சீஷர்களுடைய பயணம் மிகவும் பிரயோஜனமான பயணமாய் இருந்தது. அவர்களோடு கூடச் சென்று போதித்தவர் போதகர்களிலேயே சிறந்த போதகராய் இருந்தார்; ஞானம் மற்றும் அறிவின் பொக்கிஷங்கள் யாவும் மறைந்திருக்கிற ஆயிரத்தில் ஒருவரான உன்னத விரிவுரையாளராய் அவர் இருந்தார். கர்த்தராகிய இயேசு நற்செய்தியின் பிரசங்கியாராக இறங்கி வர மனதானார், இரண்டு பேர் மாத்திரமே இருந்த சபைக்கு முன்பாகத் தன் ஊழியத்தை நடப்பிக்க அவர் வெட்கப்படவில்லை, இப்போது ஒரு தனி மனிதனுக்குப் போதகராக இருக்கவும் அவர் மறுப்பதில்லை. அத்தகைய உன்னத போதகருடைய ஐக்கியத்தை நாம் நாடுவோமாக, ஏனெனில் அவர் நமக்கு ஞானமாக மாறும் வரை இரட்சிப்பிற்குரிய ஞானத்தை நாம் ஒருபோதும் பெற முடியாது.
இந்த ஒப்பிடமுடியாத போதகர் புத்தகங்களிலேயே சிறந்த புத்தகத்தைத் தன் பாடப்புத்தகமாகப் பயன்படுத்தினார். புதிய சத்தியங்களை வெளிப்படுத்த வல்லவராய் இருந்தாலும், அவர் பழையவற்றையே விரித்துரைக்க விரும்பினார். போதிப்பதில் மிகவும் பிரயோஜனமான வழி எது என்பதை அவர் தமது சர்வஞானத்தினால் அறிந்திருந்தார், உடனே மோசேயின் நூல்களுக்கும் தீர்க்கதரிசிகளின் நூல்களுக்கும் திரும்புவதின் மூலம், ஞானத்திற்கான மிக உறுதியான பாதை மனித புத்தகங்களை வாசிப்பதோ, தர்க்கம் செய்வதோ, அல்லது ஆராய்ச்சி செய்வதோ அல்ல, மாறாக தேவனுடைய வார்த்தையைத் தியானிப்பதே என்பதைக் காண்பித்தார். பரலோக அறிவில் ஆவிக்குரிய பிரகாரமாய் ஐசுவரியவான்களாவதற்கு மிக எளிய வழி இந்த வைரச் சுரங்கத்தைத் தோண்டுவதும், இந்த பரலோகக் கடலிலிருந்து முத்துக்களைச் சேகரிப்பதுமே ஆகும். இயேசு தாமே மற்றவர்களை ஐசுவரியவான்களாக்க விரும்பியபோது, அவர் பரிசுத்த வேதாகமமாகிய கற்பாறையிலேயே கிரியை செய்தார்.
ஆசீர்வதிக்கப்பட்ட அந்த இருவர் தலைப்புகளிலேயே சிறந்த தலைப்பைத் தியானிக்கும்படி நடத்தப்பட்டார்கள், ஏனெனில் இயேசு இயேசுவைப் பற்றிப் பேசினார், தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை விரித்துக்காண்பித்தார். இங்கே வைரம் வைரத்தை அறுத்ததல்லவா, இதைவிட வியக்கத்தக்கது என்ன இருக்க முடியும்? அரமனையின் எஜமான் தன் சொந்தக் கதவுகளைத் திறந்து, விருந்தினர்களைத் தன் பந்திக்கு நடத்தி, தன் சொந்த இன்பப் பொருட்களை அதன் மேல் வைத்தார். வயலில் பொக்கிஷத்தை மறைத்து வைத்த அவரே, அதைத் தேடினவர்களை அதற்கு நேராக நடத்தினார். நம்முடைய ஆண்டவர் சுபாவமாகவே மிகவும் இனிமையான தலைப்புகளைப் பற்றிப் பேசுவார், அவருடைய சொந்த ஆளுமையையும் அவருடைய கிரியையையும் விட இனிமையான ஒன்றை அவர் கண்டடைய முடியாது: இவைகளை நோக்கமாகக் கொண்டே நாம் எப்போதுமே வேதத்தை ஆராய வேண்டும். வேதப் புத்தகத்தை இயேசுவோடு கூட நம்முடைய போதகராகவும் நம்முடைய பாடமாகவும் படிப்பதற்குக் கிருபை கிடைப்பதாக!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.