JUL 23 EVENING

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.

1 யோவான் 1:7

அவர் ஒளியிலிருக்கிறதுபோல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது" (). வசனம், "சுத்திகரிக்கிறது" என்கிறது—"சுத்திகரிக்கும்" என்று அல்ல. மரணத் தருவாயின் நம்பிக்கையாகத் தங்களுக்கு மன்னிப்பு உண்டாகும் என்று முன்னோக்கிப் பார்க்கும் மனிதர்கள் ஏராளம். ஓ! நான் மரிக்கும் போது மன்னிப்பு உண்டாகும் என்ற வெறும் சாத்தியக்கூறை நம்பியிருப்பதை விட, இப்போதே சுத்திகரிப்பைப் பெற்றிருப்பது எவ்வளவு எல்லையற்ற மேலானது. மன்னிப்பின் உணர்வு என்பது அநேக வருடங்களின் கிறிஸ்தவ அநுபவத்திற்குப் பின்பே பெறப்படக் கூடிய உன்னத நிலை என்று சிலர் கற்பனை செய்கிறார்கள். ஆனால் பாவமன்னிப்பு என்பது தற்போதைய காரியமாய் இருக்கிறது—இந்த நாளுக்குரிய சிலாக்கியம், இந்த மணிநேரத்திற்குரிய சந்தோஷம். பாவி ஒருவன் இயேசுவை நம்பும் கணத்திலேயே அவன் முற்றிலும் மன்னிக்கப்படுகிறான். இந்த வசனம் நிகழ்காலத்தில் எழுதப்பட்டிருப்பதினாலேயே அது தொடர்ச்சியையும் குறிக்கிறது; அது நேற்று "சுத்திகரித்தது," இன்று "சுத்திகரிக்கிறது," நாளை "சுத்திகரிக்கும்:" கிறிஸ்தவனே, நீ நதியைக் கடக்கும் வரை அது உனக்கு எப்போதும் அப்படியே இருக்கும்; ஒவ்வொரு மணிநேரமும் நீ இந்த ஊற்றண்டை வரலாம், ஏனெனில் அது இன்னும் சுத்திகரிக்கிறது. அப்படியே அந்தச் சுத்திகரிப்பின் பூரணத்துவத்தையும் கவனித்துப் பாருங்கள், "அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது"—பாவங்களை மாத்திரமல்ல, "சகல பாவங்களையும்." வாசகரே, இந்த வார்த்தையின் விஞ்சிய இனிமையை என்னால் உங்களுக்கு விவரிக்க முடியாது, ஆனால் பரிசுத்த ஆவியானவர் இதன் சுவையை உங்களுக்கு அருளும்படி நான் தேவனை வேண்டுகிறேன். தேவனுக்கு விரோதமான நம்முடைய பாவங்கள் பலதரப்பட்டவை. கணக்கு சிறியதாயிருந்தாலும் பெரியதாயிருந்தாலும், அதே ரசீது இரண்டையும் தீர்த்துப்போடும். இயேசு கிறிஸ்துவின் இரத்தம், அன்பு நிறைந்த யோவானுடைய குறைவுகளுக்கு எப்படியோ, அப்படியே தூஷித்த பேதுருவினுடைய அக்கிரமங்களுக்கும் மகா பாக்கியமான மற்றும் தெய்வீகக் கிரயமாய் இருக்கிறது; நம்முடைய அக்கிரமம் ஒழிந்தது, யாவும் ஒரே நேரத்தில் ஒழிந்தது, என்றென்றைக்குமாய் ஒழிந்தது. பாக்கியமான பூரணத்துவம்! ஒருவன் உறங்கச் செல்லும் போது தியானிப்பதற்கு எப்பேர்ப்பட்ட இனிமையான தலைப்பு.

"பரிசுத்த தேவனுக்கு விரோதமான பாவங்கள்; அவருடைய நீதியுள்ள பிரமாணங்களுக்கு விரோதமான பாவங்கள்; அவருடைய அன்பிற்கும் இரத்தத்திற்கும் விரோதமான பாவங்கள்; அவருடைய நாமத்திற்கும் காரியத்திற்கும் விரோதமான பாவங்கள்; சமுத்திரத்தைப் போல மகா பிரம்மாண்டமான பாவங்கள்— அவைகள் எல்லாவற்றிலிருந்தும் அவர் என்னைச் சுத்திகரிக்கிறார்."

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.