AUG 21 MORNING

நீதிமொழிகள் 11:25

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.

நீதிமொழிகள் 11:25

உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

உதவிசெய்கிறவன் தானும் தன் சொந்த நன்மைகளைப் பெறுவான் என்ற மகா பெரிய பாடை இங்கே நாம் கற்றுக்கொள்கிறோம்; அதாவது, நாம் எதையாவது சேகரிக்க வேண்டுமானால் அதை வாரி இறைக்க வேண்டும்; நம்மை நாமே சந்தோஷப்படுத்திக் கொள்ள வேண்டுமானால் மற்றவர்களை நாம் சந்தோஷப்படுத்த வேண்டும்; ஆவிக்குரிய பலத்தைப் பெற வேண்டுமானால் மற்றவர்களின் ஆவிக்குரிய நன்மையை நாம் நாட வேண்டும். மற்றவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சும்போது நாமும் தண்ணீர் பாய்ச்சப்படுகிறோம். எப்படிக் கேட்பது? பயனுள்ளவர்களாய் இருப்பதற்கான நம்முடைய முயற்சிகள், பயனுள்ளதாய் மாறுவதற்கான நம்முடைய வல்லமையை வெளிக்கொணர்கின்றன. பயிற்சி மூலமாக வெளிச்சத்திற்கு வரும் மறைந்திருக்கும் தாலந்துகளும் செயலற்ற திறமைகளும் நம்மிடம் இருக்கின்றன. கர்த்தருடைய யுத்தங்களை எதிர்த்துப் போராடவோ அல்லது சிரமமான மலைகளில் ஏறவோ நாம் துணியும் வரை, பிரயாசப்படுவதற்கான நம்முடைய பலன் நமக்கே கூட மறைக்கப்பட்டதாய் இருக்கிறது. விதவையின் கண்ணீரைத் துடைக்கவும், திக்கற்றவனின் துக்கத்தைத் தணிக்கவும் நாம் முயற்சிக்கும் வரை நமக்குள்ளிருக்கும் உருக்கமான அனுதாபங்களை நாம் அறிவதில்லை. மற்றவர்களுக்குப் போதிக்க முயலும் போது நாம் நமக்கான போதனையைப் பெற்றுக்கொள்கிறோம் என்பதை நாம் அடிக்கடி காண்கிறோம். ஓ, என்னே கிருபையான பாடங்களை நம்மில் சிலர் வியாதியஸ்தர்களின் படுக்கையருகே கற்றுக் கொண்டிருக்கிறோம்! வேதவாக்கியங்களைப் போதிக்கச் சென்ற நாம், அவைகளைக் குறித்து நாம் எவ்வளவு குறைவாக அறிந்திருக்கிறோம் என்று வெட்கப்பட்டுத் திரும்பினோம். ஏழை பரிசுத்தவான்களுடனான நம்முடைய உரையாடல்களில், தேவனுடைய வழிகளை நாம் நமக்காகவே இன்னும் பரிபூரணமாகக் கற்றுக்கொண்டு, தெய்வீகச் சத்தியத்தைப் பற்றிய ஆழமான பார்வையைப் பெற்றுக்கொள்கிறோம். ஆகவே மற்றவர்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது நம்மைத் தாழ்த்துகிறது. நாம் எங்கே தேடவில்லையோ அங்கே எவ்வளவுக் கிருபை இருக்கிறது என்பதையும்; ஏழைப் பரிசுத்தவான் அறிவில் நம்மை எவ்வளவு தூரம் முந்திக்கொள்ள முடியும் என்பதையும் நாம் கண்டறிகிறோம். மற்றவர்களுக்காக உழைப்பதன் மூலம் நம்முடைய சொந்த ஆறுதலும் அதிகரிக்கிறது. அவர்களைத் தேற்ற நாம் பிரயாசப்படுகிறோம், அந்த ஆறுதல் நம்முடைய சொந்த இருதயத்தையும் பூரிக்கச் செய்கிறது. பனியில் மாட்டிக்கொண்ட இரண்டு மனிதர்களைப் போல; ஒருவன் மரித்துப்போகாதபடி மற்றவனுடைய உடலைத் தேய்த்துவிட்டான், அவ்வாறு செய்வதன் மூலம் அவனுடைய சொந்த இரத்த ஓட்டத்தை இயக்கத்தில் வைத்து அவனுடைய சொந்த ஜீவனையும் காப்பாற்றிக் கொண்டான். சாரிபாத் ஊரைச் சேர்ந்த ஏழை விதவை தன் குறைவான சேமிப்பிலிருந்து தீர்க்கதரிசியின் தேவைகளுக்காக ஒரு பங்கை வழங்கினாள், அந்த நாள் முதல் தனக்குத் தேவை என்ன என்பதை அவள் ஒருபோதும் அறியாதவளாய் இருந்தாள். எனவே கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமக்கி, குலுக்கி, சரிந்து விழும்படி நல்ல அளவை உங்கள் மடியிலே போடுவார்கள்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.