JAN 28 MORNING

கொலோசெயர் 1:28

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.

கொலோசெயர் 1:28

எந்த மனுஷனையும் கிறிஸ்து இயேசுவுக்குள் தேறினவனாக நிறுத்தும்படிக்கு, அவரையே நாங்கள் அறிவித்து, எந்த மனுஷனுக்கும் புத்திசொல்லி, எந்த மனுஷனுக்கும் எல்லா ஞானத்தோடும் உபதேசம்பண்ணுகிறோம்.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"கிறிஸ்து இயேசுவுக்குள் பூரணாளராக" (). பூரணத்துவம் உனக்குள் இல்லை என்பதை உன்னுடைய சொந்த ஆத்துமாவில் நீ உணரவில்லையா? ஒவ்வொரு நாளும் அதை உனக்குக் கற்பிக்கவில்லையா? உன்னுடைய கண்ணிலிருந்து வழியும் ஒவ்வொரு கண்ணீர்த்துளியும் "அபூரணத்தை" எண்ணி அழுகிறது; உன்னுடைய உதட்டிலிருந்து புறப்படும் ஒவ்வொரு கடினமான வார்த்தையும் "அபூரணத்தை" முணுமுறுக்கிறது. உனக்குள் ஏதாகிலும் பூரணம் இருப்பதாக ஒரு கணமும் கனவு காணாதபடி, உன்னுடைய சொந்த இருதயத்தின் தரிசனத்தை நீ பலமுறை கண்டிருக்கிறாய். ஆனால் இந்த விசனகரமான அபூரணத்தின் உணர்வின் மத்தியிலும் இதோ உனக்கு ஆறுதல்—நீ "கிறிஸ்து இயேசுவுக்குள் பூரணாளனாக" இருக்கிறாய். தேவனுடைய பார்வையில், நீ "அவருக்குள் பரிபூரணமடைந்திருக்கிறாய்" (); இப்பொழுதும் நீ "பிரியமானவருக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறாய்" (). ஆனால் சந்ததியார் யாவருக்கும் உறுதியாய் இருக்கிற, இன்னும் நிறைவேற்றப்பட வேண்டிய இரண்டாவது பூரணத்துவம் ஒன்று இருக்கிறது. விசுவாசியிடமிருந்து பாவத்தின் ஒவ்வொரு கறையும் நீக்கப்பட்டு, அவன் சிங்காசனத்திற்கு முன்பாக குற்றமற்றவனாக, மாசற்றவனாக, சுருக்கமில்லாதவனாக, அல்லது அத்தகைய வேறு யாதொன்றும் இல்லாதவனாக நிறுத்தப்படும் அந்த நேரத்தை எதிர்நோக்குவது எவ்வளவு இன்பமானது? கிறிஸ்துவின் சபை அப்போது எவ்வளவு தூய்மையாய் இருக்கும் என்றால், சர்வஞானமுள்ள கண்ணும்கூட அவளிடம் ஒரு புள்ளியையோ அல்லது கறையையோ காணாது; அவள் எவ்வளவு பரிசுத்தமாகவும் மகிமையாகவும் இருப்பாள் என்றால், தேவனுடைய தாசன் ஹார்ட் (Hart) உண்மையை விஞ்சிய விதத்தில் இப்படிக் கூறினார்—"என் இரட்சகரின் ஆடைகளைத் தரித்துக் கொண்டு, பரிசுத்தரைப் போலப் பரிசுத்தனாய்." அப்போதுதான், "கிறிஸ்துவுக்குள் பரிபூரணம்" என்ற இந்த மாபெரும் ஆனால் சுருக்கமான வாக்கியத்தின் மகிழ்ச்சியை நாம் அறிந்து, சுவைத்து, உணருவோம். அப்போதுதான் இயேசுவின் இரட்சிப்பின் உயரங்களையும் ஆழங்களையும் நாம் முழுமையாகக் கிரகிப்போம். இதை நினைக்கும்போது உன்னுடைய இருதயம் சந்தோஷத்தினால் துள்ளவில்லையா? நீ இப்போது கறுப்பாய் இருந்தாலும் ஒருநாள் வெண்மையாவாய்; அசுத்தமாய் இருந்தாலும் சுத்தமாவாய். ஓ, இது எப்பேர்ப்பட்ட ஆச்சரியமான இரட்சிப்பு! கிறிஸ்து ஒரு புழுவை எடுத்து அதை ஒரு தூதனாக மாற்றுகிறார்; கிறிஸ்து கறுப்பான மற்றும் அவலட்சணமான ஒன்றை எடுத்து, அதைத் தன் மகிமையில் சுத்தமானதாகவும் ஒப்பிடமுடியாததாகவும், தன் அழகில் நிகரற்றதாகவும், சேராபீன்களுக்குத் தகுந்த தோழமையாகவும் மாற்றுகிறார். ஓ என் ஆத்துமாவே, கிறிஸ்துவுக்குள் இருக்கும் பூரணத்துவத்தின் இந்த ஆசீர்வதிக்கப்பட்ட சத்தியத்தை உற்று நோக்கி ஆச்சரியப்படு.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.