"அவன் தன் விரதநாட்களெல்லாத்திலும் திராட்சக்கொடியில் பிறந்தது முதலாய் கொட்டையும் சக்கையுமுள்ள எதையும் புசிக்கவேண்டாம்" (). நசரேயர்கள் மற்ற விரதங்களோடு கூட, திராட்சை ரசத்தைப் பயன்படுத்தக் கூடாத ஒரு விரதத்தையும் எடுத்திருந்தார்கள். அந்தக் கடமையை அவர்கள் மீறாதபடிக்கு, திராட்சரசத்தின் காடியையோ பலத்த மதுபானத்தையோ குடிக்க அவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டது, அந்த விதியை இன்னும் தெளிவாக்கும்படி, திராட்சைப் பழங்களின் புளிப்பேறாத சாற்றைக் குடிக்கக் கூடாது, பச்சையாகவோ உலர்ந்ததாகவோ அவைகளின் பழங்களைச் சாப்பிடவும் கூடாது. அந்த விரதத்தின் உத்தமத்தன்மையை முழுமையாய் உறுதிப்படுத்த, திராட்சைக் கொடியோடு தொடர்புடைய எதையும் அவர்கள் தொட அனுமதிக்கப்படவில்லை; உண்மையில் அவர்கள் தீமையின் தோற்றத்திலும்கூட விலக வேண்டும். கர்த்தருடைய பிரிக்கப்பட்ட ஜனங்களுக்கு இது நிச்சயமாகவே ஒரு பாடமாய் இருக்கிறது, ஒவ்வொரு வடிவத்திலும்கூட பாவத்தை விட்டு விலகவும், அதனுடைய கொடூரமான வடிவங்களை மாத்திரமல்லாமல் அதனுடைய ஆவியையும் சாயலையுங்கூடத் தவிர்க்கவும் இது அவர்களுக்குக் கற்பிக்கிறது. இந்நாட்களில் கடுமையான நடத்தை பெரிதும் அசட்டை பண்ணப்படுகிறது, ஆனால் பிரியமான வாசகரே, அதுவே மகா பாதுகாப்பானதும் மகிழ்ச்சியானதுமான வழி என்பதை உறுதிப்படுத்துகிறோம். உலகத்திற்கு ஒன்று அல்லது இரண்டு புள்ளிகளை விட்டுக்கொடுப்பவன் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறான்; சோதோமின் திராட்சைப் பழங்களை உண்பவன் சீக்கிரத்தில் கொமோராவின் திராட்சரசத்தைக் குடிப்பான். ஹாலந்து நாட்டின் கடல் கரையின் சின்னத் துளை கடலை உள்ளே அனுமதிக்கிறது, ஒரு மாகாணமே மூழ்கிப்போகும் வரை அந்த இடைவெளி சீக்கிரத்தில் பெருக்கெடுத்து ஓடுகிறது. எந்த ஒரு அளவிலும் உலகத்தோடு ஒத்துப் போவது ஆத்துமாவிற்குக் கண்ணியாய் இருக்கிறது, அது துணிச்சலான பாவங்களுக்கு ஆத்துமாவை இன்னும் அதிகமாய் ஆளாக்குகிறது. மேலும், திராட்சைக் பழச் சாற்றைக் குடித்த நசரேயன் அதில் எந்த ஒரு புளிப்புத்தன்மையும் ஏற்படவில்லை என்பதைத் திட்டமாய் அறிய முடியாததாய் இருந்ததாலும், ஆகவே தன் விரதம் மீறப்படவில்லை என்று தன் இருதயத்தில் தெளிவாயிருக்க முடியாததாலும், உலகத்தோடு ஒத்துப் போகிற கிறிஸ்தவனால் குற்றமற்ற ஒரு மனச்சாட்சியைத் தரிக்க முடியாது, மாறாக உளரீதியான கண்காணிப்பாளர் தன்னைக் குறித்துச் சந்தேகப்படுகிறார் என்பதை அவன் உணர்ந்தாக வேண்டும். சந்தேகத்திற்குரிய காரியங்களைக் குறித்து நாம் சந்தேகப்படத் தேவையில்லை; அவைகள் நமக்குத் தீமையானவைகளாய் இருக்கின்றன. சோதிக்கும் காரியங்களுடன் நாம் விளையாடக் கூடாது, மாறாக அவைகளிடமிருந்து துரிதமாக ஓடித் தப்ப வேண்டும். ஒரு வேஷக்காரனாக இகழப்படுவதைக் காட்டிலும் ஒரு பரிசேயனாகப் பரியாசம் பண்ணப்படுவது மேல். ஜாக்கிரதையுள்ள வாழ்க்கை நிறைய சுயமறுப்பை உள்ளடக்கியிருக்கலாம், ஆனால் அது தகுதியான ஈடுகட்டலைக் காட்டிலும் அதிகமான சொந்த இன்பங்களைக் கொண்டிருக்கிறது.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.