"அவருடைய சேனை (camp - பாளயம்) மிகப்பரிசுத்தமானது (very great - மகா பெரியது)" (). என் ஆத்துமாவே, உன்னுடைய மகிமையும் பாதுகாப்புமாய் இருக்கிற கர்த்தருடைய மகத்துவத்தைச் சற்றுச் சிந்தித்துப் பார். அவர் யுத்தத்தில் வல்லவர், யெகோவா என்பது அவருடைய நாமம் (). பரலோகத்தின் சகல சேனைகளும் அவருடைய செய்கையின் கீழ் இருக்கின்றன, திரளான தூதர்கள் அவருடைய வாசலில் காத்திருக்கிறார்கள், கேருபீன்களும் சேராபீன்களும், காவலாளிகளும் பரிசுத்தவான்களும், துரைத்தனங்களும் அதிகாரங்களும் யாவரும் அவருடைய சித்தத்திற்குச் செவிகொடுக்கிறார்கள். நம்முடைய கண்கள் மாம்சத்தின் பலவீனங்களினால் குருடாக்கப்படாமல் இருந்தால், கர்த்தருக்குப் பிரியமானவர்களைச் சுற்றிலும் அக்கினிமயமான குதிரைகளையும் அக்கினிமயமான இரதங்களையும் நாம் காண்போம் (). சுபாவத்தின் சகல வல்லமைகளும் சிருஷ்டிகருடைய பூரண ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றன: கொடுங்காற்றும் புயலும், மின்னலும் மழையும், பனியும் கல்மழையும், மென்மையான பனியும் புத்துணர்ச்சி தரும் சூரிய வெளிச்சமும் அவருடைய கட்டளையின்படியே வருகின்றன, போகின்றன. மிருகசீரிஷத்தின் கட்டுகளை அவர் அவிழ்க்கிறார், அறுவைமீனின் இனிமையான ஏவுதல்களைப் பூட்டுகிறார் (). பூமியும், கடலும், ஆகாயமும், பூமியின் கீழுள்ள இடங்களும் யெகோவாவின் மாபெரும் சேனைகளுக்குரிய பாசறைகளாய் இருக்கின்றன; எல்லையே இல்லாத விண்வெளி அவருடைய பாளய மைதானமாய் இருக்கிறது, வெளிச்சம் அவருடைய கொடி, ஜுவாலை அவருடைய பட்டயம். அவர் யுத்தத்திற்குப் புறப்பட்டுச் செல்லும்போது, பஞ்சம் தேசத்தைப் பாழாக்குகிறது, கொள்ளிநோய் ஜாதிகளைச் சங்கரிக்கிறது, சூறாவளி கடலைக் கொந்தளிக்கச் செய்கிறது, சுழல்காற்று மலைகளை அதிரப்பண்ணுகிறது, நிலநடுக்கம் இந்த உறுதியான உலகத்தையே அசையச் செய்கிறது. ஜீவனுள்ள சிருஷ்டிகளைப் பொறுத்தவரை, அவைகள் யாவும் அவருடைய ஆளுகைக்குக் கீழ்ப்பட்டிருக்கின்றன, தீர்க்கதரிசியை விழுங்கின மாபெரும் திமிங்கிலத்திலிருந்து, சோனின் வயல்களைப் பாழாக்கின 'சகலவித ஈக்கள்' வரை யாவும் அவருடைய ஊழியக்காரர்களாய் இருக்கின்றன, வெட்டுக்கிளிகளும், பச்சைப்புழுக்களும், கூட்டுப்புழுக்களும் அவருடைய மாபெரும் சேனையின் படைப்பிரிவுகளாய் இருக்கின்றன, ஏனெனில் அவருடைய பாளயம் மகா பெரியது. என் ஆத்துமாவே, பராக்கிரமமுள்ள இந்த ராஜாவோடு நீ சமாதானமாய் இருக்கிறாயா என்று பார், ஆமாம், அதற்கு மேலாக, அவருடைய கொடியின் கீழ் உன்னை ஒப்புவித்துக் கொள், ஏனெனில் அவருக்கு விரோதமாய் யுத்தம் செய்வது பைத்தியக்காரத்தனம், அவருக்கு ஊழியம் செய்வதே மகிமையாகும். இம்மானுவேலாகிய இயேசு நம்மோடிருக்கிறார், கர்த்தருடைய சேனைக்கு ஆட்களைச் சேர்க்க அவர் ஆயத்தமாய் இருக்கிறார்: நான் இன்னும் சேராமல் இருந்தால், நான் உறங்குவதற்கு முன் அவரிடம் சென்று, அவருடைய புண்ணியங்களின் மூலமாய் என்னை ஏற்றுக்கொள்ளும்படி கெஞ்சுவேன்; நான் ஏற்கனவே சிலுவையின் போர்ச்சேவகனாக இருந்தால், நான் தைரியமாய் இருப்பேன்; ஏனெனில் என் ஆண்டவரோடு ஒப்பிடும்போது சத்துரு பலமற்றவன், என் ஆண்டவருடைய பாளயம் மகா பெரியது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.