"விசுவாசத்தினாலே நியாயப்பிரமாணத்தை அவமாக்குகிறோமா? அது கூடாதே; நியாயப்பிரமாணத்தை நிலைநிறுத்துகிறோமே" (). விசுவாசி கர்த்தருடைய குடும்பத்தில் சுவிகார புத்திரனாக ஏற்றுக்கொள்ளப்படும்போது, பழைய ஆதாமுடனும் நியாயப்பிரமாணத்துடனும் அவனுக்கு இருந்த உறவு உடனே முடிவுக்கு வருகிறது; ஆனால் பின்பு அவன் ஒரு புதிய பிரமாணத்தின் கீழும், ஒரு புதிய உடன்படிக்கையின் கீழும் வருகிறான். விசுவாசியே, நீ தேவனுடைய பிள்ளை; உன்னுடைய பரலோகப் பிதாவுக்குக் கீழ்ப்படிவதே உன்னுடைய முதல் கடமையாய் இருக்கிறது. அடிமைத்தனத்தின் ஆவிக்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை: நீ அடிமை அல்ல, பிள்ளை; இப்போது, நீ ஒரு அன்பான பிள்ளையாய் இருக்கிறபடியால், உன்னுடைய பிதாவின் மிகச் சிறிய ஆசைகளுக்கும், அவருடைய சித்தத்தின் மிகச் சிறிய அறிவிப்பிற்கும் கீழ்ப்படிய நீ கடமைப்பட்டிருக்கிறாய். அவர் உன்னை ஒரு பரிசுத்த நியமத்தைக் கைக்கொள்ளும்படி கட்டளையிடுகிறாரா? அதை அலட்சியம் செய்வது உனக்கு ஆபத்தானது, ஏனெனில் நீ உன்னுடைய பிதாவிற்குக் கீழ்ப்படியாமல் போகிறாய். இயேசுவின் சாயலைத் தேடும்படி அவர் உனக்குக் கட்டளையிடுகிறாரா? அதைச் செய்வது உனக்கு மகிழ்ச்சி அல்லவா? இயேசு உன்னை நோக்கி, "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சர்க்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சர்க்குணராயிருக்கக்கடவீர்கள்" () என்கிறாரா? அப்படியானால் நியாயப்பிரமாணம் கட்டளையிடுகிறது என்பதற்காக அல்ல, உன்னுடைய இரட்சகர் உனக்குக் கட்டளையிடுகிறார் என்பதற்காக நீ பரிசுத்தத்தில் பூரணமடையப் பிரயாசப்படுவாய். அவர் தமது பரிசுத்தவான்களை ஒருவரிலொருவர் அன்பாய் இருக்கச் சொல்கிறாரா? நியாயப்பிரமாணம் "உன் அயலானிடத்தில் அன்பாய் இருப்பாயாக" என்று சொல்வதற்காக அல்ல, இயேசு, "நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்" () என்று சொல்வதற்காக அதைச் செய்; அவர் உனக்குக் கொடுத்த கற்பனை இதுவே, "நீங்கள் ஒருவரிலொருவர் அன்பாயிருக்க வேண்டும்." ஏழைகளுக்குத் தர்மம் செய்யச் சொல்லப்படுகிறாயா? தர்மம் என்பது உன்னால் தவிர்க்க முடியாத ஒரு பாரம் என்பதற்காக அல்ல, இயேசு, "உன்னிடத்தில் கேட்கிறவனுக்குக் கொடு" () என்று போதிப்பதற்காக அதைச் செய். "உன் முழு இருதயத்தோடும் தேவனிடத்தில் அன்பாய் இருப்பாயாக" என்று வேதம் சொல்கிறதா? அந்தக்கற்பனையைப் பார்த்துப் பதிலளி, "ஆ கற்பனையே, கிறிஸ்து உன்னை ஏற்கனவே நிறைவேற்றிவிட்டார்—எனவே என்னுடைய இரட்சிப்பிற்காக உன்னை நிறைவேற்ற எனக்குத் தேவையில்லை, ஆனால் தேவன் இப்போது என் பிதாவாய் இருப்பதாலும் என்மேல் அவருக்கு உரிமை இருப்பதாலும், நான் அதை மறுக்காமல் உனக்குக் கீழ்ப்படிய மகிழ்ச்சியாய் இருக்கிறேன்." உன்னுடைய இருதயம் கிறிஸ்துவின் அன்பின் ஏவுகிற வல்லமைக்குக் கீழ்ப்படியத்தக்கதாகப் பரிசுத்த ஆவியானவர் அதைச் செய்வாராக, உன்னுடைய ஜெபம், "உமது கற்பனைகளின் பாதையில் என்னை நடத்தும், அதில் நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்" என்பதாக இருக்கட்டும். கிருபையே பரிசுத்தத்தின் தாயும் செவிலித்தாயுமாய் இருக்கிறது, அது பாவத்திற்கு வாதாடுவதில்லை.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.