"இச்சையினால் உலகத்திலுண்டான கேடான அழிவுக்குத் தப்பி" (). உயிர்த்தெழுந்த உங்களுடைய கர்த்தரின் வல்லமையில் நீங்கள் வாழ விரும்பினால், மாம்சத்திற்கு இடம் கொடுக்கும் எல்லா எண்ணங்களையும் என்றென்றைக்குமாய் ஒழித்துவிடுங்கள். கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கும் ஒரு மனிதன் பாவத்தின் கேடான அழிவுக்குள் வாசம் பண்ணுவது தகாது. "உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?" என்று தூதன் மகதலேனா மரியாளிடத்தில் கேட்டான் (). உயிரோடிருப்பவன் கல்லறைக்குள் வாசம் பண்ணலாமா? தெய்வீக ஜீவன் மாம்ச இச்சைகளின் பிணவறைக்குள் பூட்டி வைக்கப்படலாமா? நாம் கர்த்தருடைய பாத்திரத்தில் பங்குபெறும் போதே, பேலியாளின் பாத்திரத்திலும் எப்படிக் குடிக்க முடியும்? (). நிச்சயமாக, விசுவாசியே, வெளிப்படையான இச்சைகள் மற்றும் பாவங்களிலிருந்து நீ மீட்கப்பட்டிருக்கிறாய்: சாத்தானிய வேடனின் மிகவும் அந்தரங்கமான மற்றும் மயக்கும் வலைகளிலிருந்தும் நீ தப்பியிருக்கிறாயா? பெருமையாகிய இச்சையிலிருந்து நீ வெளியே வந்திருக்கிறாயா? சோம்பலிலிருந்து நீ தப்பியிருக்கிறாயா? லௌகீகப் பாதுகாப்பிலிருந்து நீ முற்றிலும் தப்பியிருக்கிறாயா? உலகத்தன்மை, ஜீவனத்தின் பெருமை, மற்றும் ஐசுவரியத்தின் மயக்கமாகிய பொருளாசைக்கு மேலாக நாடோறும் வாழ நீ பிரயாசப்படுகிறாயா? (). இதற்காகவே நீங்கள் தேவனுடைய பொக்கிஷங்களினால் ஐசுவரியவான்களாக்கப்பட்டிருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் மெய்யாகவே தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களாயும், அவராலே நேசிக்கப்பட்டவர்களாயும் இருந்தால், கிருபையின் ஏராளமான பொக்கிஷங்கள் உங்கள்மேல் வீணாய்ப் போக அனுமதிக்காதீர்கள். பரிசுத்தத்தைப் பின்தொடருங்கள்; அதுவே கிறிஸ்தவனின் கிரீடமும் மகிமையுமாய் இருக்கிறது. பரிசுத்தமில்லாத ஒரு சபை! அது உலகத்திற்குப் பிரயோஜனமற்றது, மனிதர்கள் மத்தியில் அதற்கு மதிப்பில்லை. அது அருவருப்பானது, நரகத்தின் பரியாசம், பரலோகத்தின் வெறுப்பு. உலகத்திற்கு நேரிட்ட மகா கொடிய தீமைகள் யாவும் பரிசுத்தமில்லாத சபையினாலேயே அதற்குக் கொண்டு வரப்பட்டன. ஓ கிறிஸ்தவனே, தேவனுடைய உடன்படிக்கைகள் உன்மேல் இருக்கின்றன. நீ தேவனுடைய ஆசாரியன்: அதற்கேற்றபடி கிரியை செய். நீ தேவனுடைய ராஜா: உன்னுடைய இச்சைகளின் மேல் அரசாளு. நீ தேவனால் தெரிந்துகொண்டவன்: பேலியாளோடு ஐக்கியமாய் இராதே. பரலோகமே உன்னுடைய பங்கு: பரலோக ஆவியைப் போல ஜீவி, அப்போதுதான் இயேசுவின் மேல் உனக்கு உண்மையான விசுவாசம் இருக்கிறது என்பதை நிரூபிப்பாய், ஏனெனில் வாழ்க்கையில் பரிசுத்தம் இல்லாவிட்டால் இருதயத்தில் விசுவாசம் இருக்க முடியாது. "ஆண்டவரே, இரத்தத்தினால் விலைக்கிரயமாய் வாங்கப்பட்ட நாமத்தைச் சுமக்கிற ஒருவனாக வாழ வாஞ்சிக்கிறேன்; உமக்குத் துக்கத்தை ஏற்படுத்த மாத்திரம் பயப்படுகிற, அதைத் தவிர வேறு எந்த அவமானத்தையும் அறியாத ஒருவனாக வாழ எனக்குக் கிருபை தாரும்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.