"என் சகோதரியே! என் மணவாட்டியே! என் சிங்காரவனத்திற்குள் பிரவேசித்தேன்" (). விசுவாசியின் இருதயமே கிறிஸ்துவின் சிங்காரவனம். அவர் அதைத் தன் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் வாங்கினார், அவர் அதற்குள் பிரவேசித்து அதைத் தனக்குச் சொந்தமானது என்று உரிமை பாராட்டுகிறார். ஒரு தோட்டம் என்பது பிரித்தெடுக்கப்பட்ட இடத்தைக் குறிக்கிறது. அது திறந்த வெளியல்ல; அது வனாந்தரமல்ல; அது சுற்றிலும் மதில்களால் அல்லது வேலிகளால் அடைக்கப்பட்டது. சபையாரும் உலகத்தாரும் பிரிந்திருக்கும் அந்த மதிலின் எல்லை இன்னும் பரந்ததாகவும் பலமுள்ளதாகவும் மாறுவதைக் காண முடிந்தால் நலமாயிருக்கும். கிறிஸ்தவர்கள், "சரி, இதில் ஒரு கேடும் இல்லை; அதில் ஒரு தீங்கும் இல்லை" என்று சொல்லி, உலகத்திற்கு முடிந்தவரை நெருங்கி வாழப் பிரயாசப்படுவதைக் கேட்கும்போது மனதிற்குத் துக்கமாய் இருக்கிறது. உலக ஒழுங்குகளுக்கு எந்தளவிற்கு ஒத்துப் போகலாம் என்ற கேள்வியை எழுப்பக் கூடிய அந்த ஆத்துமாவில் கிருபையின் அலை மிகவும் தாழ்ந்த எல்லையிலேயே இருக்கிறது. தோட்டம் என்பது அழகின் இடமாய் இருக்கிறது, அது உழப்படாத பாழடைந்த நிலங்களை விட மிகவும் மேலானது. உண்மையான கிறிஸ்தவன் தன் வாழ்க்கையில் மிகச் சிறந்த ஒழுக்கசீலனைக் காட்டிலும் மேலானவனாக இருக்கத் தேட வேண்டும், ஏனெனில் கிறிஸ்துவின் தோட்டம் உலகிலுள்ள எல்லாவற்றைக் காட்டிலும் மிகச் சிறந்த புஷ்பங்களை உண்டாக்க வேண்டும் அல்லவா. கிறிஸ்துவின் தகுதிகளோடு ஒப்பிடும்போது மிகச் சிறந்ததும் அற்பமானதே; வாடிப் போன மற்றும் சிறிய செடிகளைக் கொடுத்து நாம் அவரைத் தள்ளிவிடக் கூடாது. இயேசு தனக்குச் சொந்தமானது என்று அழைக்கும் இடத்தில் மிகவும் விசித்திரமான, ஐசுவரியமான, விசேஷித்த லீலி புஷ்பங்களும் ரோஜா மலர்களும் பூக்க வேண்டும். தோட்டம் என்பது வளர்ச்சியின் இடமாய் இருக்கிறது. பரிசுத்தவான்கள் எப்போதும் வெறும் மொட்டுகளாகவும் புஷ்பங்களாகவும் மாத்திரம் வளர்ச்சி பெறாமல் இருக்கக் கூடாது. நாம் கிருபையிலும், நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் அறிவிலும் வளர வேண்டும் (). இயேசுவே தோட்டக்காரனாயும், பரிசுத்த ஆவியானவரே மேலேயிருந்து இறங்கும் பனியாயும் இருக்கும் இடத்தில் வளர்ச்சி துரிதமானதாய் இருக்க வேண்டும். தோட்டம் என்பது தனிமையின் இடமாய் இருக்கிறது. அப்படியே கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும், உலகத்தாருக்குத் தம்மை வெளிப்படுத்தாத விதத்தில் நமக்குத் தம்மை வெளிப்படுத்தும்படி, நம்முடைய ஆத்துமாக்களைத் தமக்கென்று ஒதுக்கப்பட்ட இடமாய் வைத்திருக்க விரும்புகிறார் (). ஓ, கிறிஸ்தவர்கள் இன்னும் அதிகமாய்த் தனித்திருந்தால், தங்களின் இருதயங்களைக் கிறிஸ்துவுக்கென்று இன்னும் ஜாக்கிரதையாய்ப் பூட்டி வைத்திருந்தால் நலமாயிருக்கும்! நாம் பெரும்பாலும் மார்த்தாளைப் போலப் பலவித ஊழியங்களினால் நம்மைக் கவலைப்படுத்திக் கலங்கச் செய்கிறோம், அதனால் மரியாளுக்கு இருந்தது போலக் கிறிஸ்துவிற்கான இடம் நம்மிடம் இருப்பதில்லை, நாம் அவருடைய பாதப்படியில் உட்கார வேண்டிய விதத்தில் உட்காருவதுமில்லை. கர்த்தர் இன்று தமது கிருபையின் இனிமையான மழையினால் தமது தோட்டத்தை நனைப்பாராக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.