"அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும் தப்புவிப்பார்" (). தேவன் தமது ஜனங்களை வேடனுடைய கண்ணிக்கு இரண்டு அர்த்தங்களில் தப்புவிக்கிறார். அதிலிருந்து, மற்றும் அதிற்குள்ளிருந்து. முதலாவதாக, அவர் அவர்களைக் கண்ணிக்குத் தப்புவிக்கிறார்—அவர்களை அதற்குள் நுழைய விடுவதில்லை; இரண்டாவதாக, ஒருவேளை அவர்கள் அதற்குள் அகப்பட்டுக் கொண்டால், அவர் அவர்களை அதிற்குள்ளிருந்து தப்புவிக்கிறார். முந்தின வாக்குத்தத்தம் சிலருக்கு மிகவும் விலையேறப்பெற்றது; பிந்தின வாக்குத்தத்தம் மற்றவர்களுக்கு மிகச் சிறந்தது.
"அவர் உன்னைக் கண்ணிக்குத் தப்புவிப்பார்." எப்படி? உபத்திரவமே பெரும்பாலும் தேவன் நம்மைத் தப்புவிப்பதற்கான வழியாய் இருக்கிறது. நம்முடைய பின்வாங்குதல் சீக்கிரத்தில் நம்முடைய அழிவில் முடியும் என்பதை தேவன் அறிவார், அவர் தமது இரக்கத்தினால் பிரம்பை அனுப்புகிறார். நாம், "ஆண்டவரே, இது ஏன்?" என்கிறோம், நம்முடைய உபத்திரவமே நம்மை அதைவிடப் பெரிய தீமைக்குத் தப்புவிப்பதற்கான வழியாய் இருந்தது என்பதை அறியாமல் இருக்கிறோம். அநேகர் தங்களின் துக்கங்களினாலும் சிலுவைகளினாலும் இவ்விதமாய் அழிவிலிருந்து இரட்சிக்கப்பட்டிருக்கிறார்கள்; இவைகள் பறவைகளை வலையிலிருந்து விரட்டியடித்திருக்கின்றன. மற்ற நேரங்களில், தேவன் தமது ஜனங்களுக்கு உன்னதமான ஆவிக்குரிய பலனைத் தருவதின் மூலம் அவர்களை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிக்கிறார், அதனால் அவர்கள் தீமை செய்ய சோதிக்கப்படும்போது, "நான் இந்தப் பெரிய பொல்லாப்பைச் செய்து, தேவனுக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்வது எப்படி?" () என்கிறார்கள். ஆனால் விசுவாசி ஒரு பொல்லாத நேரத்தில் வலைக்குள் அகப்பட்டுக் கொண்டாலும், தேவன் அவனை அதிற்குள்ளிருந்து வெளியே கொண்டு வருவார் என்பது எப்பேர்ப்பட்ட ஆசீர்வதிக்கப்பட்ட காரியம்! ஓ பின்வாங்கிப் போனவனே, நீ தாழ்த்தப்படு, ஆனால் நம்பிக்கையற்றுப் போகாதே. நீ வழிதவறிப் போனவனாக இருந்தாலும், உன்னுடைய மீட்பர் சொல்வதைக் கேள்—"சீர்கெட்ட பிள்ளைகளே, திரும்புங்கள்; நான் உங்கள் சீர்கேடுகளைக் குணமாக்குவேன்" (). ஆனால் நீ ஒரு கைதியாக இருப்பதால் உன்னால் திரும்ப முடியாது என்று சொல்லுகிறாய். அப்படியானால் இந்த வாக்குத்தத்தத்திற்குச் செவிகொடு—"நிச்சயமாகவே அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்குத் தப்புவிப்பார்." நீ விழுந்த எல்லாத் தீமைகளிலிருந்தும் நீ இன்னும் வெளியே கொண்டு வரப்படுவாய், உன்னுடைய வழிகளுக்காக நீ ஒருபோதும் மனந்திரும்புவதை நிறுத்த மாட்டாய் என்றாலும், உன்னை நேசித்தவர் உன்னைக் தள்ளிவிட மாட்டார்; அவர் உன்னை ஏற்றுக்கொண்டு, உனக்கு மகிழ்ச்சியையும் பூரிப்பையும் தருவார், அதனால் அவர் முறித்த எலும்புகள் மகிழும். பரதீசின் எந்தப் பறவையும் வேடனுடைய வலையில் மடிந்துபோகாது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.