"ஆரோனுடைய கோலோ அவர்களுடைய கோல்களை விழுங்கிற்று" (). தேவனுடைய கைவேலை தனக்கு விரோதமான எல்லா எதிர்ப்புகளையும் நிச்சயமாக ஜெயிக்கும் என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு பிரயோஜனமான நிழலாட்டமாய் இருக்கிறது. இருதயத்திற்குள் ஒரு தெய்வீகப் பிரமாணம் எறியப்படும் போதெல்லாம், பிசாசு அதற்குப் போலியான ஒன்றை உண்டாக்கி, ஏராளமான எதிர்ப்பாளர்களை எழுப்பினாலும், அந்தக் கிரியையில் தேவன் இருக்கிறார் என்பது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாய் அது தன் சத்துருக்கள் யாவரையும் விழுங்கிப் போடும். தேவனுடைய கிருபை ஒரு மனிதனைத் தனக்குச் சொந்தமாக்கிக் கொண்டால், உலகத்தின் மந்திரவாதிகள் தங்களின் எல்லாக்கோல்களையும் கீழே எறியலாம்; ஒவ்வொரு கோலும் ஒரு பாம்பைப் போல எவ்வளவோ தந்திரமானதாகவும் விஷமுள்ளதாகவும் இருக்கலாம், ஆனால் ஆரோனின் கோல் அவைகளின் கோல்களை விழுங்கிப் போடும். சிலுவையின் இனிமையான கவர்ச்சிகள் அவனுடைய இருதயத்தைக் கவர்ந்து கொள்ளும், இந்த ஏமாற்று உலகத்திற்காக மாத்திரமே வாழ்ந்தவன் இப்போது உன்னத எல்லைகளை நோக்கிப் பார்க்கக் கூடிய கண்ணையும், பரலோக உயரங்களுக்கு ஏறிச் செல்லக் கூடிய சிறகையும் பெற்றுக் கொள்வான். கிருபை ஜெயத்தைப் பெறும்போது, உலக மனிதன் வரப்போகும் உலகத்தைத் தேடத் தொடங்குகிறான். விசுவாசியின் வாழ்க்கையிலும் இதே உண்மை காணப்படுகிறது. நம்முடைய விசுவாசம் எப்பேர்ப்பட்ட திரளான சத்துருக்களைச் சந்திக்க வேண்டியிருந்தது! நம்முடைய பழைய பாவங்கள்—பிசாசு அவைகளை நமக்கு முன்பாகக் கீழே எறிந்தான், அவைகள் பாம்புகளாய் மாறின. அவைகள் எப்பேர்ப்பட்ட திரளான கூட்டமாய் இருந்தன! ஆ, ஆனால் இயேசுவின் சிலுவை அவைகள் யாவையும் அழிக்கிறது. கிறிஸ்துவின் மேலுள்ள விசுவாசம் நம்முடைய எல்லாப் பாவங்களையும் சீக்கிரத்தில் ஒழித்துவிடுகிறது. பின்பு பிசாசு உலகப் பிரகாரமான உபத்திரவங்கள், சோதனைகள், அவிசுவாசம் ஆகிய வடிவங்களில் மற்றுமொரு பாம்புகளின் கூட்டத்தை ஏவுகிறான்; ஆனால் இயேசுவின் மேலுள்ள விசுவாசம் அவைகளை மேற்கொள்ளப் போதுமானதாய் இருக்கிறது, அவைகள் எல்லாவற்றையும் ஜெயிக்கிறது (). அதே எல்லாவற்றையும் விழுங்கும் பிரமாணம் தேவனுக்குச் செய்யும் உத்தம ஊழியத்திலும் பிரகாசிக்கிறது! இயேசுவின் மேல் உள்ள வைராக்கிய அன்பினால் கஷ்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன, தியாகங்கள் இன்பங்களாகின்றன, பாடுகள் கனங்களாகின்றன. ஆனால் மார்க்கம் இருதயத்தில் இவ்விதமாய் எல்லாவற்றையும் பட்சிக்கும் வைராக்கியமாய் இருக்குமானால், மார்க்கத்தை அறிக்கை செய்துவிட்டு அதைத் தங்களுக்குள் கொண்டிராத மனிதர்கள் பலர் இருக்கிறார்கள் என்பது இதிலிருந்து தெளிவாகிறது அல்லவா; ஏனெனில் அவைகளிடம் இருக்கும் எதுவும் இந்தச் சோதனைக்கு நிலைத்து நிற்காது. வாசகரே, இந்த விஷயத்தில் உங்களை நீங்களே ஆராய்ந்து பாருங்கள். ஆரோனின் கோல் பரலோகத்திலிருந்து தனக்கு அருளப்பட்ட வல்லமையை நிரூபித்தது. உங்களுடைய மார்க்கமும் அவ்வாறே செய்கிறதா? கிறிஸ்து ஏதாகிலும் ஒரு காரியமாய் இருக்க வேண்டுமானால் அவர் எல்லாவற்றாருமாய் இருக்க வேண்டும். இயேசுவின் மேலுள்ள அன்பும் விசுவாசமும் உங்களுடைய ஆத்துமாவை ஆளுகை செய்யும் உன்னதமான ஏவுதல்களாய் மாறும் வரை ஓய்ந்திருக்காதீர்கள்!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.