"உன் மீட்பர்" (). மீட்பராகிய இயேசு முற்றிலும் நம்முடையவர், என்றென்றைக்குமாய் நம்முடையவர். கிறிஸ்துவின் எல்லா ஊழியங்களும் நம்முடைய காரியத்திற்காகவே நடத்தப்படுகின்றன. அவர் நமக்காக ராஜாவாகவும், நமக்காக ஆசாரியனாகவும், நமக்காகத் தீர்க்கதரிசியாகவும் இருக்கிறார். மீட்பரின் புதிய பட்டம் ஒன்றை நாம் வாசிக்கும் போதெல்லாம், மற்ற பெயர்களைப் போலவே அந்த நாமத்தின் கீழும் அவர் நம்முடையவர் என்று நமக்குச் சொந்தமாக்கிக் கொள்வோமாக. மேய்ப்பனின் தடி, பிதாவின் பிரம்பு, அதிபதியின் பட்டயம், ஆசாரியனின் பாகை, பிரபுவின் செங்கோல், தீர்க்கதரிசியின் சால்வை யாவும் நம்முடையவை. நம்மை உயர்த்துவதற்கு இயேசு பயன்படுத்தாத எந்த ஒரு மகிமையும் அவரிடம் இல்லை, நம்மைக் காப்பதற்கு அவர் நடப்பிக்காத எந்த ஓர் உரிமையும் அவரிடம் இல்லை. அவருடைய தேவத்துவத்தின் பரிபூரணமே நம்முடைய ஒருக்காலும் தவறாத, வற்றாத பொக்கிஷ அரமனையாய் இருக்கிறது.
நமக்காக அவர் தம்மீது ஏற்றுக்கொண்ட அவருடைய மனிதத்துவமும், அதன் சகல பூரணத்திலும் நம்முடையதாய் இருக்கிறது. நம்முடைய கிருபையுள்ள ஆண்டவர் கறையற்ற ஒரு குணத்தின் மாசிலாத நற்பண்பை நமக்கு அளிக்கிறார்; அர்ப்பணிக்கப்பட்ட வாழ்க்கையின் புண்ணியமுள்ள வல்லமையை நமக்குத் தருகிறார்; கீழ்ப்படிதலோடு கூடிய அடக்கத்தினாலும் ஓயாத ஊழியத்தினாலும் சம்பாதிக்கப்பட்ட பலனை நமக்கு வாரி வழங்குகிறார். அவர் தன் வாழ்க்கையின் மாசற்ற அங்கியை நம்மை மூடும் அழகிய ஆடையாக மாற்றுகிறார்; தன் குணத்தின் ஒளிரும் நற்பண்புகளை நம்முடைய ஆபரணங்களாகவும் நவரத்தினங்களாகவும் மாற்றுகிறார்; தன் மரணத்தின் மனித அறிவிற்கு எட்டாத சாந்த குணத்தை நம்முடைய மேட்டிமையாகவும் மகிமையாகவும் மாற்றுகிறார். தேவன் எவ்வாறு மனிதனிடம் இறங்கி வந்தார் என்பதைக் கற்றுக்கொள்ளத் தன் முன்னணையையும்; மனிதன் எவ்வாறு தேவனிடம் ஏறிச் செல்லலாம் என்பதைக் கற்பிக்கத் தன் சிலாக்கியமான சிலுவையையும் நமக்குச் சுதந்தரமாய் விட்டுச் சென்றிருக்கிறார். அவருடைய எல்லா எண்ணங்களும், உணர்வுகளும், செயல்களும், பேச்சுகளும், அற்புதங்களும், பரிந்துபேசுதல்களும் நமக்காகவே இருந்தன. நமக்காகவே அவர் துக்கத்தின் பாதையில் நடந்தார், தன் வாழ்க்கையின் சகல பிரயாசங்களின் பூரண விளைவுகளையும் நமக்குத் தன் பரலோக சுதந்தரமாக மாற்றியிருக்கிறார். அவர் கடந்த காலத்தில் எப்படியோ அப்படியே இப்போதும் நம்முடையவராயிருக்கிறார்; அவர் ஸ்தோத்தரிக்கப்பட்ட ஒரே அதிபதியும், ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாய் இருந்தாலும், தம்மை "நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்து" என்று ஒப்புக்கொள்ள அவர் வெட்கப்படுவதில்லை (). கிறிஸ்து எல்லா இடங்களிலும் எல்லா வழியிலும் நம்முடைய கிறிஸ்துவாய் இருக்கிறார், என்றென்றைக்குமாய் மகா மிகுதியாய் அநுபவிக்கத்தக்கவர். ஓ என் ஆத்துமாவே, பரிசுத்த ஆவியானவரின் வல்லமையினாலே இன்று காலை அவரை, "உன் மீட்பர்" என்று அழை.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.