"உயர்ந்த பர்வதத்தில் ஏறு" (). கிறிஸ்துவைப் பற்றிய நம்முடைய அறிவு நம்முடைய வெல்ஷ் (Welsh) மலைகளில் ஒன்றின் மேல் ஏறுவதைப் போன்றதே ஆகும். நீ அதன் அடிவாரத்தில் இருக்கும்போது மிகக் குறைந்த அளவே காண்பாய்: மலை தன் உண்மையான உயரத்தைக் காட்டிலும் பாதியளவே இருப்பது போலத் தோன்றும். ஒரு சிறிய பள்ளத்தாக்கிற்குள் அடைக்கப்பட்டவனாய், மலையின் அடிவாரத்திலுள்ள நீரோடையில் வந்து பாயும் சிற்றோடைகளைத் தவிர வேறு எதையும் நீ கண்டுகொள்ள மாட்டாய். முதல் மேட்டின் மேல் ஏறிப் பார், பள்ளத்தாக்கு உன்னுடைய பாதங்களுக்குக் கீழே நீளமாகவும் அகலமாகவும் மாறுவதைக் காண்பாய். இன்னும் உயரச் சென்று பார், சுற்றிலும் நான்கு அல்லது ஐந்து மைல் சுற்றளவிற்குத் தேசத்தைக் காண்பாய், விரிவடையும் அந்தத் தரிசனத்தைக் கண்டு நீ மகிழ்ச்சியடைவாய். இன்னும் மேலே ஏறு, காட்சி இன்னும் பெரிதாகும்; இறுதியில், நீ அதன் உச்சியில் நின்று கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு நோக்கிப் பார்க்கும்போது, தேசம் முழுவதும் உனக்கு முன்பாகக் கிடப்பதைக் காண்பாய். அங்கே ஏதோ ஒரு தூரத்து வனாந்தரம், ஒருவேளை இருநூறு மைல் தொலைவில் இருக்கலாம், இங்கே கடல், அங்கே பிரகாசிக்கும் நதி, ஒரு தொழிற்சாலைப் பட்டணத்தின் புகைவீசும் புகைபோக்கிகள், அல்லது ஜனங்கள் மொய்க்கும் ஒரு துறைமுகத்திலுள்ள கப்பல்களின் பாய்மரங்கள் யாவும் தெரியும். இவைகளெல்லாம் உனக்கு மகிழ்ச்சியையும் பேரின்பத்தையும் தரும், நீ, "இந்த உன்னதமான எல்லையில் இவ்வளவு காரியங்களைக் காண முடியும் என்று நான் ஊகித்திருக்கவே முடியாது" என்பாய். இப்பொழுதோ, கிறிஸ்தவ வாழ்க்கையும் அத்தகைய முறைமையைக் கொண்டதே. நாம் முதலில் கிறிஸ்துவை விசுவாசிக்கும்போது அவரைப் பற்றி மிகக் குறைந்த அளவே காண்கிறோம். நாம் எவ்வளவு உயரமாய் ஏறுகிறோமோ, அவ்வளவாக அவருடைய அழகுகளை அதிகமாய் கண்டுகொள்கிறோம். ஆனால் உச்சியை அடைந்தவன் யார்? அறிவுக்கெட்டாத கிறிஸ்துவின் அன்பின் உயரங்களையும் ஆழங்களையும் முழுமையாய்க் கிரகித்தவன் யார்? (). பவுல், வயது முதிர்ந்தவராய், நரைத்த மயிரோடு ரோமிலுள்ள ஒரு சிறைச்சாலையில் குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தபோது, நம்மை விட அதிக உன்னதமான பலத்தோடு, "நான் விசுவாசித்திருக்கிறவர் இன்னாரென்று அறிவேன்" () என்று சொல்ல முடிந்தது, ஏனெனில் அவருடைய ஒவ்வொரு அநுபவமும் ஒரு மலையின் மேல் ஏறுவதைப் போலவும், ஒவ்வொரு சோதனையும் மற்றொரு உச்சியை அடைவதைப் போலவும் இருந்தது, அவருடைய மரணம் தன் ஆத்துமாவை ஒப்புவித்தவருடைய சகல உண்மையையும் அன்பையும் காணக் கூடிய மலையின் உச்சியை அடைவதைப் போல இருந்தது. பிரியமான சிநேகிதனே, நீயும் உயர்ந்த பர்வதத்தில் ஏறு.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.