"நீர் எனக்குத் தந்த மகிமையை நான் அவர்களுக்குக் கொடுத்தேன்" (). கர்த்தராகிய இயேசுவின் ஒப்பிடமுடியாத தாராள குணத்தைக் கவனித்துப் பாருங்கள், ஏனெனில் அவர் தமக்குள்ள யாவற்றையும் நமக்குத் தந்திருக்கிறார். அவருடைய சுதந்தரத்தின் பத்தில் ஒரு பகுதி தூதர்களின் உலகத்தையே மனித கற்பனைக்கு எட்டாத அளவிற்கு ஐசுவரியமுள்ளதாக்கப் போதுமானதாய் இருந்தும், தமக்குள்ள யாவற்றையும் நமக்குக் கொடுக்கும் வரை அவர் திருப்தியடையவில்லை. அவருடைய இரக்கத்தின் பந்தியின் கீழ் நம்மை அவருடைய தயவின் துணிக்கைகளைப் புசிக்க அனுமதித்திருந்தாலே அது ஆச்சரியமான கிருபையாய் இருந்திருக்கும்; ஆனால் அவர் எதையும் அரைகுறையாகச் செய்வதில்லை, அவர் நம்மைத் தம்மோடு கூட உட்கார வைத்து அந்த விருந்தில் பங்குபெறச் செய்கிறார். தன் ராஜரீகப் பொக்கிஷங்களிலிருந்து ஏதோ ஒரு சிறிய பங்கைக் கொடுத்திருந்தாலே, நாம் என்றென்றைக்குமாய் அவரை நேசிப்பதற்குக் காரணம் இருந்திருக்கும்; ஆனால் இல்லை, அவர் தன் மணவாட்டியைத் தப்பாமல் தமக்கு இணையாக ஐசுவரியமுள்ளவளாக்க விரும்புகிறார், அவளுக்குப் பங்கில்லாத எந்த ஒரு மகிமையோ கிருபையோ அவரிடம் இருக்க அவர் விரும்புவதில்லை. நாம் தம்மோடு கூட உடன் சுதந்தரவாளிகளாய் இருக்கும்படிக்கு, நமக்கு இணையான சுதந்தரம் இருக்கும்படிக்கு அதற்குக் குறைந்த எதைக் கொண்டும் அவர் திருப்தியடையவில்லை. அவர் தன் சுதந்தரம் முழுவதையும் சபையின் பொக்கிஷங்களுக்குள் ஊற்றி, மீட்டெடுக்கப்பட்டவர்களோடு எல்லாவற்றையும் பொதுவாகக் கொண்டிருக்கிறார். அவருடைய வீட்டில் உள்ள எந்த ஒரு அறையின் திறவுகோலையும் அவர் தன் ஜனங்களுக்குக் கொடாமல் மறைத்து வைப்பதில்லை. தமக்குள்ள யாவற்றையும் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொள்ள அவர் அவர்களுக்குப் பூரண விடுதலை தருகிறார்; அவர்கள் அவருடைய பொக்கிஷங்களைத் தாராளமாய்ப் பயன்படுத்துவதையும், தங்களால் இயன்ற அளவு அவைகளைச் சுமந்து செல்வதையும் அவர் நேசிக்கிறார். அவருடைய சகல பரிபூரணத்தின் எல்லையற்ற நிறைவு, விசுவாசி சுவாசிக்கும் காற்றைப் போல அவனுக்குச் சிலாக்கியமானதாய் இருக்கிறது. கிறிஸ்து விசுவாசியின் உதட்டருகே தன் அன்பின் மற்றும் கிருபையின் கிண்ணத்தை வைத்திருக்கிறார், அதை என்றென்றைக்குமாய் குடிக்கும்படி கட்டளையிட்டிருக்கிறார்; அவனால் அதை வடிக்கக் கூடுமானால் அதை வடிக்க அவனுக்குச் சம்மதமே, அவனால் அதை வற்ற வைக்க முடியாது என்பதால், அவன் அதை மகா மிகுதியாய்க் குடிக்கும்படி கட்டளையிடப்பட்டிருக்கிறான், ஏனெனில் அது முற்றிலும் அவனுடையதே. இதைவிட உண்மையான ஐக்கியத்தின் அத்தாட்சியைப் பரலோகமோ அல்லது பூமியோ வேறு எப்படிக் காண்பிக்க முடியும்?
"நான் சிங்காசனத்திற்கு முன்பாக நிற்கும்போது என்னுடையதல்லாத அழகிய வஸ்திரத்தைத் தரித்தவனாய்; நீர் இருக்கிறவண்ணமாகவே உம்மைத் தரிசிக்கும்போது, பாவமில்லாத இருதயத்தோடு உம்மை நேசிக்கும்போது; அப்போதுதான், ஆண்டவரே, நான் முழுமையாக அறிவேன்— அப்போது வரை அல்ல—நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன் என்று."
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.