"அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால்" (). அவர் ஒளியிலிருக்கிறார்! நாம் எப்போதாவது இதை அடைய முடியுமா? நாம் எப்போதாவது நாம் "எங்கள் பிதா" என்று அழைக்கிறவரும், "தேவன் ஒளியாய் இருக்கிறார், அவரில் இருளே இல்லை" என்று எழுதப்பட்டிருக்கிறவருமான அவரைப் போல வெளிச்சத்தில் தெளிவாக நடக்க முடியுமா? நிச்சயமாகவே, இதுவே நமக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள மாதிரியாகும், ஏனெனில் இரட்சகரே, "பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சர்க்குணராயிருக்கிறதுபோல, நீங்களும் பூரண சர்க்குணராயிருக்கக்கடவீர்கள்" என்றார் (); நம்மால் தேவனுடைய பூரணத்தோடு ஒருபோதும் போட்டியிட முடியாது என்று நாம் உணரலாம் என்றாலும், நாம் அதை நோக்கிப் பிரயாசப்பட வேண்டும், அதை அடையும் வரை திருப்தியடையக் கூடாது. ஒரு இளம் கலைஞர் தன் ஆரம்பத் தூரிகையைப் பற்றிக் கொண்டு, ரபேல் (Raphael) அல்லது மைக்கேல் ஏஞ்சலோவுக்கு (Michael Angelo) இணையாக வர முடியும் என்று அரிதாகவே எதிர்பார்க்கலாம், என்றாலும் அவன் தன் மனதிற்கு முன்பாக ஒரு உன்னதமான இலட்சியத்தைக் கொண்டிராவிட்டால், அவன் மகா அற்பமான மற்றும் சாதாரணமான ஒன்றையே அடைவான். ஆனால் கிறிஸ்தவன் தேவனைப் போல வெளிச்சத்தில் நடக்க வேண்டும் என்ற வெளிப்பாட்டின் பொருள் என்ன? அது அளவைக் குறிக்காமல், ஒத்த தன்மையைக் குறிக்கிறது என்று நாம் கருதுகிறோம். அளவின் அடிப்படையில் நம்மால் அங்கே இருக்க முடியாது என்றாலும், நாம் மகா உண்மையாக, மனப்பூர்வமாக, நேர்மையாக, கபடமாய் இல்லாமல் அதே வெளிச்சத்தில் இருக்கிறோம். என்னால் சூரியனுக்குள் வாசம் பண்ண முடியாது, அது என் குடியிருப்புக்குப் பிரகாசமானது, ஆனால் என்னால் சூரியனின் வெளிச்சத்தில் நடக்க முடியும்; அப்படியே, எல்லையற்ற நன்மைகளான தேவனாய் இருக்கிற யெகோவாவுக்கு இயற்கையாகவே உரிய அந்தத் தூய்மையின் மற்றும் சத்தியத்தின் பூரணத்தை என்னால் அடைய முடியாது என்றாலும், நான் கர்த்தரை எப்போதுமே எனக்கு முன்பாக வைத்து, உள்ளுறையும் ஆவியானவரின் உதவியோடு அவருடைய சாயலுக்கு ஒத்திருக்கப் பிரயாசப்பட முடியும். பிரசித்தி பெற்ற அந்தப் பழைய வர்ணனையாளர் ஜான் ட்ராப் (John Traop) கூறுகிறார், "தரத்தின் அடிப்படையில் நாம் தேவன் ஒளியிலிருக்கிறது போல ஒளியில் இருக்கலாம், ஆனால் சமத்துவத்தின் அடிப்படையில் அல்ல." தேவனுடைய பரிசுத்தத்திலும் தூய்மையிலும் அவருக்குச் சமமாக நாம் யோர்தானைக் கடந்து உன்னதமானவரின் பூரணத்திற்குள் பிரவேசிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்றாலும், நாம் அதே வெளிச்சத்தைப் பெற்றிருக்க வேண்டும், தேவன் செய்வது போலவே நாமும் அதைப் பெற்று அதில் நடக்க வேண்டும். பரிசுத்த ஐக்கியமும் பூரண சுத்திகரிப்பும் ஒளியில் நடப்பதோடு இணைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அதில் கவனியுங்கள்.
சார்ல்ஸ் ஸ்பர்ஜனின் காலை மற்றும் மாலை தியானங்கள்.