"உங்கள் பரமபிதா" (). தேவனுடைய ஜனங்கள் இரட்டிப்பான முறையில் அவருடைய பிள்ளைகளாய் இருக்கிறார்கள், அவர்கள் சிருஷ்டிப்பின்படி அவருடைய சந்ததியாயும், கிறிஸ்துவுக்குள் சுவிகார புத்திரராக்கப்பட்டதின்படி அவருடைய குமாரராயும் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள், "பரமண்டலங்களிலிருக்கிற எங்கள் பிதாவே" என்று அவரை அழைக்கச் சிலாக்கியம் பெற்றிருக்கிறார்கள். பிதா! ஓ, அது எப்பேர்ப்பட்ட விலையேறப்பெற்ற வார்த்தை. இங்கே அதிகாரம் இருக்கிறது: "நான் பிதாவானால் என் கனம் எங்கே?" (). நீங்கள் குமாரராயிருந்தால், உங்களுடைய கீழ்ப்படிதல் எங்கே? இங்கே அதிகாரத்தோடு அன்பு கலந்திருக்கிறது; அது கலகத்தைத் தூண்டாத அதிகாரம்; மனப்பூர்வமாய் செலுத்தப்படுகிற கீழ்ப்படிதல் கேட்கப்படுகிறது—அது விலக்கிக்கொள்ளக் கூடுமானாலும் விலக்கப்படாத உன்னதமான கீழ்ப்படிதலாகும். தேவனுடைய பிள்ளைகள் அவருக்குச் செலுத்தும் கீழ்ப்படிதல் அன்பான கீழ்ப்படிதலாய் இருக்க வேண்டும். எஜமானரின் வேலைக்குக் பயப்படும் அடிமைகளைப் போலத் தேவனுடைய ஊழியத்தைச் செய்ய முற்படாமல், உங்களுடைய பிதாவின் வழி அதுவே என்பதால் அவருடைய கற்பனைகளின் பாதையில் ஓடுங்கள். நீதி என்பது உங்கள் பிதாவின் சித்தமாய் இருப்பதாலும், அவருடைய சித்தம் அவருடைய பிள்ளையின் சித்தமாய் இருக்க வேண்டும் என்பதாலும், உங்கள் சரீரங்களை நீதிக்குரிய ஆயுதங்களாக ஒப்புக்கொடுங்கள். பிதா!—இங்கே ராஜரீகப் பண்பு அன்பினால் எவ்வளவு இனிமையாய் மறைக்கப்பட்டிருக்கிறது என்றால், ராஜாவின் முகம் தெரியும்போது ராஜாவின் கிரீடம் மறக்கப்படுகிறது, அவருடைய செங்கோல் இரும்புத் தண்டாக இல்லாமல், கிருபையின் வெள்ளிச் செங்கோலாக மாறுகிறது—அதை ஏந்தியிருப்பவரின் கனிவான கரத்தில் அந்தச் செங்கோலே மறக்கப்பட்டுப்போனது போலத் தோன்றுகிறது. பிதா!—இங்கே கனமும் அன்பும் இருக்கிறது. தன் பிள்ளைகள் மேல் ஒரு பிதா வைக்கும் அன்பு எவ்வளவு பெரியது! ஒரு சிநேகிதனால் செய்ய முடியாததை, வெறும் தாராள குணம் முயற்சிக்கவும் துணியாததை, ஒரு பிதாவின் இருதயமும் கரமும் தன் குமாரர்களுக்காகச் செய்ய வேண்டும். அவர்கள் அவருடைய சந்ததி, அவர் அவர்களை ஆசீர்வதிக்க வேண்டும்; அவர்கள் அவருடைய பிள்ளைகள், அவர்களைக் காப்பதில் அவர் தன் பலத்தை வெளிப்படுத்த வேண்டும். பூமியிலுள்ள ஒரு பிதா தன் பிள்ளைகளை ஓயாத அன்போடும் கவலையோடும் கண்காணிப்பாரானால், நம்முடைய பரமபிதா இன்னும் எவ்வளவு அதிகமாய் அவ்வாறு செய்வார்? அப்பா, பிதாவே! இதைச் சொல்ல முடிகிறவன், கேருபீன்களோ அல்லது சேராபீன்களோ எட்ட முடியாத மிகச் சிறந்த சங்கீதத்தை இசைத்துவிட்டான். பிதா—என்ற அந்த வார்த்தையின் ஆழத்தில் பரலோகம் இருக்கிறது! நான் கேட்கக்கூடிய அனைத்தும், என் தேவைகள் எதைப்பற்றியதாய் இருந்தாலும், என் ஆசைகள் எதை வாஞ்சித்தாலும் அனைத்தும் அதில் அடங்கியிருக்கிறது. "பிதா" என்று என்னால் சொல்ல முடிகிறபோது, நித்திய நித்திய காலத்திற்கும் எல்லாவற்றிலும் எல்லாவற்றையும் நான் பெற்றிருக்கிறேன்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.