சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ என்பவர்கள் ராஜாவை நோக்கிப் பிரதியுத்தரமாக: "ராஜாவே... நாங்கள் உம்முடைய தேவர்களுக்கு ஊழியம் செய்வதுமில்லை, நீர் நிறுத்தின பொற்சிலையை ஆராதிப்பதுமில்லை என்பது உமக்குத் தெரிந்திருக்கக்கடவது என்றார்கள்" (). பரிசுத்தமான இந்த மூன்று பிள்ளைகளின், அல்லது பராக்கிரமசாலிகளின் உன்னதமான தைரியம் மற்றும் ஆச்சரியமான விடுதலையின் வரலாறு, கொடுங்கோன்மைக்கு முன்பாகவும் மரணத்தின் வாயிலும் சத்தியத்தை உறுதியாய்ப் பற்றிக் கொள்வதற்கான பலத்தையும் நிலைத்தன்மையையும் விசுவாசிகளின் மனதில் தூண்டத் தகுதியானது. வாலிப கிறிஸ்தவர்கள் விசேஷித்த விதத்தில் இவர்களுடைய மாதிரியிலிருந்து, மார்க்கத்தின் விசுவாச காரியங்களிலும் சரி, வியாபாரத்தின் உத்தம காரியங்களிலும் சரி தங்களின் மனச்சாட்சியை ஒருபோதும் பலியிடக் கூடாது என்பதைக் கற்றுக்கொள்ளட்டும். உத்தமத்தன்மையை இழப்பதைக் காட்டிலும் எல்லாவற்றையும் இழந்துபோவது மேல், மற்றவை யாவும் ஒழிந்துபோனாலும், மரணமடையும் மனிதனின் மார்பை அலங்கரிக்கக் கூடிய மகா விசேஷித்த நவரத்தினமாகிய சுத்தமான மனச்சாட்சியை என்றென்றும் இறுகப் பற்றிக்கொள். சுயநலம் என்னும் மாயாஜால வெளிச்சத்தினால் வழிநடத்தப்படாமல், தெய்வீக அதிகாரத்தின் துருவ நட்சத்திரத்தினால் வழிநடத்தப்படு. எப்பேர்ப்பட்ட ஆபத்துகள் வந்தாலும் நேர்மையைப் பின்பற்று. தற்போதைய ஆதாயம் எதுவும் தெரியாதபோது, தரிசனத்தினாலே அல்ல விசுவாசத்தினாலே நட. பிரமாணங்களின் நிமித்தம் இழப்புகள் ஏற்படும்போது தேவனை நம்பிக் கனப்படுத்து. அவர் உனக்குக் கடனாளியாய் இருக்கிறாரா என்று பார்! "போதும் என்கிற மனதுடனேகூட பக்திவிருத்தி நடத்துவதே மகா ஆதாயம்" () என்பதையும், "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" () என்ற தமது வார்த்தையை இந்த வாழ்க்கையிலும்கூட அவர் நிரூபிக்கிறாரா என்று பார். தேவனுடைய பராமரிப்பில், மனச்சாட்சியின் நிமித்தம் நீ இழப்பைச் சந்திக்க வேண்டியிருந்தால், கர்த்தர் உனக்கு உலகப் பிரகாரமான ஐசுவரியமாகிய வெள்ளியைக் தராவிட்டாலும், ஆவிக்குரிய சந்தோஷமாகிய பொன்னைக் தந்து தன் வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவார் என்பதை நீ காண்பாய். ஒருவனுடைய ஜீவன் அவனுக்குள்ள திரளான ஆஸ்தியில்லை என்பதை நினைவில் கொள் (). கபடற்ற ஆவியைத் தரித்துக் கொள்வதும், குற்றமற்ற இருதயத்தைக் கொண்டிருப்பதும், தேவனுடைய தயவையும் புன்னகையையும் பெற்றிருப்பதுமே, ஓப்பீரின் சுரங்கங்கள் தரக்கூடிய அல்லது தீருவின் வியாபாரம் சம்பாதிக்கக் கூடிய ஐசுவரியங்களை விட மகா பெரிய ஐசுவரியமாய் இருக்கிறது. "இன்முகத்தோடே உண்ணும் கீரைக்கறியே, உட்பகை உள்ள கொழுத்த காளையைவிட மேல்." ஒரு அவுன்ஸ் இருதய அமைதி ஒரு டன் பொன்னை விட மதிப்பானது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.