"தேசத்தில் நடந்த அதிசயத்தைப்பற்றிக் கேட்கிறதற்கு, பாபிலோன் அதிபதிகளின் ஸ்தாபகர்கள் அவனிடத்திற்கு அனுப்பின தூதர்களின் காரியத்தில்... அவனுடைய இருதயத்திலிருந்ததையெல்லாம் சோதித்து அறியும்படிக்கு, தேவன் அவனைக் கைவிட்டார்" (). எசேக்கியா தனக்குள்ளே மகா பெரியவனாய் வளர்ந்து, தேவனுடைய தயவைக் குறித்துத் தனக்குள்ளே அவ்வளவு மேட்டிமை பாராட்டினபடியால், சுயநீதி அவனுக்குள் நுழைந்தது, அவனுடைய லௌகீகப் பாதுகாப்பினிமித்தம், தேவனுடைய கிருபை தன் சுறுசுறுப்பான கிரியைகளில் ஒரு காலத்திற்கு அவரிடமிருந்து விலகியது. பாபிலோனியர்களோடு நடந்த காரியத்திற்கு இதுவே போதுமான அத்தாட்சியாய் இருக்கிறது; ஏனெனில் தேவனுடைய கிருபை மிகச் சிறந்த கிறிஸ்தவனை விட்டு விலகினாலும், அவனைக் மாபெரும் அக்கிரமக்காரனாக மாற்றக் கூடிய அளவு பாவம் அவனுடைய இருதயத்தில் மீதியாயிருக்கிறது. உங்களை நீங்களே உங்களுடைய சொந்தக் காரியங்களிடம் விட்டுவிட்டால், கிறிஸ்துவிற்காக மகா உருக்கமாய் இருக்கும் நீங்களும் லவோதிக்கேயாவைப் போல குமட்டல் உண்டாக்கும் வெதுவெதுப்பான நிலைக்குக் குளிர்ந்து போவீர்கள் (வெளிப்படுத்துதல் 3:16); விசுவாசத்தில் உறுதியாய் இருக்கும் நீங்கள் தவறான உபதேசமாகிய குஷ்டரோகத்தினால் வெளுத்துப் போவீர்கள்; கர்த்தருக்கு முன்பாக மேன்மையிலும் உத்தமத்திலும் நடக்கும் நீங்கள் தள்ளாடி விழுந்து, தீய இச்சைகளின் வெறியினால் தடுமாறுவீர்கள். சந்திரனைப் போல, நாம் நம்முடைய வெளிச்சத்தை இரவலாய் வாங்குகிறோம்; கிருபை நம்மேல் பிரகாசிக்கும் போது நாம் எவ்வளவு பிரகாசமாய் இருந்தாலும், நீதியின் சூரியன் நம்மை விட்டு விலகும்போது நாம் அந்தகாரமாய் மாறுகிறோம். எனவே தேவன் நம்மை ஒருபோதும் கைவிடாதபடிக்கு அவரை நோக்கிக் கூப்பிடுவோமாக. "ஆண்டவரே, உமது பரிசுத்த ஆவியை எங்களைவிட்டு எடுத்துக்கொள்ளாதேயும்! எங்களுக்குள் வாசம்பண்ணும் உமது கிருபையை எங்களைவிட்டு விலக்காதேயும்! 'கர்த்தராகிய நான் அதைக் காப்பாற்றி, நிமிஷந்தோறும் அதற்குத் தண்ணீர்பாய்ச்சி, ஒருவரும் அதைச் சேதப்படுத்தாதபடிக்கு, இரவும் பகலும் அதைக் காத்துக்கொள்வேன்' () என்று நீர் சொல்லவில்லையா? ஆண்டவரே, எல்லா இடங்களிலும் எங்களைக் காத்தருளும். நாங்கள் பள்ளத்தாக்கில் இருக்கும்போது, உமது தாழ்த்தும் கரத்திற்கு விரோதமாய் முறுமுறுக்காதபடி எங்களைக் காரும்; நாங்கள் மலையின் மேல் இருக்கும்போது, உயர்த்தப்பட்டதினாலே தலைசுற்றல் வராதபடி எங்களைக் காரும்; எங்களுடைய இச்சைகள் பலமாய் இருக்கும் வாலிப வயதில் எங்களைக் காரும்; எங்களுடைய ஞானத்தைக் குறித்து மேட்டிமை பாராட்டி, வாலிப மூடர்களைக் காட்டிலும் பெரிய மூடர்களாய் மாறிவிடக் கூடிய முதிர்வயதில் எங்களைக் காரும்; கடைசிக் கணத்தில் நாங்கள் உம்மை மறுதலித்துப் போகாதபடி நாங்கள் மரிக்கும் வேளையிலும் எங்களைக் காத்தருளும்! நாங்கள் வாழும்போதும், மரிக்கும்போதும், பிரயாசப்படும்போதும், பாடுபடும்போதும், யுத்தம் செய்யும்போதும், இளைப்பாறும்போதும், எல்லா இடங்களிலும் எங்களைக் காத்தருளும், ஏனெனில் எல்லா இடங்களிலும் எங்களுக்கு நீர் தேவை, ஓ எங்கள் தேவனே!" ஆமென்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.