"நீயும் எங்களைப்போலப் பலவீனனாய் விழுந்தாயோ?" (). வேஷக்காரனான ஒரு விசுவாசியின் நிர்வாண ஆத்துமா தேவனுக்கு முன்பாக நிற்கும் போது அவனுடைய ஆக்கினைத்தீர்ப்பு எப்பேர்ப்பட்டதாய் இருக்கும்? "சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டுப் போங்கள்; நீ என்னை நிராகரித்தாய், நானும் உன்னை நிராகரிக்கிறேன்; நீ வேசித்தனஞ்செய்து என்னைவிட்டு வழிவிலகிப் போனாய்: நானும் உன்னை என் சமூகத்திலிருந்து என்றென்றைக்குமாய் துரத்திவிட்டேன், உன்மேல் மனதுருக மாட்டேன்" என்ற அந்தச் சத்தத்தை அவன் எப்படித் தாங்குவான்? திரண்டிருக்கும் ஜனக்கூட்டத்திற்கு முன்பாக, வழிவிலகிப்போன அந்த வேஷக்காரனின் முகமூடி கிழிக்கப்படும் அந்த மகா பெரிய நாளில், அந்தப் பாக்கியற்றவனுக்கு எப்பேர்ப்பட்ட முகவெட்கம் உரியதாகும்! மார்க்கத்தை ஒருபோதும் அறிக்கை செய்யாத அக்கிரமக்காரர்களும் பாவிகளும் தங்களின் எரியும் படுக்கைகளிலிருந்து எழும்பி நின்று, அவனைச் சுட்டிக்காண்பிப்பதைக் கவனித்துப் பார். "இதோ இவன்தான்," என்கிறான் ஒருவன், "இவன் நரகத்திலுமா நற்செய்தியைப் பிரசங்கிப்பான்?" "இதோ இவன்தான்," என்கிறான் மற்றொருவன், "நான் தூஷித்தபோது இவன் என்னைக் கடிந்து கொண்டான், இவனோ அந்தரங்கத்தில் வேஷக்காரனாய் இருந்திருக்கிறான்!" "ஆகா!" என்கிறான் வேறொருவன், "இதோ சங்கீதம் பாடும் மெத்தடிஸ்ட் வருகிறான்—எப்போதுமே தன் கூட்டங்களில் இருந்தவன் இவன்; தான் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வது நிச்சயம் என்று மேட்டிமை பாராட்டின மனிதன் இவன்தான்; இதோ இவனும் இங்கேதான் இருக்கிறான்!" சாத்தானிய வாதக்காரர்கள் மத்தியில், பிசாசுகள் அந்த வேஷக்காரனின் ஆத்துமாவை நரகத்திற்குள் இழுத்துச் செல்லும் அந்த நாளைக் காட்டிலும் உன்னதமான தீவிரம் வேறு எப்போதுமே காணப்படாது. தேவனுடைய தாசன் புனியன் (Bunyan) நரகத்தின் பின்வழிப் பாதையைக் குறித்துப் பேசும்போது, மாபெரும் ஆனால் பயங்கரமான கவித்துவத்துவத்தின் உன்னதப் பிரகாசத்தோடு இதை விவரிக்கிறார். ஏழு பிசாசுகள் ஒன்பது கயிறுகளால் அந்தப் பாக்கியற்றவனைக் கட்டி, தான் நடப்பதாக அறிக்கை செய்த பரலோகப் பாதையிலிருந்து அவனை இழுத்துக்கொண்டு போய், நரகத்தின் பின்வாசல் வழியாய் அவனை உள்ளே தள்ளினவாம். வேஷக்காரர்களே, நரகத்தின் அந்தப் பின்வழிப் பாதையைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்! "நீங்கள் விசுவாசமுள்ளவர்களோ என்று உங்களை நீங்களே சோதித்து அறியுங்கள்" (). உங்களுடைய நிலையை நன்றாய்க் கவனித்துப் பாருங்கள்; நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கிறீர்களா இல்லையா என்று கண்டறியுங்கள். தன்னைத்தானே சோதித்துப் பார்க்கும்போது தாராளமான தீர்ப்பைக் கொடுப்பது உலகிலேயே மகா எளிய காரியமாகும்; ஆனால் ஓ, இந்த விஷயத்தில் நீதியும் உண்மையும் உள்ளவர்களாய் இருங்கள். எல்லாரிடத்திலும் நீதியாய் இருங்கள், ஆனால் உங்களிடத்தில் மகா கண்டிப்பாய் இருங்கள். நீங்கள் அஸ்திபாரம் இட்டிருப்பது கன்மலையின் மேல் அல்லவென்றால், பெருமழை பெய்து பெருவெள்ளம் வந்து மோதும்போது அந்த வீடு விழுந்துபோகும், விழுந்துபோன அதின் வீழ்ச்சி மகா பெரியதாயிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள் (). ஓ கர்த்தர் உங்களுக்கு உத்தமத்தையும், நிலைத்தன்மையையும், உறுதியையும் தருவாராக; எப்பேர்ப்பட்ட பொல்லாத நாளிலும் நீங்கள் வழிவிலகிப் போகாதபடி காப்பாராக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.