JUN 30 EVENING

எரேமியா 32:17

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.

எரேமியா 32:17

ஆ, கர்த்தராகிய ஆண்டவரே, இதோ, தேவரீர் உம்முடைய மகாபலத்தினாலும், நீட்டப்பட்ட உம்முடைய புயத்தினாலும், வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக் கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை.
Kirubai Sathiyam logo
கிருபை சத்தியம்
Your browser does not support audio playback. Download the file here.

"ஆ, கர்த்தராகிய ஆண்டவரே! இதோ, நீர் உமது மகா பலத்தினாலும் ஓங்கிய புயத்தினாலும் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர்; உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை" (). கல்தேயர் எருசலேமைச் சூழ்ந்து நெருக்கிய, பட்டயமும், பஞ்சமும், கொள்ளைநோயும் தேசத்தைப் பாழாக்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில், எரேமியா ஒரு நிலத்தை விலைக்கிரயமாய் வாங்கி, அதனுடைய சுதந்தரப் பத்திரத்தைச் சட்டப்பூர்வமாய் முத்திரையிட்டுச் சாட்சிகள் வைக்க வேண்டும் என்று தேவனால் கட்டளையிடப்பட்டார். புத்தியுள்ள ஒரு மனிதன் செய்வதற்கு இது மிகவும் விசித்திரமான ஒரு வியாபாரமாய் இருந்தது. விவேகம் அதை நியாயப்படுத்த முடியாது, ஏனெனில் விலைக்கிரயமாய் வாங்குபவன் அதன் சுதந்தரத்தை ஒருபோதும் அநுபவிக்கக் கூடிய சாத்தியக்கூறுகள் ஏதும் அங்கிருக்கவில்லை. ஆனால் தன் தேவன் தனக்குக் கட்டளையிட்டார் என்பது மாத்திரமே எரேமியாவுக்குப் போதுமானதாய் இருந்தது, ஏனெனில் தேவன் தமது பிள்ளைகள் யாவராலும் நீதிபரர் என்று விளங்குவார் என்பதை அவர் நன்றாய் அறிந்திருந்தார். அவர் இவ்விதமாய் தர்க்கம் செய்தார்: "ஆ, கர்த்தராகிய ஆண்டவரே! இந்த நிலப்பகுதியை எனக்குப் பிரயோஜனமுள்ளதாக்க உம்மாலே கூடும்; இந்த ஒடுக்கிறவர்களிடமிருந்து இந்தத் தேசத்தை விடுவிக்க உம்மாலே கூடும்; நான் விலைக்கிரயமாய் வாங்கின இந்தச் சுதந்தரத்தில் என் திராட்சச்செடியின் கீழும் என் அத்திமரத்தின் கீழும் என்னை இன்னும் உட்கார வைக்க உம்மாலே கூடும்; ஏனெனில் நீர் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினீர், உம்மாலே செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை." இது பூர்வகால பரிசுத்தவான்களுக்கு உன்னதமான மகத்துவத்தைத் தந்தது, லௌகீக அறிவு ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும் காரியங்களையும் தேவனுடைய கட்டளையினாலே செய்ய அவர்கள் துணிந்தார்கள். வறண்ட நிலத்தில் ஒரு பேழையைக் கட்ட வேண்டிய நோவாவாக இருந்தாலும் சரி (ஆதி 6), தன் ஒரே குமாரனைப் பலியிட வேண்டிய ஆபிரகாமாக இருந்தாலும் சரி (ஆதி 22), எகிப்தின் பொக்கிஷங்களை அசட்டை செய்ய வேண்டிய மோசேயாக இருந்தாலும் சரி (எபி 11), அல்லது வவௌவேறு ஆயுதங்களைப் பயன்படுத்தாமல் ஆட்டுக்கடாக்களின் கொம்புகளின் சத்தத்தை மாத்திரம் கொண்டு ஏழு நாட்கள் எரிகோவைச் சூழ்ந்து வர வேண்டிய யோசுவாவாக இருந்தாலும் சரி (யோசுவா 6), அவர்கள் யாவரும் லௌகீக அறிவின் ஏவுதல்களுக்கு மாறாக, தேவனுடைய கட்டளையின்படியே கிரியை செய்தார்கள்; கர்த்தரும் அவர்களுடைய கீழ்ப்படிதலுள்ள விசுவாசத்தின் விளைவாக அவர்களுக்கு மகா ஐசுவரியமான பலனை அளித்தார். இந்தத் தற்காலத்து மார்க்கத்திலும் அத்தகைய பராக்கிரமமுள்ள விசுவாசத்தின் உன்னதமான ஊற்றுதல் இன்னும் அதிகமாய் இருக்குமானால் நலமாயிருக்கும்! தேவனுடைய வெறும் வாக்குத்தத்தத்தின் மேல் மாத்திரம் நாம் இன்னும் அதிகமாய் துணியக் கூடுமானால், நாம் இதுவரை அந்நியர்களாய் இருக்கும் அற்புதங்களின் உலகத்திற்குள் பிரவேசிப்போம். எரேமியா கொண்டிருந்த நம்பிக்கையின் இடம் நம்முடையதாகட்டும்—வானத்தையும் பூமியையும் உண்டாக்கின தேவனால் செய்யக்கூடாத அதிசயமான காரியம் ஒன்றுமில்லை. ஆமென்.

சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.