"மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்" (). வாக்குத்தத்தங்களின் விலையேறப்பெற்ற தன்மையை நீ அநுபவ பூர்வமாய் அறிந்து, அவைகளை உன்னுடைய சொந்த இருதயத்தில் அநுபவிக்க விரும்பினால், அவைகளை மகா அதிகமாய்த் ததியானம் செய். ஆலைகளிலுள்ள திராட்சைக்குலைகளைப் போன்ற வாக்குத்தத்தங்கள் சில உண்டு; அவைகளை மிதித்தால் சாறு பாய்ந்தோடி வரும். பரிசுத்தமான அந்த வார்த்தைகளைச் சிந்தித்துக் கொண்டிருப்பது பெரும்பாலும் அவைகள் நிறைவேறுவதற்கான ஆயத்தமாய் இருக்கும். நீ அவைகளைத் தியானித்துக் கொண்டிருக்கும் போதே, நீ தேடும் உபகாரம் உனக்குத் தெரியாமலேயே உன்னிடம் வந்து சேரும். வாக்குத்தத்தத்திற்காகத் தாகத்தோடிருந்த அநேக கிறிஸ்தவர்கள், தெய்வீகப் பதிவுகளைத் தியானித்துக் கொண்டிருக்கும் போதே, அது உத்தேசித்த கிருபை தங்களின் ஆத்துமாவிற்குள் கனிவாய் ஊறி வருவதைக் கண்டிருக்கிறார்கள்; வாக்குத்தத்தத்தைத் தங்களின் இருதயத்திற்கு மிக அருகில் வைக்க நடத்தப்பட்டதற்காக அவர்கள் எப்போதுமே களிகூர்ந்திருக்கிறார்கள்.
ஆனால் வாக்குத்தத்தங்களைத் தியானிப்பதோடு கூட, அவைகள் தேவனுடைய சொந்த வார்த்தைகளே என்று உன்னுடைய ஆத்துமாவிற்குள் ஏற்றுக்கொள்ளத் தேடு. உன்னுடைய ஆத்துமாவை நோக்கி இப்படிக் கூறு, "நான் ஒரு மனிதனுடைய வாக்குத்தத்தத்தைக் கையாளுவதாக இருந்தால், என்னோடு உடன்படிக்கை பண்ணின மனிதனுடைய திறமையையும் அவனுடைய குணத்தையும் நான் மகா எச்சரிக்கையோடு சிந்திப்பேன். தேவனுடைய வாக்குத்தத்தத்தின் காரியத்திலும் அப்படியே ஆக வேண்டும்; என் கண் ஆசீர்வாதத்தின் மேன்மையின் மேல் மாத்திரம் நோக்கமாக இருக்கக் கூடாது—அது என்னைக் கலங்கச் செய்யலாம்; மாறாக வாக்குத்தத்தத்தைத் தந்தவருடைய மகத்துவத்தின் மேல் நோக்கமாக இருக்க வேண்டும்—அது என்னைத் தேற்றும். என் ஆத்துமாவே, பொய் சொல்லாத தேவன், உன்னுடைய தேவனாகிய அவரே உன்னோடு பேசுகிறார் (). நீ இப்போது தியானித்துக் கொண்டிருக்கும் அவருடைய இந்த வார்த்தை, அவருடைய சொந்த ஜீவனைப் போலவே உண்மையுள்ளது. அவர் மாறாத தேவனாய் இருக்கிறார் (). அவர் தமது உதடுகளிலிருந்து புறப்பட்ட ஒன்றையும் மாற்றவுமில்லை, ஆறுதல் தரும் ஒரு சுருக்க வாக்கியத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளவுமில்லை. அவருக்கு வல்லமை குறைவுபடுவதும் இல்லை; வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனே இவ்விதமாய் உன்னோடு பேசியிருக்கிறார் (). உபகாரங்களை வாரி வழங்குவதற்கேற்ற காலத்தைப் பொறுத்தவரை அவருடைய ஞானம் தவறிப்போவதுமில்லை, ஏனெனில் எப்போது கொடுப்பது நலம், எப்போது நிறுத்திவைப்பது நலம் என்பதை அவர் நன்றாய் அறிவார். எனவே, இவ்வளவு உண்மையான, இவ்வளவு மாறாத, இவ்வளவு வல்லமையுள்ள, இவ்வளவு ஞானமுள்ள தேவனுடைய வார்த்தையாய் இது இருப்பதினால், நான் இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசிப்பேன், விசுவாசித்தே தீருவேன்." நாம் இவ்விதமாய் வாக்குத்தத்தங்களைத் தியானித்து, வாக்குத்தத்தத்தைத் தந்தவரைச் சிந்திப்போம் என்றால், அவைகளின் இனிமையை நாம் அநுபவித்து அவைகளின் நிறைவேறுதலைப் பெற்றுக்கொள்வோம்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.