"மட்டும் மகா தூரமாய் போகவேண்டாம்" (). கொடூரக் கொடுங்கோலனான பார்வோனின் உதட்டிலிருந்து புறப்பட்ட தந்திரமான வார்த்தை இது. பாரமான அடிமைத்தனத்திலிருந்த இஸ்ரவேலர் எகிப்தை விட்டுப் புறப்பட்டுப் போகத்தான் வேண்டும் என்றால், அவர்கள் மகா தூரமாய்ப் போகக் கூடாது என்று அவன் அவர்களோடு பேரம் பேசுகிறான்; தன் ஆயுதங்களின் பயங்கரத்திற்கும் தன் வேவுகாரர்களின் கண்காணிப்பிற்கும் அவர்கள் தப்பிப் போகாதபடிக்கு மிக அருகில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதே முறைமையில், உலகத்தாரும் விசுவாசிகளின் பூரணமான உலகப் பிரிவினையையோ, சத்தியத்தின் தனித்துவத்தையோ நேசிப்பதில்லை; நாம் எல்லாரிடமும் தாராள குணம் உள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்றும், காரியங்களை மகா கண்டிப்பான முறையில் நடத்தக் கூடாது என்றும் அவர்கள் விரும்புவார்கள். உலகத்திற்கு மரிப்பதும், கிறிஸ்துவோடு கூட அடக்கம்பண்ணப்படுவதும் லௌகீக மனிதர்களால் பரியாசம் பண்ணப்படும் அநுபவங்களாகும், ஆகவேதான் அவைகளை வெளிப்படுத்தும் நியமங்கள் எங்கும் அலட்சியம் பண்ணப்பட்டு, ஆமாம், ஆக்கினைக்குள்ளாகவும் தீர்க்கப்படுகின்றன (). உலக ஞானம் உலகத்தோடு ஒத்துப் போகும் பாதையைப் பரிந்துரைத்து, "மிதமாய்" இருக்க வேண்டும் என்று பேசும். இந்த லௌகீகக் கொள்கையின்படி, தூய்மை என்பது மிகவும் விரும்பத்தக்கதுதான் என்று ஒத்துக்கொண்டாலும், நாம் மகா துல்லியமாய் இருக்கக் கூடாது என்று அவர்கள் நம்மை எச்சரிக்கிறார்கள்; சத்தியத்தைப் பின்பற்ற வேண்டும் என்பது உண்மைதான், ஆனால் தவற்றை மகா கொடூரமாய்க் கடிந்து கொள்ளக் கூடாது என்பார்கள். "ஆமாம்," என்கிறது உலகம், "எல்லா வழியிலும் ஆவிக்குரிய சிந்தை உள்ளவர்களாய் இருங்கள், ஆனால் லௌகீக இன்பங்களின் சிறிய சமுதாயத்தையோ, எப்போதாவது ஆடும் நடனத்தையோ, கிறிஸ்துமஸ் நேரத்தில் நாடக அரங்குகளுக்குச் செல்வதையோ உங்களுக்கு மறுத்துக் கொள்ளாதீர்கள். ஒரு காரியம் உலகப் பிரசித்தியானதாய் இருக்கும்போது, எல்லாரும் அதைச் செய்யும்போது அதை ஏன் தீமை என்று தள்ள வேண்டும்?" திரளான வேஷக்காரர்கள் தங்களின் நித்திய அழிவிற்கேதுவாக இந்தத் தந்திரமான ஆலோசனைக்கு இணங்குகிறார்கள். நாம் கர்த்தரை முற்றிலும் பின்பற்ற விரும்பினால், நாம் பிரிவினையாகிய வனாந்தரத்திற்குள் நேராகப் புறப்பட்டுச் சென்று, லௌகீக உலகமாகிய எகிதை நமக்குப் பின்னே விட்டுவிட வேண்டும். அதனுடைய பிரமாணங்கள், அதனுடைய இன்பங்கள், மற்றும் அதனுடைய மார்க்கத்தையும் நாம் விட்டுவிட்டு, கர்த்தர் தமது பரிசுத்தவான்களை அழைக்கும் இடத்திற்கு மகா தூரமாய் ஓடிவிட வேண்டும். ஒரு பட்டணம் தீப்பற்றி எரியும்போது, நம்முடைய வீடு அந்த ஜுவாலைகளுக்கு எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் அது அதிகம் அல்ல. ஒரு கொள்ளைநோய் பரவி வரும்போது, மனிதன் அது இருக்கும் இடங்களுக்கு எவ்வளவு தூரமாய் இருக்க முடியுமோ அவ்வளவு தூரமாய் இருக்க வேண்டும். ஒரு விரியன் பாம்பிற்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு நல்லது, உலகத்தன்மைக்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு நல்லது. உண்மையான விசுவாசிகள் யாவருக்கும் எக்காள சத்தம் முழங்கட்டும்: "நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்துபோங்கள்" ().
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.