JUN 23 EVENING

ரோமர் 8:23

அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.

ரோமர் 8:23

அதுவுமல்லாமல், ஆவியின் முதற்பலன்களைப் பெற்ற நாமுங்கூட நம்முடைய சரீரமீட்பாகிய புத்திரசுவிகாரம் வருகிறதற்குக் காத்திருந்து, நமக்குள்ளே தவிக்கிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"புத்திரசுவிகாரத்தை... நோக்கியிருக்கிறோம்" (). இவ்வுலகிலும்கூட பரிசுத்தவான்கள் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள், ஆனால் மனிதர்களால் சில ஒழுக்க நற்பண்புகளின் மூலமாக அன்றி அவைகளைக் கண்டறிய முடியாது. புத்திரசுவிகாரம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை, பிள்ளைகள் இன்னும் பகிரங்கமாய் அறிவிக்கப்படவில்லை. ரோமர்கள் மத்தியில் ஒரு மனிதன் ஒரு குழந்தையைச் சுவிகார புத்திரனாக ஏற்றுக்கொண்டு, அதை நீண்ட காலத்திற்கு அந்தரங்கமாய் வைத்திருக்கலாம்: ஆனால் பகிரங்கமாய் ஒரு இரண்டாவது சுவிகார நியமனம் இருந்தது; அந்தச் சட்டம் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளுக்கு முன்பாகக் குழந்தை கொண்டுவரப்படும்போது, அதனுடைய முந்தின ஆடைகள் களையப்பட்டு, அதைத் தன் பிள்ளையாக ஏற்றுக்கொண்ட பிதா அதனுடைய புதிய வாழ்க்கை நிலைக்கு ஏற்ற வஸ்திரங்களை அதற்கு அளிப்பார். "பிரியமானவர்களே, இப்பொழுது தேவனுடைய பிள்ளைகளாயிருக்கிறோம், இனி எவ்விதமாயிருப்போம் என்று இன்னும் வெளிப்படவில்லை" (). பரலோகத்தின் ராஜகுடும்பத்திற்கு ஏற்ற வஸ்திரங்களை நாம் இன்னும் தரிக்கவில்லை; ஆதாமின் குமாரர்களாக நாம் எதைத் தரித்தோமோ அதையே இந்த மாம்சத்திலும் இரத்தத்திலும் தரித்துக் கொண்டிருக்கிறோம்; ஆனால் "பல சகோதரருக்குள்ளே முதற்பேறானவராயிருக்கிற" அவர் வெளிப்படும்போது, நாம் அவருக்கு ஒப்பாயிருப்போம் என்றும், அவர் இருக்கிறவண்ணமாகவே அவரைத் தரிசிப்போம் என்றும் அறிவோம் (). சமுதாயத்தின் மகா தாழ்ந்த நிலையிலிருந்து எடுக்கப்பட்டு, ஒரு ரோமானிய பிரபுவினால் சுவிகார புத்திரனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு குழந்தை தனக்குள்ளே, "நான் பகிரங்கமாய்ப் புத்திரனாக அறிவிக்கப்படும் அந்த நாளுக்காக வாஞ்சிக்கிறேன். அப்போது இந்தச் சாதாரண ஆடைகளைக் களைந்துவிட்டு, என் பிரபுத்துவ நிலைக்கு ஏற்ற வஸ்திரங்களைத் தரித்துக் கொள்வேன்" என்று சொல்வதை உங்களால் ஊகிக்க முடியவில்லையா? தான் பெற்றவைகளில் மகிழ்ச்சியாயிருக்கும் அவன், அந்த ஒரே காரணத்திற்காகத் தனக்கு வாக்குத்தத்தம் பண்ணப்பட்டவைகளின் நிறைவைப் பெறப் பெருமூச்சு விடுகிறான். அப்படியே நாமும் இன்று இருக்கிறோம். நமக்குரிய தகுந்த வஸ்திரங்களைத் தரித்துக்கொண்டு, தேவனுடைய பிள்ளைகளாய் வெளிப்படும் வரை நாம் நோக்கியிருக்கிறோம். நாம் வாலிபப் பிரபுக்கள், இன்னும் நம்முடைய கிரீடங்களைத் தரிக்கவில்லை. நாம் வாலிப மணவாட்டிகள், திருமண நாள் இன்னும் வரவில்லை, நம்முடைய மணவாளன் நம்மேல் வைத்த அன்பினாலே, நாம் திருமணக் காலைக்காக வாஞ்சையோடும் பெருமூச்சோடும் நடத்தப்படுகிறோம். நம்முடைய சமாதானமே இன்னும் அதிகமாய் வாஞ்சிக்கச் செய்கிறது; நம்முடைய சந்தோஷம், நிறைந்து வழியும் ஊற்றைப் போல, வானத்தை நோக்கிப் பாயும் ஐஸ்லாந்தின் நீரூற்றைப் போல, மனிதர்களுக்குத் தன்னை வெளிப்படுத்த வழியில்லாத வறுமையினிமித்தம் நம்முடைய ஆவிக்குள் தவித்து முனகுகிறது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.