கர்த்தருடைய ஜனங்கள் உடன்படிக்கையின் மீதே பிரியமாய் இருக்கிறார்கள். பரிசுத்த ஆவியானவர் அவர்களைத் தன் விருந்துசாலைக்குள் நடத்தி, தன் அன்பின் கொடியை அவர்கள் மேல் அசைக்கும் போதெல்லாம், அது அவர்களுக்கு ஒருபோதும் வற்றாத ஆறுதலின் மூலமாய் இருக்கிறது. பகல் நட்சத்திரம் தன் இருப்பிடத்தை அறிவதற்கு முன்பும், கோர்ட்டுகள் தங்கள் வட்டங்களை ஓடுவதற்கு முன்பாகவும், விசுவாசிகளின் நலன்கள் கிறிஸ்து இயேசுவுக்குள் பாதுகாக்கப்பட்டன என்பதை நினைவுகூர்ந்து, அந்த உடன்படிக்கையின் பூர்வகாலத்தைத் தியானிப்பதில் அவர்கள் மகா மகிழ்ச்சியடைகிறார்கள். "தாவீதின் கிருபைகளை" தியானிக்கும் போது, உடன்படிக்கையின் உறுதியினை நினைவுகூருவது அவர்களுக்கு விசேஷித்த இன்பத்தைத் தருகிறது. "எல்லாவிதத்திலேயும் ஒழுங்குபடுத்தப்பட்டதும் காப்பிடப்பட்டதுமான" ஒரு உடன்படிக்கையாக அதைக் கொண்டாடுவதில் அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். காலம் அல்லது நித்தியம், ஜீவன் அல்லது மரணம் ஆகிய எதனாலேயும் ஒருபோதும் மீற முடியாத—நித்தியத்தைப் போலப் பழமையானதும் சகாப்தங்களின் கன்மலையைப் போல நித்தியமானதுமான ஒரு உடன்படிக்கை என்ற அதனுடைய மாறாத தன்மையைக் குறித்துச் சிந்திக்கும்போது அது பெரும்பாலும் அவர்களுடைய இருதயத்தைச் சந்தோஷத்தால் விரிவடையச் செய்கிறது. தேவன் அவர்களுக்குப் பங்கும், கிறிஸ்து அவர்களுக்குத் தோழனும், ஆவியானவர் அவர்களுக்குத் தேற்றரவாளனும், பூமி தங்குமிடமும், பரலோகம் வீடுமாக எல்லாவற்றையும் அதில் பார்க்கிறபடியால், இந்த உடன்படிக்கையின் பரிபூரணத்திலும் அவர்கள் விருந்துண்ணுகிறார்கள். அதனுடைய பூர்வகால மற்றும் நித்திய தானப் பத்திரத்தில் தனக்குப் பங்குள்ள ஒவ்வொரு ஆத்துமாவுக்கும் அந்தச் சுதந்தரம் ஒதுக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டிருப்பதை அவர்கள் அதில் காண்கிறார்கள். பைபிளில் அது ஒரு புதையலாகக் காணப்பட்டபோது அவர்களுடைய கண்கள் பிரகாசித்தன; ஆனால் தெய்வீக உறவினரின் கடைசி மரண சாசனத்தில் அது அவர்களுக்கு எழுதிவைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டபோது அவர்களுடைய ஆத்துமாக்கள் எவ்வளவாய் பூரிப்படைந்தன! எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடன்படிக்கையின் கிருபையைத் தியானிப்பதே தேவனுடைய ஜனங்களின் மகிழ்ச்சியாய் இருக்கிறது. நியாயப்பிரமாணம் கிரியைகளின் உடன்படிக்கையாய் இருந்து தகுதியைச் சார்ந்து நின்றபடியால் அது ஒழிந்துபோயிற்று என்பதை அவர்கள் காண்கிறார்கள், ஆனால் இது கிருபையே அடிப்படையாகக் கொண்டும், கிருபையே நிபந்தனையாகவும், கிருபையே சுருக்கமாகவும், கிருபையே அரணாகவும், கிருபையே அஸ்திபாரமாகவும், கிருபையே உச்சிக்கல்லாகவும் கொண்டிருப்பதினால் நிலைத்திருக்கிறது என்பதை அவர்கள் உணருகிறார்கள். இந்த உடன்படிக்கை ஐசுவரியத்தின் பொக்கிஷமும், உணவின் களஞ்சியமும், ஜீவனின் ஊற்றும், இரட்சிப்பின் பண்டகசாலையும், சமாதானத்தின் பட்டயமும், சந்தோஷத்தின் புகலிடமுமாய் இருக்கிறது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.