"ஜனங்களிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டவனை உயர்த்தினேன்" (). கிறிஸ்து ஏன் ஜனங்களிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டார்? பேசு, என் இருதயமே, இருதயத்தின் எண்ணங்களே மிகச் சிறந்தவை. உறவின் இரத்தப் பிணைப்பிலே அவர் நம்முடைய சகோதரனாக மாறும்படி அல்லவா அவர் அப்படித் தெரிந்துகொள்ளப்பட்டார்? ஓ, கிறிஸ்துவிற்கும் விசுவாசிக்கும் இடையே எப்பேர்ப்பட்ட ஒரு உறவு இருக்கிறது! விசுவாசி சொல்ல முடியும், "பரலோகத்தில் எனக்கு ஒரு சகோதரர் இருக்கிறார்; நான் ஏழையாய் இருக்கலாம், ஆனால் எனக்கு ஐசுவரியவானான ஒரு சகோதரர் இருக்கிறார், அவர் ஒரு ராஜா, அவர் தன் சிங்காசனத்தில் வீற்றிருக்கும்போது நான் குறைவுபட அனுமதிப்பாரா? ஓ, இல்லை! அவர் என்னை நேசிக்கிறார்; அவர் என் சகோதரர்." விசுவாசியே, இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சிந்தனையை உன்னுடைய நினைவாகிய கழுத்தில் வைர மாலையைப் போலத் தரித்துக் கொள்; நினைவுகூருதலாகிய விரலில் அதை ஒரு பொன் மோதிரமாக மாட்டிக் கொள், அதை ராஜாவின் சொந்த முத்திரையாகப் பயன்படுத்தி, உன்னுடைய விசுவாசத்தின் விண்ணப்பங்கள் வெற்றியடையும் என்ற நம்பிக்கையோடு அதன் மேல் முத்திரையிடு. அவர் இக்கட்டுகளுக்காகப் பிறந்த சகோதரர், அவரை அவ்வாறே நடத்து.
கிறிஸ்து நம்முடைய தேவைகளை அறியவும் நம்மோடு பரிதபிக்கவும் ஜனங்களிலிருந்து தெரிந்துகொள்ளப்பட்டார். "அவர் பாவமில்லாதவராயிருந்தும், எல்லாவிதத்திலும் நம்மைப்போலச் சோதிக்கப்பட்டார்" (). நம்முடைய எல்லாத் துக்கங்களிலும் அவருடைய பரிதாபம் நமக்கு உண்டு. சோதனை, வேதனை, ஏமாற்றம், பலவீனம், சோர்வு, வறுமை—அவை எல்லாவற்றையும் அவர் அறிவார், ஏனெனில் அவர் எல்லாவற்றையும் உணர்ந்திருக்கிறார். கிறிஸ்தவனே, இதை நினைவில் கொள், இது உன்னைத் தேற்றட்டும். உன்னுடைய பாதை எவ்வளவு கடினமானதாகவும் வேதனை நிறைந்ததாகவும் இருந்தாலும், அது உன்னுடைய இரட்சகரின் பாதச்சுவடுகளால் அடையாளப்படுத்தப்பட்டிருக்கிறது; நீ மரண இருளின் பள்ளத்தாக்கையும், பொங்கி வரும் யோர்தானின் ஆழமான தண்ணீலையும் அடையும்போது கூட, அவருடைய பாதச்சுவடுகளை அங்கே காண்பாய். நாம் செல்லும் எல்லா இடங்களிலும், அவரே நமக்கு முன்சென்றவராயிருக்கிறார்; நாம் சுமக்க வேண்டிய ஒவ்வொரு பாரமும், ஒரு காலத்தில் இம்மானுவேலின் தோள்களின் மேல் வைக்கப்பட்டிருந்தது. "அவருடைய பாதை என்னை விட மிகவும் கரடுமுரடானதாகவும் அந்தகாரம் நிறைந்ததாகவும் இருந்தது, என் ஆண்டவராகிய கிறிஸ்து பாடுபட்டார், நான் முறுமுறுக்கலாமா?" தைரியங்கொள்! ராஜரீகப் பாதங்கள் அந்தப் பாதையில் இரத்தச் சிவப்பான அடையாளத்தை விட்டுச் சென்று, முட்கள் நிறைந்த அந்தப் பாதையை என்றென்றைக்குமாய் பரிசுத்தமாக்கியிருக்கின்றன.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.