"இதோ, நான் கட்டளையிட்டு, தானியத்தைச் சல்லடையில் அரிப்பாரைப்போல, இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் அரிப்பேன்; வண்டல் மண்ணில் ஒரு சிறுமணியும் தரையிலே விழுவதில்லை" (). ஒவ்வொரு அரிப்பும் தெய்வீகக் கட்டளையினாலும் அனுமதியினாலும் மாத்திரமே ஏற்படுகிறது. யோபுவின் மேல் தன் விரலை வைப்பதற்கு முன் சாத்தான் உத்தரவு கேட்க வேண்டியிருந்தது. இன்னும் சொல்லப்போனால், ஏதோ ஒரு அர்த்தத்தில் நம்முடைய அரிப்புகள் நேரடியாகப் பரலோகத்தின் கிரியையாய் இருக்கிறது, ஏனெனில், "நான் இஸ்ரவேல் வம்சத்தாரை அரிப்பேன்" என்று வசனம் கூறுகிறது. சாத்தான், ஒரு வேலைக்காரனைப் போல, தானியத்தை அழித்துவிடலாம் என்ற நம்பிக்கையில் சல்லடையைப் பிடித்திருக்கலாம்; ஆனால் அரமனையின் எஜமானரின் மேலாளுகை செய்யும் கரம், சத்துரு அழிக்க நினைத்த அதே முறையினாலேயே தானியத்தின் தூய்மையை நடப்பித்துக் கொண்டிருக்கிறது. கர்த்தருடைய களம் என்றென்றும் மதிக்கப்பட்ட, ஆனால் அநேக முறை அரிக்கப்பட்ட தானியமே, கர்த்தரே சல்லடையையும் சுளுகையும் உன்னுடைய நித்திய பிரயோஜனத்திற்காகவும் தன் சொந்த மகிமைக்காகவும் நடத்துகிறார் என்ற ஆசீர்வதிக்கப்பட்ட உண்மையினால் ஆறுதலடை. கர்த்தராகிய இயேசு தன் கரத்தில் இருக்கும் சுளுகை நிச்சயமாகப் பயன்படுத்துவார், அற்பமானவற்றிலிருந்து விலையேறப்பெற்றவைகளைப் பிரித்தெடுப்பார் (). இஸ்ரவேலரெல்லாரும் இஸ்ரவேலரல்ல; களத்திலுள்ள குவியல் முழுவதும் சுத்தமான தானியம் அல்ல, எனவே புடைக்கும் முறைமை நடப்பிக்கப்பட வேண்டும். சல்லடையில் உண்மையான கனத்திற்கு மாத்திரமே வல்லமை உண்டு. உமிகளும் பதர்களும் சுபாவம் இல்லாதவைகளாய் இருப்பதினால் காற்றுக்கு முன் அடித்துச் செல்லப்பட வேண்டும், உறுதியான தானியம் மாத்திரமே மீதியாயிருக்கும். கர்த்தருடைய கோதுமையின் பூரண பாதுகாப்பைக் கவனித்துப் பாருங்கள்; மிகச் சிறிய மணிக்கும் பாதுகாக்கப்படும் வாக்குத்தத்தம் உண்டு. தேவன் தாமே அரிக்கிறார், எனவே அது கடுமையான மற்றும் பயங்கரமான கிரியையாய் இருக்கிறது; அவர் அவைகளை எல்லா இடங்களிலும், "எல்லா ஜாதிகளுக்குள்ளும்" அரிக்கிறார்; அவர் அவைகளைப் பயனுள்ள விதத்தில், "தானியத்தைச் சல்லடையில் அரிப்பாரைப்போல" அரிக்கிறார்; என்றாலும் இவைகளையெல்லாம் தாண்டி, மிகவும் சிறிய, லேசான, அல்லது சுருங்கிப் போன ஒரு சிறுமணியும்கூட தரையிலே விழ அனுமதிக்கப்படுவதில்லை. விசுவாசி ஒவ்வொருவனும் கர்த்தருடைய பார்வையில் விலையேறப்பெற்றவன், ஒரு மேய்ப்பன் தன் ஒரு ஆட்டை இழக்க விரும்பமாட்டான், ஒரு நவரத்தின வியாபாரி தன் ஒரு வைரத்தை இழக்க விரும்பமாட்டான், ஒரு தாய் தன் ஒரு பிள்ளையை இழக்க விரும்பமாட்டாள், ஒரு மனிதன் தன் சரீரத்தின் ஒரு அவயவத்தை இழக்க விரும்பமாட்டான், அப்படியே கர்த்தரும் தாம் மீட்டெடுத்த ஜனங்களில் ஒருவனையும் இழந்துபோக விடமாட்டார். நாம் எவ்வளவு சிறியவர்களாய் இருந்தாலும், நாம் கர்த்தருடையவர்களாய் இருந்தால், நாம் கிறிஸ்து இயேசுவுக்குள் பாதுகாக்கப்பட்டிருக்கிறோம் என்பதில் மகிழ்ச்சியடையலாம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.