"மேய்ப்பர்களும் தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே கேட்டுப் பார்த்த எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தித் துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்" (). அவர்களுடைய துதியின் தலைப்பு என்னவாய் இருந்தது? தாங்கள் கேட்டவைகளுக்காக—தங்களுக்கு ஒரு இரட்சகர் பிறந்திருக்கிறார் என்ற மகா சந்தோஷத்தைத்தரும் நற்செய்திக்காக அவர்கள் தேவனைத் துதித்தார்கள். நாம் அவர்களைப் போலச் செய்வோமாக; நாமும் இயேசுவைக் குறித்தும் அவருடைய இரட்சிப்பைக் குறித்தும் கேட்டதற்காக ஸ்தோத்திரப் பாடலை எழுப்புவோமாக. தாங்கள் பார்த்தவைகளுக்காகவும் அவர்கள் தேவனைத் துதித்தார்கள். அங்கேதான் மிகவும் இனிமையான இசை இருக்கிறது—நாம் எதை அநுபவித்திருக்கிறோம், நமக்குள்ளே எதை உணர்ந்திருக்கிறோம், எதை நமக்குச் சொந்தமாக்கிக் கொண்டிருக்கிறோம்—"ராஜாவைக் குறித்து நாம் உருவாக்கின காரியங்கள்" (). இயேசுவைப் பற்றிக் கேட்பது மாத்திரம் போதாது: வெறும் கேட்பது சுரமண்டலத்தைச் சுருதி கூட்டலாம், ஆனால் ஜீவனுள்ள விசுவாசத்தின் விரல்கள்தான் இசையை எழுப்ப வேண்டும். விசுவாசத்தின் தெய்வீகத் தரிசனத்தினால் நீங்கள் இயேசுவைக் கண்டிருந்தால், சுரமண்டலத்தின் நரம்புகளுக்குள் எந்த ஒரு சிலந்திவலையும் தங்கிவிட அனுமதிக்காதீர்கள், மாறாக கிருபையின் மேன்மையைத் துதிக்கும்படி உங்களுடைய வீணையையும் சுரமண்டலத்தையும் எழுப்புங்கள். அவர்கள் தேவனைத் துதித்த ஒரு குறிப்பு, தாங்கள் கேட்டவைகளுக்கும் தாங்கள் பார்த்தவைகளுக்கும் இடையே இருந்த பொருத்தமாகும். கடைசி வாக்கியத்தைக் கவனித்துப் பாருங்கள்—"தங்களுக்குச் சொல்லப்பட்டபடியே." வேதாகமம் என்ன சொல்லியிருந்ததோ, நற்செய்தி உங்களுக்குள் அப்படியே இருப்பதை நீங்கள் காணவில்லையா? இயேசு உங்களுக்கு இளைப்பாறுதல் தருவதாகச் சொன்னார்—அவருக்குள் நீங்கள் மிகவும் இனிமையான சமாதானத்தை அநுபவிக்கவில்லையா? அவரை விசுவாசிப்பதன் மூலம் உங்களுக்குச் சந்தோஷமும், ஆறுதலும், ஜீவனும் உண்டாகும் என்று அவர் சொன்னார்—இவைகளையெல்லாம் நீங்கள் பெறவில்லையா? அவருடைய வழிகள் இன்பமான வழிகளும், அவருடைய பாதைகள் சமாதானமுள்ள பாதைகளும் அல்லவா? (). நிச்சயமாக நீங்களும் சேபா நாட்டு ராணியோடு சேர்ந்து சொல்லலாம், "அதில் பாதியாவது எனக்குச் சொல்லப்படவில்லை" (). அவருடைய ஊழியக்காரர்கள் சொன்னதைக் காட்டிலும் கிறிஸ்து மிகவும் இனிமையானவராக இருப்பதை நான் கண்டிருக்கிறேன். அவர்கள் வரைந்த அவருடைய சாயலை நான் உற்று நோக்கினேன், ஆனால் அவரோடு ஒப்பிடும்போது அது வெறும் கறை போலத்தான் இருந்தது; ஏனெனில் ராஜா தன் அழகில் ஊகிக்கக்கூடிய எல்லா அழகையும் விஞ்சிப் பிரகாசிக்கிறார். நிச்சயமாக நாம் எதைப் "பார்த்திருக்கிறோமோ" அது நாம் எதைக் "கேட்டோமோ" அதற்கு இணையாக, ஆமாம், அதை விடப் பெருமளவில் விஞ்சியிருக்கிறது. அப்படியானால், இவ்வளவு விலையேறப்பெற்ற, இவ்வளவு திருப்தி அளிக்கிற இரட்சகருக்காக நாம் தேவனை மகிமைப்படுத்தித் துதிப்போமாக.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.