"அவர் நின்று, கர்த்தரின் பெலத்தோடே... மேய்ப்பார்" (). தமது சபையில் கிறிஸ்துவின் ஆளுகை மேய்ப்பனான ராஜாவின் ஆளுகையாய் இருக்கிறது. அவருக்கு மேலாதிக்கம் உண்டு, ஆனால் அது தேவையுள்ளதும் அன்புள்ளதுமான தன் மந்தையின் மேல் ஞானமும் கனிவுமுள்ள ஒரு மேய்ப்பனுக்கு இருக்கும் மேன்மையாய் இருக்கிறது; அவர் கட்டளையிடுகிறார், கீழ்ப்படிதலைப் பெற்றுக்கொள்கிறார், ஆனால் அது நன்றாய்ப் பராமரிக்கப்படும் ஆடுகளின் மனப்பூர்வமான கீழ்ப்படிதலாய் இருக்கிறது, தாங்கள் நன்றாய் அறிந்திருக்கிற தங்களின் பிரியமான மேய்ப்பனுக்கு அவைகள் சந்தோஷமாய்ச் செலுத்தும் கீழ்ப்படிதலாய் இருக்கிறது. அவர் அன்பின் பலத்தினாலும் நன்மையின் ஆற்றலினாலும் அரசாளுகிறார்.
அவருடைய அரசாங்கம் தன் சுபாவத்தில் நடைமுறைக்குரியது. "அவர் நின்று மேய்ப்பார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது. சபையின் மாபெரும் தலையானவர் தமது ஜனங்களின் தேவைகளைச் சந்திப்பதில் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருக்கிறார். அவர் வெற்று நிலையில் சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்திருக்கவில்லை, அல்லது அரசாங்கத்தில் செலுத்தாமல் தன் செங்கோலை ஏந்தியிருக்கவில்லை. இல்லை, அவர் நின்று மேய்க்கிறார். மூல பாஷையில் "மேய்ப்பார்" என்ற வார்த்தை கிரேக்க பாஷையிலுள்ள ஒரு வார்த்தைக்கு ஒத்திருக்கிறது, அதனுடைய பொருள் மேய்ப்பனுக்குரிய ஊழியங்களைச் செய்வது, மேய்ப்பனிடமிருந்து எதிர்பார்க்கப்படும் எல்லாவற்றையும் செய்வது: வழிநடத்துவது, கண்காணிப்பது, பாதுகாப்பது, நிலைநிறுத்துவது, பராமரிப்பது, மற்றும் மேய்ப்பதாகும்.
அவருடைய அரசாங்கம் தன் கால அளவில் மாறாதது. "அவர் நின்று மேய்ப்பார்" என்று சொல்லப்பட்டிருக்கிறது; "அவர் இப்போதும் அப்போதும் மேய்த்துவிட்டு, தன் நிலையை விட்டு விலகிவிடுவார்" என்று சொல்லப்படவில்லை; "அவர் ஒருநாள் எழுப்புதலைத் தந்துவிட்டு, அடுத்த நாள் தன் சபையை வறட்சிக்கு விட்டுவிடுவார்" என்றும் சொல்லப்படவில்லை. அவருடைய கண்கள் ஒருபோதும் உறங்குவதில்லை, அவருடைய கரங்கள் ஒருபோதும் இளைப்பாறுவதில்லை; அவருடைய இருதயம் அன்பினால் துடிப்பதை ஒருபோதும் நிறுத்துவதில்லை, அவருடைய தோள்கள் தன் ஜனங்களின் பாரங்களைச் சுமப்பதில் ஒருபோதும் சோர்வடைவதில்லை.
அவருடைய அரசாங்கம் தன் செயலில் பயனுள்ள வல்லமையுடையது; "அவர் யெகோவாவின் பெலத்தோடே மேய்ப்பார்." கிறிஸ்து எங்கே இருக்கிறாரோ, அங்கே தேவன் இருக்கிறார்; கிறிஸ்து எதைச் செய்கிறாரோ, அது உன்னதமானவரின் செயலே ஆகும். ஓ! இன்று தமது ஜனங்களின் காரியங்களை நடத்துபவராக நிற்கும் அவரே மெய்யான தேவனுக்கு மெய்யான தேவனாய் இருக்கிறார், அவருக்கு முன்பாக ஒவ்வொரு முழங்காலும் முடங்கும் என்பதைக் சிந்திப்பது சந்தோஷமான சத்தியமாய் இருக்கிறது. எவருடைய மனிதத்துவம் நம்மோடு ஐக்கியப்படுகிறதோ, எவருடைய தெய்வீகம் நம்மைக் காக்கிறதோ அத்தகைய மேய்ப்பனுக்குச் சொந்தமான நாம் பாக்கியவான்கள். அவருடைய மேய்ச்சலின் ஜனங்களாக நாம் அவருக்கு முன்பாக ஆராதித்து நமஸ்கரிப்போமாக ().
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.