"அவர்கள் எனக்கு மறைவாய் வைத்த வலைக்கு என்னை விலக்கி விடுவியும்; நீரே என் பெலன்" (). நம்முடைய ஆவிக்குரிய சத்துருக்கள் பாம்பின் சந்ததியாய் இருக்கிறார்கள், தந்திரத்தினாலே நம்மை வலையில் அகப்படுத்தத் தேடுகிறார்கள். நமக்கு முன்பாக இருக்கும் இந்த ஜெபம் விசுவாசி ஒரு பறவையைப் போல அகப்பட்டுக்கொள்ள சாத்தியமுண்டு என்று ஊகிக்கிறது. வேடன் தன் வேலையை அவ்வளவு தந்திரமாய் செய்கிறான், எளியவர்கள் சீக்கிரத்தில் வலையினால் சூழப்படுகிறார்கள். சாத்தானுடைய வலைகளிலிருந்தும் சிறைப்பட்டவன் விடுவிக்கப்படலாம் என்று இந்த வசனம் கேட்கிறது; இது ஏற்ற விண்ணப்பம், கொடுக்கப்படக் கூடிய ஒன்று: சிங்கத்தின் தாடைகளின் நடுவிலிருந்தும், நரகத்தின் வயிற்றிலிருந்தும் நித்திய அன்பு பரிசுத்தவானை இரட்சிக்க முடியும் (). சோதனைகளின் வலையிலிருந்து ஓர் ஆத்துமாவை இரட்சிக்கப் பலத்த இழுவை தேவைப்படலாம், பொல்லாத தந்திரத்தின் வலைகளிலிருந்து ஒரு மனிதனை விடுவிக்கப் பராக்கிரமமுள்ள இழுவை தேவைப்படலாம், ஆனால் கர்த்தரோ ஒவ்வொரு நெருக்கடிக்கும் ஏற்றவராயிருக்கிறார், வேடனின் மகா தந்திரமாய் வைக்கப்பட்ட வலைகளாலும் அவருடைய தெரிந்துகொள்ளப்பட்டவர்களைப் பிடித்து வைக்க முடியாது. வலையை வைப்பதில் அவ்வளவு திறமையுள்ளவர்களுக்கு ஐயோ; மற்றவர்களைச் சோதிக்கிறவர்கள் தாங்களே அழிக்கப்படுவார்கள்.
"நீரே என் பெலன்." இந்தச் சில வார்த்தைகளில் எப்பேர்ப்பட்ட விவரிக்க முடியாத இனிமையைக் கண்டடைய முடியும்! பரலோகப் பெலனைப் பற்றிக்கொள்ள முடி யும் போது, நாம் எப்பேர்ப்பட்ட சந்தோஷத்தோடு பிரயாசங்களைச் சந்திக்கலாம், எப்பேர்ப்பட்ட பூரிப்போடு பாடுகளைச் சகிக்கலாம். தெய்வீக வல்லமை நம் சத்துருக்களின் சகல பிரயாசங்களையும் கிழித்தெறியும், அவர்களின் கொள்கைகளைக் குழப்பும், அவர்களின் தந்திரமான உபாயங்களை முறியடிக்கும்; தன் பக்கத்தில் இத்தகைய நிகரற்ற பலத்தைக் கொண்டிருக்கும் மனிதன் பாக்கியவான். தாழ்ந்த தந்திரத்தின் வலைகளில் அகப்படும் போது நம்முடைய சொந்தப் பலன் மிகக் குறைந்த ஊழியத்தையே செய்யும், ஆனால் கர்த்தருடைய பலனோ எப்போதுமே சிலாக்கியமானதாய் இருக்கிறது; நாம் அதை நோக்கிக் கூப்பிட வேண்டியதுதான், அது நமக்கு அருகிலேயே இருப்பதைக் காண்போம். விசுவாசத்தினாலே நாம் இஸ்ரவேலின் பராக்கிரமமுள்ள தேவனுடைய பலனை மாத்திரம் சார்ந்திருந்தால், நம்முடைய பரிசுத்த நம்பிக்கையை ஜெபத்தில் ஒரு வாதமாகப் பயன்படுத்தலாம்.
"ஆண்டவரே, எப்போதுமே உமது முகத்தைத் தேடுகிறோம்: நாங்கள் சோதிக்கப்பட்டவர்களும், ஏழைகளும், பலவீனர்களுமாய் இருக்கிறோம்; தாழ்மையான, சாந்தமுள்ள இருதயங்களோடு எங்களைக் காரும். நாங்கள் விழாதபடி செய்யும். நாங்கள் விழாதபடி செய்யும்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.