"அவர்களெல்லாரும் பரிசுத்தஆவியினாலே நிரப்பப்பட்டு" (). நாம் எல்லாரும் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்பட்டால், இந்த நாளின் ஆசீர்வாதங்கள் மகா ஐசுவரியமானதாய் இருக்கும். ஆத்துமா இவ்விதமாய்ப் பரிசுத்தமாய் நிரப்பப்படுவதின் விளைவுகளை மதிப்பிடுவது கூடாத காரியம். ஜீவன், ஆறுதல், வெளிச்சம், தூய்மை, வல்லமை, சமாதானம்; மற்றும் பல விலையேறப்பெற்ற ஆசீர்வாதங்கள் பரிசுத்த ஆவியானவரின் கிருபையுள்ள பிரசன்னத்திலிருந்து பிரிக்கப்பட முடியாதவை. பரிசுத்த அபிஷேகத் தைலமாக, அவர் விசுவாசியின் தலையை அபிஷேகம் செய்து, பரிசுத்தவான்களின் ஆசாரிய ஊழியத்திற்கு அவனைப் பிரித்தெடுத்து, அவனுடைய ஊழியத்தை உத்தமமாய் நடப்பிக்க அவனுக்குக் கிருபை அளிக்கிறார். உண்மையாகவே சுத்திகரிக்கும் ஒரே தண்ணீராக, அவர் பாவத்தின் வல்லமையிலிருந்து நம்மைக் கழுவி, பரிசுத்தத்திற்கு என்று நம்மைப் பரிசுத்தமாக்குகிறார், கர்த்தருடைய நல்விருப்பத்தின்படி விருப்பத்தையும் செய்கையையும் நமக்குள்ளே நடப்பிக்கிறார் (). வெளிச்சமாக, அவர் முதலில் நம்முடைய இழந்த நிலையை நமக்கு வெளிப்படுத்தினார், இப்போதோ அவர் கர்த்தராகிய இயேசுவை நமக்குள்ளும் நமக்கு நேராகவும் வெளிப்படுத்தி, நீதியின் பாதையில் நம்மை நடத்துகிறார். அவருடைய தூய்மையான பரலோகக் கதிர்களால் தெளிவடைந்த நாம், இனி அந்தகாரமாய் இராமல் கர்த்தருக்குள் வெளிச்சமாய் இருக்கிறோம் (). அக்கினியாக, அவர் நம்மை அசுத்தங்களிலிருந்து சுத்திகரிப்பது மாத்திரமல்லாமல், நம்முடைய பிரதிஷ்டை செய்யப்பட்ட சுபாவத்தை எரியவும் செய்கிறார். அவரே பலிபீடத்தின் அக்கினி ஜுவாலையாய் இருக்கிறார், அதினாலேயே நம்முடைய முழு ஆத்துமாக்களையும் தேவனுக்குப் பிரியமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்க முடிகிறது (). பரலோகப் பனியாக, அவர் நம்முடைய வறட்சியை நீக்கி, நம்முடைய வாழ்க்கையைப் பலனுள்ளதாக்குகிறார். இன்று காலையின் இந்த அதிகாலை வேளையிலேயே அவர் மேலேயிருந்து நம்மேல் இறங்குவாராக! அத்தகைய காலைப் பனி நாளின் இனிமையான ஆரம்பமாய் இருக்கும். புறாவாக, சமாதான அன்பின் சிறகுகளோடு அவர் தமது சபையின் மேலும் விசுவாசிகளின் ஆத்துமாக்கள் மேலும் அசைவாடுகிறார், தேற்றரவாளனாக அவர் தமக்குப் பிரியமானவர்களின் சமாதானத்தைக் கெடுக்கும் கவலைகளையும் சந்தேகங்களையும் விரட்டுகிறார். யோர்தானில் கர்த்தர்மேல் இறங்கியது போல, அவர் தெரிந்துகொண்டவர்கள் மேல் இறங்கி, அப்பா, பிதாவே என்று கூப்பிடத்தக்க புத்திரசுவிகாரத்தின் ஆவியை அவர்களுக்குள் நடப்பிப்பதின் மூலம் அவர்கள் அவருடைய பிள்ளைகள் என்பதற்குச் சாட்சி பகருகிறார் (). காற்றாக, அவர் மனிதர்களுக்கு ஜீவ சுவாசத்தைக் கொண்டு வருகிறார்; தன் இஷ்டப்படி வீசி, அவர் ஆவிக்குரிய சிருஷ்டியை உயிர்ப்பித்துத் தாங்கும் ஜீவனுள்ள கிரியைகளை நடப்பிக்கிறார் (). நாம் இன்றும் என்றும் அவருடைய பிரசன்னத்தை உணருவோமாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.