"அவரைத் தேடினேன், கண்டேனாகிலும் இல்லை" (). கிறிஸ்துவின் ஐக்கியத்தை நீ எங்கே இழந்தாய் என்று எனக்குச் சொல், அவரைக் கண்டடைவதற்குக் சாத்தியமான இடத்தை நான் உனக்குச் சொல்கிறேன். அந்தரங்க அறையில் ஜெபத்தைக் குறைத்ததினால் நீ கிறிஸ்துவை இழந்தாயா? அப்படியானால் அங்கேதான் நீ அவரைத் தேடிக் கண்டடைய வேண்டும். பாவத்தினால் கிறிஸ்துவை இழந்தாயா? அந்தப் பாவத்தை ஒழித்துவிட்டு, இச்சை குடிகொண்டிருக்கும் அவயவங்களைப் பரிசுத்த ஆவியினாலே அழிப்பதைத் தவிர வேறு எந்த வழியிலும் நீ கிறிஸ்துவைக் காண முடியாது. வேதவாக்கியங்களை அலட்சியம் செய்ததினால் கிறிஸ்துவை இழந்தாயா? வேதவாக்கியங்களில்தான் நீ கிறிஸ்துவைக் கண்டடைய வேண்டும். "ஒரு பொருளை எங்கே தவறவிட்டாயோ அங்கே தேடு, அது அங்கேதான் இருக்கும்" என்பது உண்மையான பழமொழி. எனவே கிறிஸ்துவை எங்கே இழந்தாயோ அங்கே தேடு, ஏனெனில் அவர் தூரமாய்ப் போகவில்லை. ஆனால் கிறிஸ்துவைத் தேடித் திரும்பிச் செல்வது கடினமான வேலை. பில்கிரிம் தன் சுருளைத் தவறவிட்ட இளைப்பாறுதலின் நிழற்குடைக்குத் திரும்பிச் சென்ற அந்தப் பாதை, அவன் நடந்த பாதைகளிலேயே மிகவும் கடினமான பாதையாய் இருந்தது என்று புனியன் (Bunyan) கூறுகிறார். இழந்த சாட்சியப் பத்திரத்தைத் தேடி ஒரு மைல் பின்னோக்கிச் செல்வதைக் காட்டிலும், இருபது மைல் முன்னோக்கிச் செல்வது எளிது.
எனவே, உன் எஜமானரைக் கண்டுகொள்ளும்போது அவரோடு நெருங்கிப் பற்றிக்கொள்ள எச்சரிக்கையாயிரு. ஆனால் நீ அவரை எப்படி இழந்தாய்? அவருடைய பிரசன்னம் இவ்வளவு இனிமையாகவும், வார்த்தைகள் இவ்வளவு ஆறுதலாகவும், ஐக்கியம் இவ்வளவு பிரியமாகவும் இருக்கும்போது, அத்தகைய விலையேறப்பெற்ற சிநேகிதனை நீ ஒருபோதும் பிரிந்திருக்க மாட்டாய் என்றுதானே எண்ணத் தோன்றும்! அவர் உன் பார்வையிலிருந்து மறைந்துவிடக் கூடாது என்ற பயத்தினால் ஒவ்வொரு கணமும் நீ அவரை நோக்கிக் கொண்டிருக்க வேண்டாமா? என்றாலும், நீ அவரைப் போகவிட்ட பின்பும், "ஐயோ, நான் அவரைக் காணத்தக்க இடத்தை அறிந்தால் நலமாயிருக்கும்!" என்று துக்கத்தோடு பெருமூச்சு விட்டாவது நீ அவரைத் தேடுவது எப்பேர்ப்பட்ட கிருபை! தொடர்ந்து தேடு, ஏனெனில் உன் ஆண்டவர் இல்லாமல் இருப்பது ஆபத்தானது. கிறிஸ்து இல்லாமல் நீ மேய்ப்பன் இல்லாத ஆட்டைப் போலவும்; வேரில் தண்ணீர் இல்லாத மரத்தைப் போலவும்; பெருங்காற்றில் அடித்துச் செல்லப்படும் உலர்ந்த இலையைப் போலவும்—ஜீவவிருட்சத்தோடு இணைக்கப்படாதவனாகவும் இருக்கிறாய். உன் முழு இருதயத்தோடும் அவரைத் தேடு, அவர் உனக்குக் கண்டபடுவார்: உன்னை முற்றிலும் அந்தத் தேடுதலில் அர்ப்பணி, நிச்சயமாக நீ உன் மகிழ்ச்சிக்கும் பூரிப்பிற்கும் ஏதுவாக இன்னும் அவரைக் கண்டடைவாய்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.