"புறா சாயங்காலவேளையில் அவனிடத்தில் திரும்பிவந்தது" (). இந்த நாளின் பிரயாசங்களினால் நான் இப்போது சோர்ந்துபோயிருந்தாலும், மற்றொரு கிருபையின் நாளுக்காகக் கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. மனிதர்களைக் காப்பவருக்கு என் நன்றியறிதலின் சங்கீதத்தை உயர்த்துகிறேன். புறா பேழைக்கு வெளியே இளைப்பாறுதலைக் காணாததால் அதனிடத்திற்கே திரும்பி வந்தது; பூமியின் காரியங்களில் எந்த ஒரு திருப்தியும் இல்லை என்பதை இந்த நாளில் என் ஆத்துமா இன்னும் முழுமையாய்க் கற்றுக் கொண்டிருக்கிறது—தேவன் மாத்திரமே என் ஆவிக்கு இளைப்பாறுதல் தர முடியும். என் வியாபாரம், என் பொருட்கள், என் குடும்பம், என் தாலந்துகள், இவையெல்லாம் அவற்றின் வழியில் நல்லவைதான், ஆனால் அவைகளால் என் அழியாத சுபாவத்தின் ஆசைகளைத் திருப்தியாக்க முடியாது. "என் ஆத்துமாவே, உன்னுடைய இளைப்பாறுதலுக்குத் திரும்பு, கர்த்தர் உனக்கு நன்மைகளைச் செய்தாரே" (). நாளின் வாசல்கள் மூடப்பட்டுக் கொண்டிருந்த அந்த அமைதியான நேரத்தில்தான், சோர்ந்த சிறகுகளோடு புறா எஜமானனிடம் திரும்பி வந்தது: ஓ கர்த்தாவே, இன்று மாலை நானும் இவ்விதமாய் இயேசுவிடம் திரும்ப எனக்குக் கிருபை தாரும். கொந்தளிக்கும் அந்தப் பாழடைந்த பூமியின் மேல் ஒரு இரவைக் கழிக்க அவளால் தாங்க முடியவில்லை, என் இருதயத்தின் இளைப்பாறுதலும், என் ஆவியின் வீடுமாய் இருக்கிற இயேசுவை விட்டு இன்னும் ஒரு மணி நேரம்கூடப் பிரிந்திருக்க என்னாலும் முடியாது. அவள் பேழையின் உப்பரிகையின் மேல் மாத்திரம் உட்காரவில்லை, அவள் "அவனிடத்தில் திரும்பிவந்தாள்;" அப்படியே என் வாஞ்சையுள்ள ஆவியும் கர்த்தருடைய இரகசியத்திற்குள் நோக்கிப் பார்க்கவும், சத்தியத்தின் அந்தரங்கத்திற்குள் ஊடுருவவும், திரைக்குள் இருக்கிறதிற்குள் பிரவேசித்து, மெய்யாகவே என் பிரியமானவரைச் சென்றடையவும் விரும்புகிறது. நான் இயேசுவினிடத்திற்கே வர வேண்டும்: அவரோடு நெருங்கிய மற்றும் பிரியமான ஐக்கியம் கொள்வதைத் தவிர என் தாகமுள்ள ஆவியால் ஓய்ந்திருக்க முடியாது. ஆசீர்வதிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவே, என்னோடு இரும், உம்மை வெளிப்படுத்தி, இன்று இரவு முழுவதும் என்னோடு தங்கியிரும், நான் விழிக்கும்போது இன்னும் உம்மோடு இருக்கச் செய்யும். புறா தன் வாயிலே கொறித்துக் கொண்டுவந்த ஒரு ஒலிவ இலையைக் கொண்டுவந்ததைக் கவனிக்கிறேன், அது கடந்த நாளின் நினைவாகவும், எதிர்காலத்தின் தீர்க்கதரிசனமாகவும் இருந்தது. வீட்டிற்குக் கொண்டுவர என்னிடம் எந்த ஒரு மகிழ்ச்சியான பதிவும் இல்லையா? இன்னும் வரப்போகிற கிருபையின் அச்சாரமும் பணையமும் இல்லையா? ஆம், என் ஆண்டவரே, ஒவ்வொரு காலையிலும் புதியதாயும் ஒவ்வொரு மாலையிலும் புதியதாயும் இருக்கிற உமது உருக்கமான இரக்கங்களுக்காக உமக்கு என் நன்றியுள்ள அறிக்கையைச் சமர்ப்பிக்கிறேன்; இப்போது, உமது கரத்தை நீட்டி உமது புறாவை உமது மார்பிற்குள் ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.