"இயேசுவை நோக்கி" (). நம்முடைய கண்களை சுயத்திலிருந்து விலக்கிக் கிறிஸ்துவிற்கு நேராகத் திருப்புவதே எப்போதுமே பரிசுத்த ஆவியானவரின் கிரியையாய் இருக்கிறது; ஆனால் சாத்தானின் கிரியையோ அதற்கு முற்றிலும் எதிரானது, ஏனெனில் நாம் கிறிஸ்துவை நோக்காமல் நம்மையே நோக்கும்படி செய்ய அவன் ஓயாமல் பிரயாசப்படுகிறான். அவன் நமக்குள்ளே, "உன்னுடைய பாவங்கள் மன்னிக்கப்பட முடியாதபடி மகா பெரியவை; உன்னிடம் விசுவாசம் இல்லை; நீ போதுமான அளவு மனஸ்தாபப்படவில்லை; உன்னால் ஒருபோதும் முடிவுபரியந்தம் நிலைத்திருக்க முடியாது; அவருடைய பிள்ளைகளுக்குரிய சந்தோஷம் உன்னிடம் இல்லை; நீ இயேசுவை மிகவும் பலவீனமாய் பற்றிக்கொண்டிருக்கிறாய்" என்று முணுமுறுக்கிறான். இவையாவும் சுயத்தைப் பற்றிய எண்ணங்களாகும், நமக்குள்ளே நோக்கிப் பார்ப்பதினால் நமக்கு ஒருபோதும் ஆறுதலோ அல்லது உறுதியோ கிடைக்கப் போவதில்லை. ஆனால் பரிசுத்த ஆவியானவரோ நம்முடைய கண்களை சுயத்திலிருந்து முற்றிலும் விலக்குகிறார்: நாம் ஒன்றுமில்லை என்றும், ஆனால் "கிறிஸ்துவே எல்லாரிலும் எல்லாமுமாய் இருக்கிறார்" () என்றும் நமக்குக் கூறுகிறார். எனவே, உன்னை இரட்சிப்பது நீ கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டிருக்கும் உன்னுடைய பிடியல்ல—கிறிஸ்துவே உன்னை இரட்சிக்கிறார்; கிறிஸ்துவில் நீ கொள்ளும் சந்தோஷம் உன்னை இரட்சிக்கவில்லை—கிறிஸ்துவே உன்னை இரட்சிக்கிறார்; கிறிஸ்துவில் உள்ள விசுவாசமும்கூட உன்னை இரட்சிப்பதில்லை, அது ஒரு கருவி மாத்திரமே—கிறிஸ்துவின் இரத்தமும் புண்ணியங்களுமே உன்னை இரட்சிக்கிறது; எனவே, நீ கிறிஸ்துவைப் பற்றிக்கொண்டிருக்கும் உன்னுடைய கையை உற்று நோக்காமல், கிறிஸ்துவையே நோக்கு; உன்னுடைய நம்பிக்கையைப் பார்க்காமல், உன்னுடைய நம்பிக்கையின் ஊற்றாகிய இயேசுவைப் பார்; உன்னுடைய விசுவாசத்தைப் பார்க்காமல், உன்னுடைய விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கிப் பார். நம்முடைய ஜெபங்கள், நம்முடைய செய்கைகள், அல்லது நம்முடைய உணர்வுகளை உற்றுப் பார்ப்பதினால் நம்முடைய ஆத்துமாவிற்கு ஒருபோதும் நிம்மதி கிடைக்காது; நாம் எப்படி இருக்கிறோம் என்பது அல்ல, இயேசு எப்படிப்பட்டவராக இருக்கிறார் என்பதே ஆத்துமாவிற்கு இளைப்பாறுதல் தருகிறது. நாம் உடனே சாத்தானை ஜெயித்துத் தேவனோடு சமாதானம் பெற விரும்பினால், அது "இயேசுவை நோக்கிப் பார்ப்பதினால்" மாத்திரமே ஆகும். உன்னுடைய கண்ணை அவருடைய மேல் மாத்திரம் வை; அவருடைய மரணம், அவருடைய பாடுகள், அவருடைய புண்ணியங்கள், அவருடைய மகிமைகள், அவருடைய பரிந்துபேசுதல் யாவும் உன்னுடைய மனதில் எப்போதும் புதியதாய் இருக்கட்டும்; காலையில் விழிக்கும்போது அவரை நோக்கு; இரவில் படுக்கும்போது அவரை நோக்கிப் பார். ஓ, உன்னுடைய நம்பிக்கைகளோ அல்லது பயங்களோ உனக்கும் இயேசுவிற்கும் இடையே வர அனுமதிக்காதே; அவரைத் தீவிரமாய்ப் பின்தொடரு, அவர் உன்னை ஒருபோதும் கைவிடமாட்டார்.
"என் நம்பிக்கை இயேசுவின் இரத்தத்தின்மேலும் அவருடைய நீதியின்மேலும் அன்றி வேறொன்றின்மேலும் கட்டப்படவில்லை: மிகவும் இனிமையான உணர்வுகளையும் நம்ப நான் துணியமாட்டேன், மாறாக இயேசுவின் நாமத்தின்மேல் முற்றிலும் சாருகிறேன்."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.