"இயேசுவுக்குள் நித்திரையடைந்தவர்களையும் தேவன் அவரோடேகூடக் கொண்டுவருவார்" (). ஆத்துமா உணர்வில்லாமல் உறங்குகிறது என்று நாம் கற்பனை செய்யக் கூடாது. "இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்" என்பது மரிக்கும் ஒவ்வொரு பரிசுத்தவானுக்கும் கிறிஸ்து கூறும் மெல்லிய சத்தமாய் இருக்கிறது (). அவர்கள் "இயேசுவுக்குள் நித்திரையடைந்திருக்கிறார்கள்," ஆனால் அவர்களுடைய ஆத்துமாக்கள் தேவனுடைய சிங்காசனத்திற்கு முன்பாக இருந்து, அவருடைய ஆலயத்தில் இரவும் பகலும் அவரைத் துதித்து, தங்களின் பாவங்களைத் தமது இரத்தத்தினாலே கழுவினவருக்கு அல்லேலூயா பாடிக்கொண்டிருக்கின்றன (வெளிப்படுத்துதல் 7:15). சரீரம் புல்வெளியின் போர்வையின் கீழ், பூமியாகிய தன் தனிமையான படுக்கையில் உறங்குகிறது. ஆனால் இந்த நித்திரை என்ன? நித்திரையோடு இணைக்கப்பட்ட கருத்து "இளைப்பாறுதல்" என்பதுவே, அந்தச் சிந்தனையையே தேவனுடைய ஆவியானவர் நமக்குத் தெரிவிக்க விரும்புகிறார். நித்திரை ஒவ்வொரு இரவையும் நாளுக்குரிய ஓய்வுநாளாக்குகிறது. நித்திரை ஆத்துமாவின் கதவை ஜாக்கிரதையாய்ப் பூட்டி, உள்ளே இருக்கும் ஜீவன் தன் இன்பமான இளைப்பாறுதலின் கோடைகாலத் தோட்டத்திற்குள் பிரவேசிக்கும்படி, உள்ளே நுழையும் யாவரையும் சற்றுப் பொறுத்திருக்கச் சொல்கிறது. பிரயாசத்தினால் சோர்ந்துபோன விசுவாசி, சோர்ந்த குழந்தை தன் தாயின் மார்பில் சாய்ந்து உறங்குவது போல அமைதியாய் உறங்குகிறான். ஓ! கர்த்தருக்குள் மரிப்பவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தங்களின் பிரயாசங்களுக்கு விலகி இளைப்பாறுகிறார்கள், அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடச் செல்லுகின்றன (வெளிப்படுத்துதல் 14:13). காலத்தின் நிறைவேறுதல் மீட்பின் நிறைவேறுதலைக் கொண்டுவரும் வரை, மகிமையின் சுதந்தரவாளிகளாய் அவர்கள் தொடர்ந்து உறங்குகிறார்கள். எப்பேர்ப்பட்ட ஒரு விழிப்புணர்வு அவர்களுடையதாய் இருக்கும்! அவர்கள் தங்களின் கடைசி இளைப்பாறுதலின் இடத்தில் பிரயாசப்பட்டவர்களாயும் சோர்ந்தவர்களாயும் வைக்கப்பட்டார்கள், ஆனால் அவர்கள் எழும்போது அப்படி எழ மாட்டார்கள். அவர்கள் சுருக்கங்கள் நிறைந்த நெற்றியோடும், வாடிப் போன அவயவங்களோடும் தங்களின் இளைப்பாறுதலுக்குச் சென்றார்கள், ஆனால் அவர்கள் அழகிலும் மகிமையிலும் விழித்தெழுகிறார்கள். வடிவமும் அழகும் இல்லாத அந்தச் சுருங்கிப் போன விதை, தூசியிலிருந்து ஒரு அழகான புஷ்பமாய் எழும்புகிறது. கல்லறையின் குளிர்காலம் மீட்பின் வசந்தகாலத்திற்கும் மகிமையின் கோடைகாலத்திற்கும் வழிவிடுகிறது. மரணம் பாக்கியமுள்ளது, ஏனெனில் அது, தெய்வீக வல்லமையினாலே, அழியாமையின் திருமண வஸ்திரத்தை நமக்கு உடுத்துவதற்காக, பிரயாசத்திற்குரிய இந்த உலக வஸ்திரத்தை நம்மிடமிருந்து களைந்து போடுகிறது (). "இயேசுவுக்குள் நித்திரையடைகிறவர்கள்" பாக்கியவான்கள்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.