இந்த வார்த்தைகள் பரிசுத்தவான்களால் தங்கள் புறப்படும் மணிநேரத்தில் அடிக்கடி பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இன்று மாலை நாம் அவைகளைத் தியானித்துப் பயனடையலாம். ஜீவனிலும் மரணத்திலும் விசுவாசியின் அக்கறையின் பொருள் அவனுடைய சரீரமோ அவனுடைய சொத்துக்களோ அல்ல, அவனுடைய ஆத்துமாவே; இதுவே அவனுடைய விலையேறப்பெற்ற பொக்கிஷம்—இது பாதுகாப்பாய் இருந்தால் எல்லாம் நலமே. ஆன்மாவுடன் ஒப்பிடும்போது இந்த மரண நிலை எம்மாத்திரம்? விசுவாசி தன் ஆத்துமாவைப் தன் தேவனுடைய கரத்தில் ஒப்புக்கொடுக்கிறான்; அது அவரிடமிருந்தே வந்தது, அது அவருடையதே, அவர் அதை இதற்குமுன் தாங்கினார், அதைக்காக்க அவர் வல்லவராயிருக்கிறார், அதை அவர் பெற்றுக்கொள்வதே மகா பொருத்தமானதாகும். யெகோவாவின் கரத்தில் சகல காரியங்களும் பாதுகாப்பானவை; நாம் கர்த்தரிடம் ஒப்புக்கொடுக்கும் எவையும், இப்போதும் நாம் தீவிரித்துக் கொண்டிருக்கும் அந்த மகா பெரிய நாளிலும் உறுதியாய் இருக்கும். பரலோகப் பராமரிப்பின் பாதுகாப்பில் இளைப்பாறுவது அமைதியான வாழ்க்கையும் மகிமையான மரணமுமாய் இருக்கிறது. எல்லா நேரங்களிலும் நாம் நம்முடைய அனைத்தையும் இயேசுவின் நம்பிக்கையான கரத்தில் ஒப்புக்கொடுக்க வேண்டும்; அப்போது, ஜீவன் ஒரு நூலில் தொங்கினாலும், உபத்திரவங்கள் சமுத்திரத்தின் மணலைப் போலப் பெருகினாலும், நம்முடைய ஆத்துமா அமைதியாய் வாசம் பண்ணி, அமைதியான இளைப்பாறுதலின் இடங்களில் தன்னைத் தாமே மகிமைப்படுத்தும்.
"நீர் என்னை மீட்டீர்; சத்தியமுள்ள கர்த்தராகிய தேவனே." மீட்பு என்பது நம்பிக்கைக்குரிய ஒரு திடமான அஸ்திபாரமாகும். நாம் அநுபவித்ததைப் போலக் கல்வாரியைத் தாவீது அறிந்திருக்கவில்லை, ஆனால் லௌகீக மீட்பு அவரைத் தேற்றியது; அப்படியானால் நித்திய மீட்பு இன்னும் எவ்வளவாய் நம்மைத் தேற்றக் கூடாது? கடந்த கால விடுதலைகள் தற்போதைய உதவிக்கான பலத்த வாதங்களாய் இருக்கின்றன. கர்த்தர் தான் செய்ததை மறுபடியும் செய்வார், ஏனெனில் அவர் மாறுவதில்லை. அவர் தமது வாக்குத்தத்தங்களுக்கு உண்மையுள்ளவரும் தமது பரிசுத்தவான்களுக்குக் கிருபையுள்ளவருமாய் இருக்கிறார்; அவர் தமது ஜனங்களை விட்டு விலக மாட்டார்.
"நீர் என்னைக்கொன்றாலும் நான் உம்மை நம்புவேன், தூசியிலிருந்தும் உம்மைத் துதிப்பேன், நான் அநுபவித்து அதை அறிவது போல நிருபித்துச் சொல்வேன், உமது சொல்லொணாத அன்பை. நீர் என்னைச் சிட்சித்துச் சீர்திருத்தலாம், ஆனால் நீர் ஒருபோதும் என்னைக் கைவிட மாட்டீர்; மீட்புக் கிரயம் செலுத்தப்பட்டபடியால், உமது அன்பின் மேல் என் நம்பிக்கை நிலைத்திருக்கிறது."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.