"அதைக் கேட்டவர்களெல்லாரும்... சொன்ன சங்கதிகளைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்" (). நம்முடைய தேவனுடைய மாபெரும் அதிசயங்களைக் கண்டு நாம் ஆச்சரியப்படுவதை நிறுத்தக் கூடாது. பரிசுத்தமான ஆச்சரியத்திற்கும் உண்மையான ஆராதனைக்கும் இடையே ஒரு கோடு வரைவது மிகவும் கடினம்; ஏனெனில் ஆத்துமா தேவனுடைய மகிமையின் மகத்துவத்தினால் திகைப்படையும் போது, அது பாடலின் மூலம் அதை வெளிப்படுத்தாவிட்டாலும், அல்லது தலைகுனிந்து தாழ்மையான ஜெபத்தில் தன் குரலை எழுப்பாவிட்டாலும், அது மௌனமாய் ஆராதிக்கிறது. மாம்சமான நம்முடைய தேவன் "அதிசயமானவர்" () என்று ஆராதிக்கப்பட வேண்டியவர். தேவன் விழுந்துபோன தன் சிருஷ்டியாகிய மனிதனை நினைத்தருளி, அவனை ஆக்கினையின் துடைப்பத்தினால் வாரியெறியாமல், தானே மனிதனுடைய மீட்பராக மாறவும், அவனுடைய மீட்புக் கிரயத்தைச் செலுத்தவும் முன்வந்தது உண்மையாகவே அதிசயமானது! ஆனால் ஒவ்வொரு விசுவாசிக்கும் இரட்சிப்பு என்பது தன்னோடு தொடர்புபடுத்திப் பார்க்கும்போதுதான் மிகவும் அதிசயமானதாகத் தோன்றுகிறது. உனக்காக பூமியில் அவமானப்பட்டுப் பாடுபடும்படி, இயேசு மேலேயுள்ள சிங்காசனங்களையும் ராஜரீகங்களையும் துறந்து இறங்கி வந்தது உண்மையாகவே கிருபையின் அற்புதம் ஆகும். உன்னுடைய ஆத்துமா அந்த ஆச்சரியத்தில் மூழ்கிப்போகட்டும், ஏனெனில் ஆச்சரியம் என்பது இவ்விதமாய் மிகவும் நடைமுறைக்குரிய ஒரு உணர்வாகும். பரிசுத்தமான ஆச்சரியம் உன்னை நன்றியுள்ள ஆராதனைக்கும் இருதயபூர்வமான ஸ்தோத்திரத்திற்கும் நடத்தும். அது உனக்குள் தெய்வீக விழிப்புணர்வை உண்டாக்கும்; இத்தகைய அன்பிற்கு விரோதமாய் பாவம் செய்ய நீ பயப்படுவாய். உன்னுடைய விலையேறப்பெற்ற குமாரனின் ஈவில் சர்வவல்லமையுள்ள தேவனுடைய பிரசன்னத்தை உணர்ந்து, நீ நிற்கும் இடம் பரிசுத்த பூமியாய் இருப்பதால் உன்னுடைய காலணிகளை உன்னுடைய கால்களிலிருந்து கழற்றிப் போடுவாய். அதே நேரத்தில் நீ மகிமையான நம்பிக்கைக்குள் நடத்தப்படுவாய். இயேசு உனக்காக இத்தகைய ஆச்சரியமான காரியங்களைச் செய்திருந்தால், பரலோகமே உன்னுடைய எதிர்பார்ப்பிற்குப் பெரியதாகத் தோன்றாது. முன்னணையைக் கண்டும் சிலுவையைக் கண்டும் ஒருமுறை ஆச்சரியப்பட்டவனால், வேறு எதைக் கண்டுதான் பிரமிக்க முடியும்? இரட்சகரைக் கண்ட பின்பு ஆச்சரியப்படுவதற்கு வேறு என்ன அதிசயமான காரியம் மீதியிருக்கப் போகிறது? பிரியமான வாசகரே, உன்னுடைய வாழ்க்கையின் அமைதியான மற்றும் தனிமையான சூழ்நிலையின் காரணமாக, தாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் அறிவித்த பெத்லகேமின் மேய்ப்பர்களைப் போல உன்னால் செய்ய முடியாமல் இருக்கலாம், ஆனால் தேவன் செய்தவைகளைக் கண்டு ஆச்சரியப்படுவதன் மூலம், சிங்காசனத்திற்கு முன்பாக ஆராதிக்கிறவர்களின் கூட்டத்தை உன்னால் நிச்சயமாக நிரப்ப முடியும்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.