"இதோ, இந்த மனிதன்!" (). நம்முடைய கர்த்தராகிய இயேசு தமது ஜனங்களுக்கு மகா நிறைவான சந்தோஷமாகவும் ஆறுதலாகவும் மாறும் இடம் ஒன்று இருக்குமானால், அது அவர் துக்கத்தின் ஆழங்களில் மகா ஆழமாய் மூழ்கின இடமே ஆகும். கிருபை பெற்ற ஆவிகளே, இங்கே வாருங்கள், கெத்செமனே தோட்டத்தில் இந்த மனிதனை உற்று நோக்குங்கள்; தன் அன்பைத் தன்னுள் அடக்கக் கூடாதபடிக்கு நிறைந்து வழியும் அவருடைய இருதயத்தைப் பாருங்கள்—துக்கம் எவ்வளவு பாரமாய் வெளிப்படுகிறது என்று பாருங்கள். அவருடைய சரீரத்தின் ஒவ்வொரு துவாரத்திலிருந்தும் இரத்தக்கண்ணீர் வடிந்து தரையிலே விழுவதைக் கவனித்துப் பாருங்கள். அவருடைய கரங்களிலும் பாதங்களிலும் அவர்கள் ஆணிகளை அடிக்கும்போது இந்த மனிதனைப் பாருங்கள். மனஸ்தாபப்படும் பாவிகளே, நிமிர்ந்து பாருங்கள், பாடுபடும் உங்களுடைய கர்த்தரின் துக்க உருவத்தைக் காண். பத்மராகத் துளிகள் முள்முடியின் மேல் நின்று, துக்கத்தின் ராஜாவினுடைய கிரீடத்தை விலையேறப்பெற்ற நவரத்தினங்களால் அலங்கரிப்பதைக் கவனித்துப் பாருங்கள். அவருடைய எலும்புகள் யாவும் கட்டுக்குலைந்து, அவர் தண்ணீரைப் போல ஊற்றப்பட்டு, மரணத் தூளிலே வைக்கப்பட்டபோது இந்த மனிதனை உற்று நோக்குங்கள்; தேவன் அவரைக் கைவிட்டார், நரகம் அவரைச் சூழ்ந்து கொண்டது (சங்கீதம் 22). உற்றுப் பார்த்து எண்ணிப் பாருங்கள், அவருக்கு நேரிட்ட துக்கத்தைப் போன்ற துக்கம் வேறு எங்கேனும் உண்டா? (). கடந்து போகிறவர்களே யாவரும் அருகில் வந்து, மனிதர்களுக்கும் தூதர்களுக்கும் ஆச்சரியமான, நிகரற்ற, விசித்திரமான இந்தத் துக்கக் காட்சியைக் பாருங்கள். தன் வேதனைகளில் தமக்கு நிகரோ அல்லது எதிரியோ இல்லாத துக்கத்தின் சக்கரவர்த்தியை உற்று நோக்குங்கள்! துக்கப்படுகிறவர்களே, அவரை நோக்கிப் பாருங்கள், ஏனெனில் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவுக்குள் ஆறுதல் இல்லையென்றால் பூமியிலோ பரலோகத்திலோ வேறு எந்தச் சந்தோஷமும் இல்லை. அவருடைய இரத்தத்தின் மீட்புக் கிரயத்தில் நம்பிக்கை இல்லையென்றால், பரலோகத்தின் சுரமண்டலங்களே, உங்களிடம் எந்த ஓர் இன்பமும் இல்லை, தேவனுடைய வலதுபாரசத்தில் என்றென்றைக்குமாய் எந்த ஒரு மகிழ்ச்சியும் இராது. நம்முடைய சந்தேகங்களினாலும் துக்கங்களினாலும் நாம் குறைவாகக் கலங்கும்படிக்கு, சிலுவையின் பாதப்படியில் நாம் இன்னும் மாறாமல் உட்கார வேண்டியதுதான். அவருடைய துக்கங்களை நாம் நோக்கினால், நம்முடைய துக்கங்களைப் பேச நாம் வெட்கப்படுவோம். நம்முடைய காயங்கள் குணமாகும்படி அவருடைய காயங்களை நாம் உற்று நோக்க வேண்டியதுதான். நாம் நேர்மையாய் வாழ விரும்பினால் அது அவருடைய மரணத்தைத் தியானிப்பதினாலேயே ஆகும்; நாம் கனமடைய விரும்பினால் அது அவருடைய தாழ்மையையும் அவருடைய துக்கத்தையும் சிந்திப்பதினாலேயே ஆகும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.