JUN 22 MORNING

சகரியா 6:13

அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.

சகரியா 6:13

அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராய், தம்முடைய சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்து ஆளுகை செய்வார்; தம்முடைய சிங்காசனத்தின்மேல் ஆசாரியராயும் இருப்பார்; இவ்விரண்டின் நடுவாகச் சமாதானத்தின் ஆலோசனை விளங்கும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவரே கர்த்தருடைய ஆலயத்தைக் கட்டுவார்; அவர் மகிமைபொருந்தினவராயிருப்பார்" (). கிறிஸ்து தாமே தமது ஆவிக்குரிய ஆலயத்தைக் கட்டுகிறவராயிருக்கிறார், அதைத் தமது மாறாத அன்பு, உன்னதமான கிருபை மற்றும் வழுவாத உண்மைத்தன்மை என்னும் பர்வதங்களின் மேல் கட்டியிருக்கிறார். ஆனால் சாலொமோனின் ஆலயத்தில் எப்படியோ அப்படியே இதிலும்; கட்டுமானப் பொருட்கள் ஆயத்தப்படுத்தப்பட வேண்டும். அங்கே "லீபனோனின் கேதுருக்கள்" உண்டு, ஆனால் அவைகள் கட்டிடத்திற்கு ஏற்றவாறு இன்னும் வடிவமைக்கப்படவில்லை; அவைகள் வெட்டப்பட்டு, செதுக்கப்பட்டு, பரதீஸிலுள்ள கர்த்தருடைய ஆலயத்தின் பிரகாரங்களை மகிழ்விக்கத்தக்க சுகந்த நறுமணமுள்ள கேதுருப் பலகைகளாக இன்னும் மாற்றப்படவில்லை. அப்படியே கரடுமுரடான கற்களும் இன்னும் குவாரியிலேயே இருக்கின்றன, அவைகள் அங்கிருந்து வெட்டி எடுக்கப்பட்டு, சதுரமாக்கப்பட வேண்டும். இவையாவும் கிறிஸ்துவின் சொந்தக் கிரியையாய் இருக்கிறது. விசுவாசி ஒவ்வொருவனும் ஆலயத்தில் தனக்குரிய இடத்திற்குத் தகுதியானவனாய் ஆயத்தப்படுத்தப்பட்டு, மெருகூட்டப்பட்டு, செதுக்கப்படுகிறான்; ஆனால் ஆயத்தப்படுத்தும் அந்தக் கிரியையைக் கிறிஸ்துவின் சொந்தக் கரமே நடப்பிக்கிறது. உபத்திரவங்கள் அவராலே இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டாலொழிய அவைகளால் பரிசுத்தமாக்க முடியாது. நம்முடைய இருதயங்களைச் செம்மையாய் வடிவமைக்கிற இயேசுவின் கரம் இல்லாமல், நம்முடைய ஜெபங்களோ பிரயாசங்களோ நம்மைப் பரலோகத்திற்கு ஆயத்தப்படுத்த முடியாது.

சாலொமோனின் ஆலயத்தைக் கட்டும்போது, "ஆலயத்தைக் கட்டுகிறபோது, அது ஏற்கனவே வெட்டி ஆயத்தம்பண்ணப்பட்ட கற்களாலே கட்டப்பட்டது; அதைக் கட்டுகிறபோது சுத்தியலும் கோடரியும் யாதொரு இரும்பு ஆயுதமும் ஆலயத்திலே கேட்கப்படவில்லை" (), ஏனெனில் அது வைக்கப்பட வேண்டிய துல்லியமான இடத்திற்கு முற்றிலும் ஆயத்தமாய் கொண்டுவரப்பட்டது—இயேசு கட்டும் ஆலயமும் அப்படியே இருக்கிறது; ஆயத்தப்படுத்தும் காரியங்கள் யாவும் பூமியிலேயே செய்யப்படுகின்றன. நாம் பரலோகத்தை அடையும்போது, அங்கே நம்மைப் பரிசுத்தமாக்கும் கிரியையோ, உபத்திரவங்களினால் சதுரமாக்கும் கிரியையோ, பாடுகளினால் செதுக்கும் கிரியையோ இருக்காது. இல்லை, நாம் இங்கேயே தகுதியாக்கப்பட வேண்டும்—கிறிஸ்து முன்கூட்டியே செய்ய வேண்டியவை யாவும் இவைகளே; அவர் அதைச் செய்து முடித்த பின்பு, மரணமாகிய நதியின் வழியாய் அன்பான கரத்தினால் நாம் பத்திரமாய்க் கரைசேர்க்கப்பட்டு, நம்முடைய கர்த்தருடைய ஆலயத்தில் நித்திய தூண்களாய் நிலைத்திருக்கும்படி பரலோக எருசலேமிற்குள் கொண்டுவரப்படுவோம்.

"அவருடைய கண்ணோக்கின்கீழும் பராமரிப்பிலும், அந்தக் கட்டிடம் எழும்பும், மகத்துவமும், பலமும், அழகும் நிறைந்து, வானங்களுக்கு மேலாகப் பிரகாசிக்கும்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.