"இஸ்ரவேலின் இனிமையான சங்கீதக்காரன்" (). பரிசுத்த வேதாகமத்தில் தங்களின் வாழ்க்கைக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கிற சகல பரிசுத்தவான்கள் மத்தியிலும், தாவீது மகா வியக்கத்தக்க, பலதரப்பட்ட, மற்றும் போதனை நிறைந்த சுபாவமுடைய ஓர் அநுபவத்தைக் கொண்டிருக்கிறார். அவருடைய வரலாற்றில், பூர்வகாலத்துப் பிற பரிசுத்தவான்களிடம் முழுமையாய்க் கண்டறிய முடியாத சோதனைகளையும் சோதனைகளையும் நாம் சந்திக்கிறோம், ஆகவேதான் அவர் நம் ஆண்டவருக்கு இன்னும் அதிகப் போதனையுள்ள ஒரு நிழலாட்டமாய் இருக்கிறார். தாவீது சகல நிலைகளிலுமுள்ள மனிதர்களின் சோதனைகளையும் அறிந்திருந்தார். ராஜாக்களுக்குத் தங்களின் உபத்திரவங்கள் உண்டு, தாவீது கிரீடத்தைத் தரித்திருந்தார்: குடியானவனுக்குத் தன் கவலைகள் உண்டு, தாவீது மேய்ப்பனின் தடியைக் கையாண்டார்: அலைந்து திரிகிறவனுக்கு அநேகக் கஷ்டங்கள் உண்டு, தாவீது என்கேதியின் குகைகளில் வாசம் பண்ணினார்: சேனாதிபதிக்குத் தன் கஷ்டங்கள் உண்டு, செருயாவின் குமாரர்கள் தனக்கு மிஞ்சினவர்களாய் இருப்பதை தாவீது கண்டுகொண்டார் (). சங்கீதக்காரன் தன் சிநேகிதர்களாலும் சோதிக்கப்பட்டார், அவருடைய ஆலோசகனாகிய அகித்தோப்பேல் அவரைக் கைவிட்டான், "என் அப்பம் புசித்த என் தோழனும் என்மேல் தன் குதிங்காலை உயர்த்தினான்" (). அவருடைய மகா கொடிய சத்துருக்கள் அவருடைய சொந்த வீட்டாரே ஆவர்: அவருடைய பிள்ளைகளே அவருடைய மகா பெரிய உபத்திரவமாய் இருந்தார்கள். வறுமை மற்றும் ஐசுவரியத்தின் சோதனைகள், கனம் மற்றும் நிந்தனையின் சோதனைகள், ஆரோக்கியம் மற்றும் பலவீனத்தின் சோதனைகள் யாவும் தங்களின் வல்லமையை அவர்மேல் சோதித்துப் பார்த்தன. அவருடைய சமாதானத்தைக் குலைக்க வெளியில் இருந்தும், அவருடைய சந்தோஷத்தைக் கெடுக்க உள்ளிருந்தும் அவனுக்குச் சோதனைகள் இருந்தன. தாவீது ஒரு சோதனையிலிருந்து தப்பியவுடனே மற்றொரு சோதனைக்குள் விழுந்தார்; சோகத்தின் மற்றும் பயத்தின் ஒரு காலத்திலிருந்து வெளியே வந்தவுடனே, மீண்டும் மகா ஆழங்களுக்குள் கொண்டுவரப்பட்டார், தேவனுடைய சகல அலைகளும் திரள்களும் அவர்மேல் புரண்டோடின (). அநேகமாய் இந்தக் காரணத்தினாலேயே தாவீதின் சங்கீதங்கள் அநுபவமுள்ள கிறிஸ்தவர்கள் யாவருக்கும் பொதுவான பேரின்பமாய் இருக்கின்றன. நம்முடைய மனநிலை எதுவாயிருந்தாலும், பேரானந்தமோ அல்லது தளர்ச்சியோ, தாவீது நம்முடைய உணர்வுகளைத் துல்லியமாய் விவரித்திருக்கிறார். மனித இருதயத்தின் மகா வல்லமையுள்ள போதகராக அவர் இருந்தார், ஏனெனில் அவர் எல்லாவற்றிலும் சிறந்த பள்ளியாகிய—இருதயத்தின் உணர்வுள்ள, தனிப்பட்ட அநுபவம் என்னும் பள்ளியிலே போதிக்கப்பட்டிருந்தார். நாமும் அதே பள்ளியிலே போதிக்கப்பட்டு, கிருபையிலும் வயதிலும் முதிரும்போது, தாவீதின் சங்கீதங்களை அதிகமாய் மதித்து, அவைகளைப் 'பசும்புல் மேய்ச்சல்களாய்' கண்டுகொள்வோம். என் ஆத்துமாவே, தாவீதின் அநுபவம் இன்று உன்னைத் தேற்றி உனக்கு ஆலோசனை தருவதாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.