"தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்" (). டாக்டர் கேரி (Dr. Carey) ஒரு ஆபத்தான நோயினால் பாதிக்கப்பட்டு அவதிப்பட்டபோது, "இந்த வியாதி மரணத்தில் முடிந்தால், உன்னுடைய இறுதிச் செய்திப் பிரசங்கத்திற்கு எந்த வேதப்பகுதியைத் தெரிந்துகொள்வாய்?" என்று அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஓ, அத்தகைய ஏழையான பாவியான சிருஷ்டி தன்னைக்குறித்து வேறு எதையாவது சொல்லச் சொல்வதற்குத் தகுதியற்றவன் என்று நான் உணருகிறேன்; ஆனால் இறுதிச் செய்திப் பிரசங்கம் பிரசங்கிக்கப்பட வேண்டுமானால் அது இந்த வார்த்தைகளிலிருந்தே இருக்கட்டும்: 'தேவனே, உமது கிருபையின்படி எனக்கு இரங்கும்; உமது உருக்கமான இரக்கங்களின் பெருக்கத்தின்படி என் மீறுதல்களை மாற்றிவிடும்'" என்று பதிலளித்தார். அதே தாழ்மையான ஆவியோடு அவர் தன்னுடைய கல்லறைக் கல்லில் தனக்குப்பின் இந்த வார்த்தைகள் மாத்திரமே செதுக்கப்பட வேண்டும் என்று தன்னுடைய உயில் மூலம் கட்டளையிட்டார்:--
வில்லியம் கேரி, ஆகஸ்ட் 17, 1761-ல் பிறந்தார்: மரித்தார் - -
"வறுமையும் ஏழ்மையும் பலவீனமும் கொண்ட புழுவாய் உமது கனிவான கரங்களில் விழுகிறேன்."
இலவச கிருபையின் அஸ்திபாரத்தில் மாத்திரமே மிகவும் அநுபவமிக்க மற்றும் மிகவும் கனம்பண்ணப்பட்ட பரிசுத்தவான்களால் தங்கள் தேவனை அண்டிக்கொள்ள முடியும். மற்ற எல்லோரைக் காட்டிலும் மகா சிறந்த மனிதர்களே தாங்கள் மகா சாதாரண மனிதர்கள் என்பதை உணருகிறார்கள். வெறுமையான படகுகள் உயரமாக மிதக்கின்றன, ஆனால் பாரமான சுமை ஏற்றிய படகுகளோ தண்ணீருக்குள் ஆழமாய் மூழ்கியிருக்கும்; வெறும் வேஷக்காரர்களால் பெருமை பாராட்ட முடியும், ஆனால் தேவனுடைய உண்மையான பிள்ளைகளோ தங்களுடைய பலனற்ற தன்மையின் நிமித்தம் இரக்கத்திற்காகக் கதறுகிறார்கள். நம்முடைய நற்கிரியைகள், நம்முடைய ஜெபங்கள், நம்முடைய பிரசங்கங்கள், நம்முடைய தர்மங்கள், மற்றும் நம்முடைய மகா பரிசுத்தமான காரியங்கள் யாவற்றின் மேலும் கர்த்தர் இரக்கம் காட்ட வேண்டும் என்ற அவசியம் நமக்கு உண்டு. இரத்தம் இஸ்ரவேலருடைய வாசஸ்தலங்களின் நிலைகளின் மேல் மாத்திரமல்லாமல், பரிசுத்த ஸ்தலம், கிருபாசனம், மற்றும் பலிபீடத்தின் மேலும் தெளிக்கப்பட்டது (), ஏனெனில் பாவம் நம்முடைய மகா பரிசுத்தமான காரியங்களுக்குள்ளும் ஊடுருவுவதால், அதனுடைய தீட்டிலிருந்து அவைகளைச் சுத்திகரிக்க இயேசுவின் இரத்தம் அவசியமாய் இருக்கிறது. நம்முடைய கடமைகளுக்கே இரக்கம் காட்டப்பட வேண்டிய அவசியம் இருக்குமானால், நம்முடைய பாவங்களைக் குறித்து என்ன சொல்ல வேண்டும்? வற்றாத இரக்கம் நம்மைத் தேற்றவும், நம்முடைய பின்வாங்குதல்களைக் குணமாக்கவும், நம்முடைய முறிந்த எலும்புகளை மகிமைப்படுத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது என்ற நினைவூட்டல் எவ்வளவு இனிமையானது!
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.