அதற்குச் சாத்தான் கர்த்தருக்குப் பிரதியுத்தரமாக: "யோபு சும்மாவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்?" () என்றான். பூர்வகாலத்து உத்தம மனிதனைக் குறித்துச் சாத்தான் கேட்ட பொல்லாத கேள்வி இது, ஆனால் தற்காலத்தில் உள்ள அநேகரைக் குறித்தும் இந்தக் கேள்வியை நியாயமாய்க் கேட்க முடியும்; ஏனெனில் தேவன் தங்களை ஐசுவரியவான்களாக்கும் வரை அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் தேவனை நேசிக்கிறார்கள்; ஆனால் தங்களுக்குக் காரியங்கள் தவறாய் நடக்கும்போது, தேவனைப் பற்றித் தாங்கள் பாராட்டிய விசுவாசத்தையெல்லாம் விட்டுவிடுவார்கள். தங்களின் மதம் மாறிய காலத்திலிருந்து உலகம் தங்களுக்கு அனுகூலமாய் இருக்கிறது என்பதைத் தெளிவாகக் கண்டால், அவர்கள் தங்களின் ஏழை மாம்சப் பிரகாரமான வழியில் தேவனை நேசிப்பார்கள்; ஆனால் அவர்கள் உபத்திரவத்தைச் சந்தித்தால், கர்த்தருக்கு விரோதமாய் அநாகரிகமாய் மாறுவார்கள். அவர்களுடைய அன்பு பந்தியின் மேல் உள்ள அன்பே தவிர, எஜமானன் மேல் உள்ள அன்பு அல்ல; அரமனையின் எஜமானன் மேல் உள்ள அன்பல்ல, அலமாரியின் மேல் உள்ள அன்பு. உண்மையான கிறிஸ்தவனோ, தன் பலனை அடுத்த வாழ்க்கையில் பெற்றுக்கொள்ளவும், இந்த வாழ்க்கையில் தீங்கநுபவிக்கவும் எதிர்பார்க்கிறான். பழைய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் ஐசுவரியம், ஆனால் புதிய உடன்படிக்கையின் வாக்குத்தத்தம் உபத்திரவமே ஆகும். கிறிஸ்துவின் வார்த்தைகளை நினைவுகூர்ந்து பார்—"என்னில் கனிகொடாதிருக்கிற கொம்புகளையெல்லாம்"—என்ன? "அவகைளையெல்லாம் சுத்தப்படுத்துகிறார், அவைகள் அதிகக் கனிகளைக் கொடுக்கும்படி அவைகளைச் சுத்தப்படுத்துகிறார்" (). நீ கனிகளைக் கொடுத்தால், நீ உபத்திரவத்தைத் தாங்க வேண்டியிருக்கும். "ஐயோ!" நீ சொல்லலாம், "அது ஒரு பயங்கரமான எதிர்பார்ப்பு." ஆனால் இந்த உபத்திரவம் எப்பேர்ப்பட்ட விலையேறப்பெற்ற விளைவுகளை நடப்பிக்கிறது என்றால், அதைச் சந்திக்கும் கிறிஸ்தவன் உபத்திரவங்களில் சந்தோஷப்படக் கற்றுக்கொள்ள வேண்டும், ஏனெனில் அவனுடைய உபத்திரவங்கள் பெருகப் பெருக, கிறிஸ்து இயேசுவினால் அவனுடைய ஆறுதல்களும் பெருகுகின்றன. நீ தேவனுடைய பிள்ளையாக இருந்தால், நீ பிரம்பிற்கு அந்நியனாய் இருக்க மாட்டாய் என்று உறுதியாய் நம்பு. முந்திவோ பிந்திவோ ஒவ்வொரு பொன் கட்டியும் நெருப்பைக் கடந்து செல்ல வேண்டும். பயப்படாதே, மாறாக அத்தகைய பலனுள்ள காலங்கள் உனக்காக வைக்கப்பட்டிருக்கின்றன என்று சந்தோஷப்படு, ஏனெனில் அவைகளில் நீ பூமியிலிருந்து பிரிக்கப்பட்டுப் பரலோகத்திற்குத் தகுதியாக்கப்படுவாய்; தற்போதைய காரியங்களைப் பற்றிக் கொண்டிருப்பதிலிருந்து நீ விடுவிக்கப்பட்டு, சீக்கிரத்தில் உனக்கு வெளிப்படப் போகும் அந்த நித்திய காரியங்களை வாஞ்சிக்கச் செய்யப்படுவாய். தற்போதைய காரியங்களைப் பொறுத்தவரை நீ தேவனுக்குச் சும்மா ஊழியம் செய்கிறாய் என்பதை உணரும்போது, எதிர்காலத்தின் எல்லையற்ற பலனில் நீ மகிழ்ச்சியடைவாய்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.