"நீர் மனுபுத்திரரில் அதிசுந்தரராயிருக்கிறீர்" (). இயேசுவின் முழு ஆளுமையும் ஒரு நவரத்தினத்தைப் போன்றது, அவருடைய வாழ்க்கை முழுவதும் முத்திரையின் ஒரே பதிவாகவே இருக்கிறது. அவர் தமக்குள்ளே முற்றிலும் பரிபூரணமடைந்தவர்; அவருடைய பல அவயவங்களில் மாத்திரமல்ல, கிருபையுள்ள மகா மகிமையான முழுமையிலும் அவ்வாறே இருக்கிறார். அவருடைய குணம் என்பது குழப்பமாய் கலக்கப்பட்ட அழகிய நிறங்களின் குவியல் அல்ல, அல்லது அலட்சியமாய் ஒன்றன் மேல் ஒன்றாக வைக்கப்பட்ட விலையேறப்பெற்ற கற்களின் குவியல் அல்ல; அவர் அழகின் ஓவியமாகவும், மகிமையின் மார்ப்பதக்கமாகவும் இருக்கிறார். அவருக்குள், "நற்கீர்த்தியுள்ளவைகள்" யாவும் அவைகளுக்குரிய தகுந்த இடங்களில் அமைந்து, ஒன்றுக்கொன்று அலங்காரமாய் விளங்குகின்றன. அவருடைய மகிமையான ஆளுமையின் எந்த ஒரு பண்பும் மற்றொன்றின் மதிப்பைத் தணித்துத் தன் பக்கம் கவனத்தை ஈர்ப்பதில்லை; மாறாக அவர் முற்றிலும் எல்லாவற்றிலும் நேசிக்கப்படத்தக்கவர்.
ஓ இயேசுவே! உமது வல்லமை, உமது கிருபை, உமது நீதி, உமது கனிவு, உமது உண்மை, உமது மகத்துவம், மற்றும் உமது மாறாத தன்மை யாவும் சேர்ந்து அத்தகைய ஒரு மனிதனை, அல்லது ஒரு தெய்வீக மனிதனை (God-man) உண்டாக்கியிருக்கிறது, அவரைப் போன்ற ஒருவரைப் பரலோகமோ அல்லது பூமியோ வேறு எங்கும் கண்டதில்லை. உமது குழந்தைப் பருவம், உமது நித்தியம், உமது பாடுகள், உமது ஜெயங்கள், உமது மரணம், மற்றும் உமது அழியாமை யாவும் தையலோ பிரிவோ இல்லாத ஒரே அழகான ஆடம்பராக நெய்யப்பட்டிருக்கின்றன. நீர் சுருதிபேதமில்லாத இசை; நீர் அநேக காரியங்களாய் இருந்தும் பிரிக்கப்படாதவர்; நீர் எல்லாவற்றாருமாய் இருந்தும் வேறுபடாதவர். நிறங்கள் யாவும் இணைந்து ஒரு பிரகாசமான வானவில்லை உண்டாக்குவது போல, பரலோகத்தினதும் பூமியினதும் சகல மகிமைகளும் உமக்குள் ஒன்று கூடி, எவ்வளவோ ஆச்சரியமாய் இணைந்திருப்பதினால், எல்லாக் காரியங்களிலும் உமக்கு நிகரானவர் ஒருவருமில்லை; ஆமாம், மகா உத்தமர்களுடைய சகல நற்பண்புகளும் ஒரே மூட்டையாகக் கட்டப்பட்டாலும், அவைகளாலும் சகல பூரணத்தின் கண்ணாடியாகிய உமக்கு நிகராக வர முடியாது. உமது தேவன் உமக்கு மாத்திரமே ஒதுக்கி வைத்திருக்கிற வெள்ளைப்போளமும் லவங்கமும் கலந்த பரிசுத்த தைலத்தினால் நீர் அபிஷேகம் பண்ணப்பட்டிருக்கிறாய்; உமது சுகந்த வாசனையைப் பொறுத்தவரை, அது பரிசுத்த தூபவர்க்கத்திற்கு ஒத்திருக்கிறது, வைத்தியனின் தந்திரத்தினாலும்கூட அதைப்போன்ற ஒன்றை வேறு யாராலும் ஒருபோதும் கலக்க முடியாது; ஒவ்வொரு வாசனைப்பொருளும் சுகந்தமுள்ளதுதான், ஆனால் அவைகளின் கூட்டு தெய்வீகமானது.
"ஓ பரிசுத்தமான சீர்அமைப்பு! ஓ விசித்திரமான இணைப்பு அநேக பூரணங்கள் இணைந்து, ஒரு பூரணத்துவத்தை உண்டாக்கினதே! ஓ பரலோக இசை, எல்லா பாகங்களும் ஒன்று கூடி ஒரே இனிமையான ராகத்தில், ஒரு பூரண இனிமையை உண்டாக்கினதே!"
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.