"ஆபேல் ஆடுகளை மேய்க்கிறவனானான்" (). ஆபேல் ஒரு மேய்ப்பனாகத் தன் வேலையைத் தேவனுடைய மகிமைக்கென்று பரிசுத்தமாக்கினான், தன் பலிபீடத்தின் மேல் இரத்தப் பலியைச் செலுத்தினான், கர்த்தர் ஆபேலையும் அவனுடைய காணிக்கையையும் அங்கீகரித்தார். நம்முடைய கர்த்தரின் இந்த ஆரம்பகால நிழலாட்டம் மிகவும் தெளிவாகவும் துல்லியமாகவும் இருக்கிறது. சூரிய உதயத்தின்போது கிழக்கே தோன்றும் முதல் ஒளிக்கீற்றைப் போல, அது எல்லாவற்றையும் வெளிப்படுத்துவதில்லை, ஆனால் சூரியன் வரப்போகிறான் என்ற மாபெரும் உண்மையை அது தெளிவாகப் பிரகடனப்படுத்துகிறது. ஆபேல் ஒரு மேய்ப்பனாகவும் அதே சமயம் ஆசாரியனாகவும் தேவனுக்குச் சுகந்த வாசனையான பலியைச் செலுத்துவதைக் காணும்போது, யெகோவா எப்போதுமே அங்கீகரிக்கிற பலியைத் தன் பிதாவின் சமூகத்தில் கொண்டுவருகிற நம்முடைய கர்த்தரை நாம் கண்டுகொள்கிறோம். ஆபேல் தன் சகோதரனால் வெறுக்கப்பட்டான்—காரணமில்லாமல் வெறுக்கப்பட்டான்; இரட்சகரும் அவ்வாறே வெறுக்கப்பட்டார்: சுபாவமான மற்றும் மாம்சத்திற்குரிய மனிதன், கிருபையின் ஆவியைக் கொண்டிருந்த அங்கீகரிக்கப்பட்ட மனிதனை வெறுத்தான், அவனுடைய இரத்தம் சிந்தப்படும் வரை ஓய்ந்திருக்கவில்லை. ஆபேல் மடிந்து, தன் சொந்த இரத்தத்தினாலேயே தன் பலிபீடத்தையும் பலியையும் தெளித்தான், அதன் மூலம் கர்த்தருடைய சமூகத்தில் ஆசாரியனாக ஊழியம் செய்யும்போது மனிதனுடைய பகையினால் கொலைசெய்யப்பட்ட கர்த்தராகிய இயேசுவை வெளிப்படுத்துகிறான். "நல்ல மேய்ப்பன் ஆடுகளுக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிறான்" (). மனிதகுலத்தின் பகையினால் அவர் கொலைசெய்யப்பட்டதைக் கண்டு, தன் சொந்த இரத்தத்தினாலேயே தன் பலிபீடத்தின் கொம்புகளைக் கறைப்படுத்தியதைக் கண்டு நாம் அவருக்காக அழுவோமாக. ஆபேலின் இரத்தம் பேசுகிறது. "கர்த்தர் காயீனை நோக்கி: உன் சகோதரனுடைய இரத்தத்தின் சத்தம் பூமியிலிருந்து என்னை நோக்கிக் கூப்பிடுகிறது என்றார்" (). இயேசுவின் இரத்தத்திற்கு உன்னதமான நாவொன்று இருக்கிறது, அதனுடைய ஜெயமுள்ள கூப்பிடுதலின் பொருள் பழிவாங்குதல் அல்ல, மாறாக இரக்கமே ஆகும். நம்முடைய நல்ல மேய்ப்பனின் பலிபீடத்தருகே நிற்பது விலையேறப்பெற்ற ஆசீர்வாதமாகும்! அங்கே கொலைசெய்யப்பட்ட ஆசாரியனாக அவர் இரத்தம் சிந்துவதைக் காண்பதும், பின்பு அவருடைய இரத்தம் அவருடைய மந்தை முழுவதற்கும் சமாதானத்தைப் பேசுவதைக் கேட்பதும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்; நம்முடைய மனச்சாட்சியில் சமாதானம், யூதனுக்கும் கிரேக்கனுக்கும் இடையே சமாதானம், மனிதனுக்கும் அவனால் கோபமடைந்த சிருஷ்டிகருக்கும் இடையே சமாதானம், இரத்தத்தினால் கழுவப்பட்ட மனிதர்களுக்கு நித்திய யுகங்கள் முழுவதற்கும் சமாதானம். கால வரிசையில் ஆபேல் முதல் மேய்ப்பனாக இருக்கலாம், ஆனால் நம்முடைய இருதயங்கள் எப்போதுமே இயேசுவையே மேன்மையின் வரிசையில் முதலிடத்தில் வைக்கும். ஆடுகளின் மகா பெரிய மேய்ப்பரே, நீர் எங்களுக்காகக் கொலைசெய்யப்பட்டதைக் காணும்போது, உமது மேய்ச்சலின் ஜனங்களாகிய நாங்கள் உம்மை எங்கள் முழு இருதயத்தோடும் ஸ்தோத்தரிக்கிறோம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.