"சீயோன் குமாரத்தியாகிய கன்னிகை உன்னை இகழ்ந்து, உன்னைப் பரியாசம்பண்ணுகிறாள்; எருசலேம் குமாரத்தி உனக்குப்பின் தலையைத் துலுக்குகிறாள்" (). கர்த்தருடைய வார்த்தையினால் மறுபடியும் தைரியமடைந்த சீயோனின் நடுங்கிக்கொண்டிருந்த குடிகள் திடன்கொண்டு, சனகெரிபின் வீம்பான மிரட்டல்களைப் பார்த்துத் தங்களின் தலைகளைத் துலுக்கினார்கள். பலத்த விசுவாசம் தேவனுடைய ஊழியக்காரர்கள் தங்களின் மகா மேட்டிமையான சத்துருக்களை அமைதியான அசட்டையோடு நோக்கச் செய்கிறது. நம்முடைய சத்துருக்கள் கூடாத காரியங்களையே முயலுகிறார்கள் என்பதை நாம் அறிவோம். இயேசு உயிரோடிருக்கும் வரை ஒருபோதும் மரிக்க முடியாத நித்திய ஜீவனை அழிக்க அவர்கள் தேடுகிறார்கள்; நரகத்தின் வாசல்களாலும் மேற்கொள்ளப்பட முடியாத அந்த உன்னத அரணைத் தகர்க்கப் பார்க்கிறார்கள். அவர்கள் முள்ளுகளுக்கு விரோதமாய் உதைத்துத் தங்களையே காயப்படுத்திக் கொள்கிறார்கள், தங்களுக்குக் கேடுண்டாகும்படி யெகோவாவின் கேடயத்தின் கொம்புகளின் மேல் பாய்கிறார்கள்.
அவர்களுடைய பலவீனத்தை நாம் அறிவோம். அவர்கள் வெறும் மனிதர்கள் அல்லவா? மனிதன் என்பவன் புழுவன்றி வேறென்ன? அவர்கள் தங்களின் சொந்த இகழ்ச்சியை நுரைத்துத் தள்ளும் சமுத்திர அலைகளைப் போல இரோதித்துக் கொந்தளிக்கிறார்கள் (யூதா 13). கர்த்தர் எழுந்தருளும் போது, அவர்கள் காற்றுக்கு முன் பறக்கும் பதரைப் போல ஓடிப்போவார்கள், வெடிக்கும் முட்செடிகளைப் போலப் பட்சிக்கப்படுவார்கள். தேவனுடைய காரியங்களுக்கும் அவருடைய சத்தியத்திற்கும் யாதொரு சேதமும் உண்டாக்க முடியாத அவர்களுடைய உன்னதமான பலமற்ற தன்மை, சீயோனின் சேனைகளிலுள்ள மகா பலவீனமான போர்ச்சேவகனையும்கூட அவர்களைப் பார்த்துப் பரியாசம் பண்ணச் செய்யும்.
எல்லாவற்றிற்கும் மேலாக, உன்னதமானவர் நம்மோடிருக்கிறார் என்பதை நாம் அறிவோம், அவர் யுத்தத்திற்குத் தம்மை ஆயத்தப்படுத்தும்போது அவருடைய சத்துருக்கள் எங்கே நிற்பார்கள்? அவர் தமது வாசஸ்தலத்திலிருந்து புறப்பட்டு வந்தால், பூமியின் ஓடுகள் தங்களை உண்டாக்கினவரோடு அதிக காலம் வழக்காட முடியாது (). அவருடைய இரும்புக்கோல் குயவனின் மண்பாண்டத்தைப் போல அவைகளை நொறுக்கித் தூளாக்கும், அவைகளின் நினைவே பூமியிலிருந்து ஒழிந்துபோகும். அப்படியானால், சகல பயங்களும் ஒழியட்டும், ராஜாவின் கரங்களில் ராஜ்யம் பத்திரமாய் இருக்கிறது. நாம் ஜெயகம்பீரமாய் ஆர்ப்பரிப்போம், ஏனெனில் கர்த்தர் அரசாளுகிறார், அவருடைய சத்துருக்கள் குப்பைமேட்டின் வைக்கோலைப் போலாவார்கள்.
"தேவனுடைய சொந்த வார்த்தை எவ்வளவு உண்மையோ அவ்வளவு உண்மையாய்; பூமியோ, நரகமோ, தங்களின் சகல கூட்டத்தோடும், நமக்கு விரோதமாய் ஜெயங்கொள்ள மாட்டாது. அவர்கள் ஒரு பரியாசமாகவும் பழமொழியாகவும் மாறினார்கள்; தேவன் நம்மோடிருக்கிறார், நாம் அவருடையவர்கள், நம்முடைய ஜெயம் ஒருபோதும் தவறாது."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.