"கிறிஸ்து விசுவாசத்தினாலே உங்கள் இருதயங்களில் வாசம்பண்ணும்படிக்கு" (). விசுவாசிகளாகிய நாம், நம்முடைய அன்பை அவரிடத்தில் தூண்டவும், அவரைப் பற்றிய நம்முடைய அறிவை அதிகரிக்கவும், கர்த்தராகிய இயேசுவின் ஆளுமையை எப்போதுமே நமக்கு முன்பாகக் கொண்டிருப்பது அளவிட முடியாதபடி அவசியமான ஒன்றாகும். இயேசுவின் கல்லூரியில் மகா ஜாக்கிரதையுள்ள மாணவர்களாகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய கார்பஸ் கிறிஸ்டியின் (Corpus Christi) மாணவர்களாகவும், சிலுவையின் கல்வியில் நல்ல டிகிரியை அடையத் தீர்மானித்தவர்களுமாகிய என் வாசகர்கள் யாவரும் இருக்க வேண்டும் என்பதே என் தேவனான விருப்பம். ஆனால் இயேசுவை எப்போதும் அருகில் கொண்டிருக்க வேண்டுமானால், இருதயமாகிய கூடு நிரம்பி வழியும் அளவிற்கு அவருடைய அன்பால் பொங்கி வழியும்படி, அவர் அதில் முழுமையாய் நிரம்பியிருக்க வேண்டும்; ஆகவேதான் அப்போஸ்தலன், "கிறிஸ்து உங்கள் இருதயங்களில் வாசம்பண்ணும்படிக்கு" என்று ஜெபிக்கிறார் (). இயேசு எவ்வளவு அருகில் இருக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார் பாருங்கள்! ஒரு காரியத்தை உன்னுடைய இருதயத்திற்குள் வைத்துக் கொள்வதை விட உனக்கு அருகில் உன்னால் எதையும் கொண்டுவர முடியாது. "வாசம்பண்ணும்படி;" அவர் எப்போதாவது உன்னைச் சந்திப்பதற்காக, ஒரு சாதாரண வழிப்போக்கனைப் போல வீட்டிற்குள் நுழைந்து ஒரு ராத்திரி தங்கிச் செல்வதற்காக அல்ல, மாறாக அவர் வாசம்பண்ணும்படி; இயேசு உன்னுடைய அந்தரங்க சுவத்தின் எஜமானராகவும் குடியாகவும் மாறி, இனி ஒருபோதும் வெளியேறாதிருக்கும்படி.
வார்த்தைகளைக் கவனியுங்கள்—மனிதனின் வீட்டின் மிகச் சிறந்த அறையாகிய உங்கள் இருதயத்திற்குள் அவர் வாசம்பண்ணும்படி; உங்கள் சிந்தனைகளில் மாத்திரம் அல்ல, உங்கள் பாசங்களிலும்; மனதின் தியானங்களில் மாத்திரம் அல்ல, இருதயத்தின் உணர்ச்சிகளிலும். நிலைத்திருக்கும் தன்மையைக் கொண்ட கிறிஸ்துவின் மேலான அன்பிற்காக நாம் வாஞ்சிக்க வேண்டும், அது சில தருணங்களில் ஜுவாலையாக எழும்பி பின்பு சில கங்குகளின் அந்தகாரத்திற்குள் அணைந்துபோகும் அன்பாய் இராமல், மாறாக ஒருபோதும் அணையாத பலிபீடத்தின் அக்கினியைப் போலப் பரிசுத்த விறகுகளினால் போஷிக்கப்படும் மாறாத ஜுவாலையாய் இருக்க வேண்டும். விசுவாசத்தினாலே அன்றி இதைச் செய்யவே முடியாது. விசுவாசம் பலமுள்ளதாய் இருக்க வேண்டும், இல்லையென்றால் அன்பு உன்னதமாய் இருக்காது; புஷ்பத்தின் வேர் ஆரோக்கியமாய் இருக்க வேண்டும், இல்லையென்றால் அதன் மலர்ச்சி இனிமையானதாய் இருக்கும் என்று நாம் எதிர்பார்க்க முடியாது. விசுவாசம் என்பது லீலி புஷ்பத்தின் வேராய் இருக்கிறது, அன்போ லீலி புஷ்பத்தின் மலராய் இருக்கிறது. வாசகரே, உன்னுடைய இருதயத்தின் அன்பிற்குள் இயேசு இருக்க முடியாது, உன்னுடைய இருதயத்தின் விசுவாசத்தினால் அவரை நீ உறுதியாய் பற்றிக்கொண்டாலேயன்றி; ஆகவே நீ அவரை எப்போதும் நேசிக்கத்தக்கதாக அவரை எப்போதும் விசுவாசிக்கக் கிருபை தாரும் என்று ஜெபி. அன்பு குளிர்போனால், விசுவாசம் சோர்வடைகிறது என்பது நிச்சயம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.