JAN 27 MORNING

யோவான் 1:16

அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.

யோவான் 1:16

அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும் கிருபையின்மேல் கிருபை பெற்றோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"அவருடைய பரிபூரணத்தினால் நாமெல்லாரும்... பெற்றோம்" (). கிறிஸ்துவுக்குள் ஒரு பரிபூரணம் இருக்கிறது என்பதை இந்த வார்த்தைகள் நமக்குக் கூறுகின்றன. அவரிடம் அத்தியாவசியமான தெய்வீகப் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் வாசமாயிருக்கிறது" (). அவரிடம் பூரண மனிதத்துவத்தின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் அவருக்குள், சரீரப்பிரகாரமாக, அந்தத் தெய்வீகம் வெளிப்படுத்தப்பட்டது. அவருடைய இரத்தத்தில் பாவநிவிர்த்தி செய்யும் வல்லமையின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் "அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கிறது" (). அவருடைய வாழ்க்கையில் நீதிமானாக்கும் நீதியின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் "கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கிறவர்களுக்கு ஆக்கினைத்தீர்ப்பில்லை" (). அவருடைய வாதத்தில் தெய்வீக ஜெயத்தின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் "தமதுமூலமாய் தேவனிடத்தில் வருகிறவர்களை அவர் முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயிருக்கிறார்; அவர்களுக்காக வேண்டுதல்செய்யும்படி அவர் எப்பொழுதும் உயிரோடிருக்கிறார்" (). அவருடைய மரணத்தில் வெற்றியின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் மரணத்தினாலே மரணத்திற்கு அதிகாரியாகிய பிசாசானவனை அவர் அழித்தார் (). மரித்தோரிலிருந்து அவர் உயிர்த்தெழுந்ததில் வல்லமையின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் அதினால் "இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலே, அழியாததும்... சுதந்தரத்திற்கேதுவாக, ஜீவனுள்ள நம்பிக்கை உண்டாகும்படி... நம்மை மறுபடியும் ஜெநிப்பித்தார்" (). அவருடைய பரமேறுதலில் ஜெயகம்பீரத்தின் பரிபூரணம் இருக்கிறது, ஏனெனில் "அவர் உன்னதத்திற்கு ஏறி, சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோய், மனுஷர்களுக்கு வரங்களை அளித்தார்" (). எல்லாவிதமான மற்றும் எல்லா வடிவத்திலுமுள்ள ஆசீர்வாதங்களின் பரிபூரணம் அவரிடம் உண்டு; மன்னிப்பதற்கான கிருபையின் பரிபூரணம், மறுபடி ஜெநிப்பிப்பதற்கான கிருபையின் பரிபூரணம், பரிசுத்தமாக்குவதற்கான கிருபையின் பரிபூரணம், பாதுகாப்பதற்கான கிருபையின் பரிபூரணம் மற்றும் பூரணப்படுத்துவதற்கான கிருபையின் பரிபூரணம். எல்லாக் காலங்களிலும் ஒரு பரிபூரணம் இருக்கிறது; உபத்திரவத்தில் ஆறுதலின் பரிபூரணம்; ஐசுவரியத்தில் வழிநடத்துதலின் பரிபூரணம். தேவனுடைய ஒவ்வொரு பண்பின் ஞானம், வல்லமை, அன்பின் பரிபூரணம்; அந்தப் பரிபூரணத்தை ஆராய்வது ஒருபுறமிருக்க, அதை உற்றுப் பார்ப்பதே கூடாத காரியமாகும். "சகல பரிபூரணமும் அவருக்குள்ளே வாசமாயிருக்கப் பிதாவுக்குப் பிரியமாயிருந்தது" (). எல்லாரும் பெற்றுக்கொள்ளும் இந்தப் பரிபூரணம் எப்பேர்ப்பட்ட பரிபூரணமாய் இருக்க வேண்டும்! நீரோடை எப்போதும் பாய்ந்து கொண்டிருந்தாலும், அந்த ஊற்று எப்போதும் போல தாராளமாய், ஐசுவரியமாய், நிறைவாய் சுரந்து கொண்டிருக்கும்போது அங்கே உண்மையாகவே பரிபூரணம் இருக்கிறது. வா, விசுவாசியே, உன்னுடைய எல்லாத் தேவைகளையும் சந்தித்துக் கொள்; தாராளமாய்க் கேள், நீ தாராளமாய்ப் பெற்றுக் கொள்வாய், ஏனெனில் இந்த "பரிபூரணம்" வற்றாதது, தேவையுள்ள யாவரும் எட்டக்கூடிய இடத்தில், அதாவது இம்மானுவேலாகிய நம்மோடிருக்கிற தேவனாம் இயேசுவுக்குள் அது பொக்கிஷமாக வைக்கப்பட்டிருக்கிறது.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.