"தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்மேல் குற்றஞ்சாட்டுகிறவன் யார்?" (). மகா பாக்கியமான சவால்! இதற்குப் பிரதியுத்தரம் அளிக்க யாரால் கூடும்! தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் ஒவ்வொரு பாவமும் நம்முடைய இரட்சகராகிய மகா பெரிய பராக்கிரமசாலியின் மேல் சுமத்தப்பட்டு, பாவநிவிர்த்தியினாலே முற்றிலும் நீக்கப்பட்டது. தேவனுடைய புஸ்தகத்தில் அவருடைய ஜனங்களுக்கு விரோதமான எந்த ஒரு பாவமும் இல்லை; அவர் யாக்கோபில் அக்கிரமத்தைக் காண்கிறதுமில்லை, இஸ்ரவேலில் கோணலை நோக்குகிறதுமில்லை; அவர்கள் கிறிஸ்துவுக்குள் என்றென்றைக்குமாய் நீதிமானாக்கப்பட்டிருக்கிறார்கள் (). பாவத்தின் குற்றம் நீக்கப்பட்ட போது, பாவத்திற்கான தண்டனையும் ஒழிக்கப்பட்டது. கிறிஸ்தவனுக்குக் தேவனுடைய கோபாக்கினையின் கரத்திலிருந்து எந்த ஓர் அடியும் இல்லை—ஆமாம், தண்டனைக்குரிய நீதியின் ஒரு புன்னகைகூட அங்கே இல்லை. விசுவாசி தன் பிதாவினாலே சிட்சிக்கப்படலாம், ஆனால் நியாயாதிபதியாகிய தேவனோ கிறிஸ்தவனை நோக்கி, "நான் உன்னை விடுவித்தேன்: நீ குற்றமற்றவன் என்று தீர்க்கப்பட்டாய்" என்பதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதில்லை. கிறிஸ்தவனுக்கு இவ்வுலகில் எந்த ஒரு மரண ஆக்கினையும் இல்லை, இரண்டாம் மரணம் என்பது அவனுக்கு இல்லவே இல்லை (வெளிப்படுத்துதல் 20:6). அவன் பாவத்தின் குற்றத்திலிருந்தும் தண்டனையிலிருந்தும் முற்றிலும் விடுவிக்கப்பட்டிருக்கிறான், பாவத்தின் வல்லமையும் ஒழிக்கப்பட்டது. அது நம்முடைய பாதையில் குறுக்கிட்டு, மாறாத போராட்டங்களினால் நம்மைக் கலக்கலாம்; ஆனால் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கிற ஒவ்வொரு ஆத்துமாவிற்கும் பாவம் முறியடிக்கப்பட்ட ஒரு சத்துருவாய் இருக்கிறது. தன் தேவனை நம்பும் பட்சத்தில் எந்த ஒரு கிறிஸ்தவனும் மேற்கொள்ள முடியாத பாவம் என்று எதுவுமில்லை. பரலோகத்தில் வெள்ளை அங்கி தரித்திருக்கிறவர்கள் ஆட்டுக்குட்டியானவருடைய இரத்தத்தினாலே ஜெயங்கொண்டார்கள், நாமும் அப்படியே செய்யலாம் (வெளிப்படுத்துதல் 7:14, 12:11). எந்த ஓர் இச்சையும் மகா பலம் வாய்ந்தது அல்ல, சுற்றிலும் அரண் அமைத்திருக்கும் எந்தப் பாவமும் உன்னதமானது அல்ல; கிறிஸ்துவின் வல்லமையினாலே நம்மால் ஜெயிக்கக் கூடும். கிறிஸ்தவனே, உன்னுடைய பாவம் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்பட்ட ஒன்று என்பதை விசுவாசி. அது கைகால்களை உதறிப் போராடலாம், ஆனால் அது மடியக் கடவது என்று குறிக்கப்பட்டிருக்கிறது. தேவன் அதனுடைய நெற்றியில் ஆக்கினைத்தீர்ப்பை எழுதியிருக்கிறார். கிறிஸ்து அதைச் சிலுவையில் அறைந்து, "அதைத் தமக்குச் சிலுவையில் ஆணியடித்துக் கொண்டார்" (). இப்போதே போய் அதை அழித்துப்போடு, கர்த்தருடைய துதிக்கேதுவாக வாழ அவர் உனக்குத் துணைசெய்வாராக, ஏனெனில் பாவமானது தன் சகல குற்றம், வெட்கம் மற்றும் பயங்களோடு ஒழிந்துபோய்விட்டது.
"கடந்த கால மீறுதல்களுக்கு இதோ மன்னிப்பு, அவைகளின் அசுத்தங்கள் எவ்வளவு கறுப்பாய் இருந்தாலும் ஒரு பொருட்டல்ல; என் ஆத்துமாவே, ஆச்சரியத்தோடு உற்றுப் பார், வரப்போகும் பாவங்களுக்கும் இதோ மன்னிப்பு உண்டு."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.